உனக்குள் நானும்
எனக்குள் நீயும்
எப்போது குடிகொண்டோம்..
கேட்டுக் கொண்டதில்லை..
ஏதோ பேசிக்கொண்டே
சொன்னாய்..
இப்படியே போய்கொண்டிருந்தால்.
நன்றாக இருக்கும்..
நடை வண்டி வேகத்தில்
நாம் ஒன்றாய் பயணித்த பேருந்து..!
அம்மாவிற்காய் அதிசயமாய்
வந்தேன்…
கோவிலில் உன் தரிசனம்
திரும்பி பார்த்தேன்..
தூணோரம் நான் வைத்த
மிச்ச குங்குமத்தை
நெற்றியில் நீ இட்டு கொண்டிருந்தாய்..
இது போல் எத்தனையோ
சாட்சிகள் ..
உனக்குள் நான் வந்ததை
சொல்லாமல் சொன்னது..
முதலாய் பார்த்த போதே
எனக்குள் நீ வந்தாய்..
நான் மௌனம் திறந்த போது
வெடித்தாய்..
வீண் கற்பனை என்று..
தீயை மூட்டி விட்டு
குளிர் காயும் நீ
அறிவாயா..?
அமைதி இழந்த
என் இதயத்தின் அழுகையை..!
நீ வெறுத்து ஒதுங்கிய பின்னும்
மீதமிருக்கிறது உன் மீதான பிரியம்..
வேஷம் போட்டால்தானே கலைக்க?