Friday 14 December 2012

“ ராசி…!”


                                                                                        
இரவு மணி மூன்றிருக்கும்..  திடீரென விழிப்பு வந்தது  தினகருக்கு..  பக்கத்து ரூமில் அம்மாவின் விசும்பல் கேட்டுக் கொண்டிருந்தது.  மகன் எதிரில் சோகமாய் இருந்தால் அவனுக்கு வருத்தம் அதிகமாகிவிடும் என்று இரவு நேரத்தில் தனிமையில்  அழுது கொண்டிருப்பாள் என நினைத்தான். 

எதிர்பாராதது எல்லாம் கண நேரத்தில் நடந்து விடுகிறது.
“வைதேகி.. நான் பட்ட கஷ்டங்கள் என் குழந்தைகள் படக் கூடாதுடி .. எனக்கு உழைக்க தெம்பிருக்கு.. கொஞ்ச நாள் பொறுத்துக்கோ..”


“ வாரத்துல ஒரு நாள் கூட ரெஸ்ட் எடுக்காம இப்படி லீவு நாள்ல கூட எதுக்கு வெளி வேலைக்கு போறிங்க.. உடம்பை பார்த்துக்கனும்ல..” அம்மா திட்டும் போதுதான்  அப்பா அடிக்கடி அப்படி சமாதானம் சொல்வார்.

அந்த ஓயாத உழைப்பில்தான் இந்த வீடு, அக்கா கல்யாணம், அவன்  படிப்பு எல்லாமே சாதிக்க முடிந்தது. அதிகமா உழைத்து விட்டார் என்றுதான் கடவுள் ஓய்வெடுக்க சொல்லிவிட்டாரோ என்று நினைத்தான்.

  “ தினகர் வேலைக்கு போயிட்டாண்டி இனி அவன் வாழ்க்கைய அவன் நகர்த்த முடியும்னு எனக்கு நிம்மதியா இருக்கு.. ஒரு நல்ல வாழ்க்கை அமைச்சி கொடுத்திட்டா இனி என்ன இருக்கு  நாம ப்ரீயா இருக்கலாம்…” சந்தோஷமாய் சொன்னார்.

அம்மாவும், அப்பாவும் ஜாதக பொருத்தம் பார்த்து  யமுனாவை பார்த்தார்கள். “ எங்களுக்கு பிடிச்சிருக்குடா..  நல்ல குடும்பம்..  இருந்தாலும் உன் இஷ்டம்தான்..”

எனக்கும் பிடித்துதான் நிச்சயித்தோம்.   இரண்டு மாதமிருந்தது  திருமணத்திற்கு, அதற்குள்தான் இப்படி நடந்து விட்டது. காலையில் எழுந்தவர் உடம்பு என்னமோ செய்கிறது என்று சொன்னவர்தான் அடுத்த நிமிடமே சாய்ந்து விட்டார். பதறி போய் ஹாஸ்பிட்டல் அழைத்து சென்றும் காப்பாற்ற முடியவில்லை.

“ இந்த பொண்ணை நிச்சயம் பண்ண நேரம்தான் நல்லாருந்த மனுஷன் திடுக்குன்னு போய்ட்டார்.  இனி எங்கிருந்து இந்த பொண்ண கட்றது..? “

" காலடி எடுத்து வைக்கறதுக்கு முன்னயே மாமனாரை முழுங்கிட்டா.. இந்த கல்யாணம் அவ்வளவுதான்.."

ஊரின் பலவித பேச்சுக்கள் யமுனாவின் குடும்பத்தை நிலை குலைய வைத்தது. வைதேகி ஒரு சொல்லும் சொல்லவில்லை. பதினைந்து நாள் துக்கம் முடிந்ததும் வைதேகியே சம்பந்தி வீட்டாரை அழைத்து சொன்னாள்,

“ யார் எது சொன்னாலும் கவலைப்படாதீங்க..  அவரோட காலம் அவ்வளவுதான். அதுக்கு  இந்த பொண்ணு என்ன பண்ணுங்க.. இதே மாப்பிள்ளை பார்த்த பெண் வீட்டில் இப்படி நடந்தால் மருமகன் வந்த நேரம்தான் மாமனாருக்கோ, மாமியாருக்கோ இப்படி ஆயிடுச்சின்னு சொல்றதில்லை. ஆனா பெண்ணை மட்டும் ஏன் அப்படி சொல்லனும்? ஒரு பெண்ணா நான் அந்த தப்பை செய்யமாட்டேன். ஜாதக பொருத்தம் பார்த்தப்ப கூட ஜோதிடர் இப்படி ஒரு ஆபத்து வரும்னு சொல்லலையே.. இது இயற்கையா நடந்து போன விஷயம். அவர் விருப்பபட்டு பார்த்த பொண்ணு யமுனா அதனால உங்க பெண்ணே எனக்கு மருமகளா வரனும். குறிச்ச தேதியில் கல்யாணம் நிச்சயமா நடக்கும்… நீங்க ஆக வேண்டியதை பாருங்க..”

“ அம்மா என் பொண்ணு வாழ்க்கை எப்படி ஆயிடுமோன்னு தவிச்சிட்டிருந்தோம்.. இப்படி ஒரு குணவதிக்கு என் பெண்ணை மருமகளா அனுப்பறோம்னு இப்பத்தான் எங்க மனசுக்குள்ள ஒரு அமைதி.. இனிமே யமுனா உங்க பொண்ணும்மா..”
சம்பந்தி கை கூப்பி கண்ணீர் விட்டு கொண்டிருந்தார்.
*********