Thursday 30 May 2013

கலவர பூமிக்குள் காதல்....

 



  அந்திப்பொழுதுகளுக்கே ஒரு வாசம் உண்டு.  அவன் அவள் வீட்டை கடக்கும் நேரம்.. வாசல் தெளித்து கோலமிட்டு கொண்டே விழிகளால் விசாரிப்பாள்.
அவனும் அப்படியே!
இப்படியே ஒரு மாதம். இப்படியே போய்விடுமா? எப்படியும் பேச வேண்டும்..  அவனுக்குள் ஏக்கம்… மெல்ல தலைசீவும் பாவனையில் ஒரு சின்ன  ஒரு கையசைப்பு’ போய்விட்டு வருகிறேன்’..இமைகளை மூடி திறந்து சரி என்பாள்.
போதவில்லை.. பெரும் மழையிடையே மின்னல்  நொடியில் வெட்டி செல்வது போல  நிமிட பார்வைகளின் துளைப்பு போதவில்லை. நல்ல வேளையாய்  பார்வை எட்டும் தூரத்திலொரு டீ கடை.  தொண்டையும் பார்வையும் விழுங்கி கொள்ள கடை போட்டவனுக்கு  கணக்கில்லாத நன்றி சொல்லிக்கொண்டான்.  தே நீரா.. தேனீரா தெரியவில்லை  எதிரில் அவள்!  அக்கா குழந்தைக்கு அக்கறையாய் சோறூட்டி கொண்டிருந்தாள். ‘ இங்க பார்த்தியா.. பூச்சி.. அங்க பாரு காக்கா.. அங்கு.. இங்கு என்று கைகாட்டி கொண்டிருந்தாலும்  கண்கள் மட்டும்  அவனை காட்டி கொண்டிருந்தது.  பார்வைகளின் பரப்பளவு முடியவில்லை பாழாய் போன தே நீரின் கொள்ளவு முடிந்துவிட்டது. மெல்ல கடக்கிறான் அவள் வீட்டை தாண்டி,
‘ இதப்பாரு கொரங்கு… குழந்தையிடம் சத்தமாய்..’
‘அடி என் செல்ல பிசாசே.. என்னையா சொல்கிறாய்.. என்றாவது கிடைக்கும் அப்போது  இருக்கு உனக்கு’.. குறுஞ்சிரிப்பை கிள்ளி விட்டு கடக்கிறான்.
 அவள் வீட்டை கடக்கவே ஆறு முறை  தே நீர் அருந்தும் வழக்கமாய் போனது.  இரண்டொரு முறையாவது கிடைத்து விடும் ஜன்னல் வளையங்களுள் அவனை தேடும் அவள் விழிகளின் தரிசனம்..!
சந்தேகமில்லை  அவன் மனதுக்குள் அவளும் அவள் மனதுக்குள் இவனும் ஊடுருவித்தான் போயிருக்கிறார்கள்..  கேட்டு விடுவோம்.. கேட்டு விடுவோம்.. மை தொட்டு எழுதியதெல்லாம் உண்’மை’ காதலின் மேன்மை!   வாகாய் சட்டைப்பையில் தஞ்சம் கொண்டது நான்காய் மடித்த அந்த கடிதம்.
எப்படி சேர்ப்பது..?  வாயிலில்தான் நிற்கிறது வண்ண மயில்.. வந்து கொண்டிருந்தான் பொடிபையன்.. சுற்றும் முற்றும் பார்த்தான்.. எல்லோரும் எங்கே போய் தொலைந்தார்கள்..? இருக்கட்டும் அவனுக்காகத்தான் போலும்.  முகவரி, முத்திரை இடாத கடிதங்களுக்கெல்லாம் குட்டிபயல்கள்தான் தபால் காரர்கள்.  மனது இடித்தாலும் வேறுவழியில்லை… லஞ்சம்  காதலையும் விட்டு வைக்கவில்லை.  மிட்டாயை தந்து மின்னலிடம் சேர்க்க சொன்னான். .  நான்காய் மடித்த காகிதம் எட்டாய் சுருங்கி கொண்டது அவள் உள்ளங்கைகளுக்குள்… யாரேனும் பார்த்து விடும் பயம்.
இதயத்தை வடித்திருந்தான். எத்தனை முறைதான் படிப்பது.. இன்னமும் மனமில்லை கிழித்து போட.  தலையணை உறைக்குள் தஞ்சம் கொண்டது. நித்தம் கனவுகளை சுமந்து கொடுத்தது.   கால் மணியில் வருபவள் அரை மணி நேரமாய் நீராடும் அவள் அம்மாவுக்கு தெரியாது மிச்ச மணிகளை கொத்திகொண்டிருப்பது  காதல் வாசிப்பென்று..!
காதல் தேசத்தில் அவர்கள் ராஜாங்கம்! கற்பனை பிரதேசங்களில் அவர்கள் உலா. நாளும் வளர்ந்தது கனவுகளின் கோட்டை. 
யாரோ யாரோவாய் சன்னிதியில் இருவரும் எதிரெதிரே.. இறைவா சேர்த்து விடு இதயங்களை..!
காலம் கணக்கு சொல்லும்.  இடமாற்றம்  அவனுக்கு.. எதோ சொல்லி வந்திருந்தாள்.. முதன் முதலாய் சந்திக்க.. முதல் சந்திப்பே பிரிவை சொல்லவா..?  கண்களில் கர கரத்தது கண்ணீர் வார்த்தைகள். மெல்ல தேற்றினான்..  யுகம் மெய்யென்றால்  திரும்ப வருவேன் மணமுடிக்க!
யுகம் மெய்தான் வருவான்..  சாதியும் சம்பிரதாயங்களும் ஒன்று சேர்க்குமா இல்லை  ஊரும் உறவுகளும் இரண்டு படுமா..? கலவர பூமிக்குள் காதல் கலங்கித்தான் நிற்கிறது..!
 ***************************************************************************************************
( ரசித்து ரசித்து வளர்ந்த கடித காதல் இப்போது இல்லை ! யாரோ எழுதிய காதல் மொழிகள் குறுஞ்செய்திகளாகவும், மின்னஞ்சலாகவும் மாறிவிட்டது.. கால ஓட்டத்தில் காதலும் வேகமாக தோன்றி  அதே வேகத்தில் காணாமல் கொண்டிருக்கிறது. 
சங்க கால பாடல்களில் சுடுகிறார்.. கண்ணதாசன் சொன்னதையே வார்த்தை மாற்றி சொல்லியிருக்கிறார் என்றெல்லாம் கவிஞர் வைரமுத்து பற்றி விமர்சனங்கள் இருந்தாலும் தண்ணீர் தேசம் முதல் மூன்றாம் உலகப்போர் வரை  ரசித்து படிக்காமல் இருக்க முடியவில்லை.  கவிதை தொடர் ஒன்று நாமும் முயற்சிக்கலாமே என ஆவல் வந்தது.. ஆனாலும் நேரங்கள் அதற்கு இல்லை. கண்களில் ஆரம்பித்து கடிதங்களில் வளர்ந்த காதலை பற்றி ஒரு பக்கமேனும் எழுதுவோமே என்று எழுதியிருக்கிறேன்.  படிக்கிறவர்களுக்கு  கவிதையா கதையா தோணுதோ இல்லையோ  ஏதோ ரசிச்சி கிறுக்கிட்டேன்.  ஆஹா ஒருத்தர் டீ கடையில் நின்னு ஸைட் அடிச்சி லவ் லெட்டர் கொடுக்கறதை இப்படியெல்லாம்  எழுதலாமா? ஹா..ஹா..!