Saturday, 25 January 2014

தினமலர்-பெண்கள் மலர் தோழிகளின் கிராமத்து கல கல...!(பொங்கல் விழா)ஏர் நடந்தால் பார் நடக்கும் என்றார்  ஔவையார்.   நம் உயிர் வளர்க்க உதவும் பயிர்களை வளர்க்கும் விவசாயிகளை போற்ற வேண்டாமா? பெண்கள் மலர் தோழிகள் நாங்கள் இதை மறப்போமா? மண்ணின் மைந்தர்களோடு பொங்கல் விழா கொண்டாட , “கொல்லை மேடு”  என்ற கிராமத்துக்கு படையென திரண்டு விட்டோம்.    

                        ( விவசாய குடும்பங்கள்)
எப்போதோ வந்து போகும் பேருந்தை தவிர எந்த வசதியும் காணாத கிராமம். வசதிகள்தான் இல்லையே தவிர வஞ்சனை செய்யாத அன்புள்ளம் கொண்ட மக்கள். அன்பும், எளிமையுமே  ஆபரணங்களாக கொண்ட அந்த வெள்ளந்தி மனிதர்கள், நாம் பொங்கல் விழா கொண்டாட வயலுக்கு பக்கத்திலிருந்த மைதானத்திலிருந்த புல், பூண்டை சுத்தம் செய்து  வண்ணக்கோலமிட்டு வரவேற்றார்கள்.


கடவுள் வாழ்த்தை தோழியர் பாட இனிதே துவங்கியது நம் கொண்டாட்டம்...

      (பெண்கள் மலர் தோழிகள் டீம்- பெண்கள் மலரை பொறுத்தவரை ஆறு வயதானாலும் அறுபது வயதானாலும் அனைவரும் தோழிகள்தாம்..!)
                                  
 பெண்கள் இந்த மாதிரி  நிகழ்ச்சிகளுக்கு வெளியில் வரனும்.. இப்படி வெளியில் வந்தா மனசு லேசாகி அடுத்த நாள் டபுள் எனர்ஜி கிடைக்கும் பாருங்க..” என்று சொன்ன ஒரு தோழி,  இன்னிக்கு என் வீட்டுக்காரரை சமைக்க சொல்லி வந்துட்டேன்....  நாளைக்கு இந்த சந்தோஷத்தோட  நான் செய்யப்போற சமையல் வழக்கத்தை விட  அசத்தலா இருக்கும் பாருங்க என்றார். ஆமாம் அவர் சொன்னதும் உண்மைதான்.. நாள் பூராவும் வீட்டு வேலைகளிலேயே... உழன்று கிடக்கும் பெண்களுக்கு அவர்களுக்கே ஆன ஒரு நாளை ஒதுக்கினால் எப்படி சந்தோஷப்பட்டு போகிறார்கள்...!  நம் தோழியரின் ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம்  அதை நிரூபித்து காண்பித்தது.


                                          
(   தோழிகள் நாட்டுப்புற நடனத்துக்கு சந்தோஷத்துல என்னமா  விசில் அடிக்கறாங்க!)


(ஒரு ஸ்டெப்பாவது நீங்களும் என்று ரகளை பண்ணிட்டாங்க...)


பெண்கள் மலர் தோழியர் விழாவிற்கு வந்தே ஆக வேண்டும்  நடக்க இயலாத சூழலிலும் ஊன்று கோல் உதவியுடன் வந்திருந்த  தோழி ஒருவர் ஊனம் மனதில்தான் இருக்க கூடாது என்ற தன்னம்பிக்கை வார்த்தைகளை விதைத்து எல்லோர் மனதையும் நெகிழசெய்தார்.

மழை இல்லாம விவசாயம் குறைஞ்சிட்டு வருது.. பள்ளிக்கூட பிள்ளைங்களை எல்லாம் தீப்பெட்டி தொழிலுக்கு அனுப்பிடறாங்க.. என்ற வேதனைப்பட்ட வசந்தா என்ற விவசாய பெண்மணி “ தீப்பெட்டி ...எரியும் தீப்பெட்டி...” என்ற இட்டுக்கட்டிய பாடலில் தங்கள் குழந்தைகளின் கல்வி ஆசை சின்ன தீப்பெட்டிக்குள்ளேயே அடங்கி போயிடுது... எனும் கருத்தை சொல்லியது நம் மனதை என்னவோ செய்தது...

 விவிசாயபெண்களின் இறுக்கம் குறைக்க மகிழ்விக்க... உடனே ஒரு திருமணத்திற்கு ஏற்பாடு செய்தோம்.


 மணப்பெண் ஐஸ்வர்யாராயாக வலைப்பதிவு எழுதும்  நம் தோழி ஆரணி பவித்ரா நந்த குமார். அவரை பெண்பார்க்க டாக்டர், எஞ்சினியர், விவசாயி மூன்று மாப்பிள்ளைகள் வருகிறார்கள். டாக்டர் மாப்பிள்ளையின் அம்மா , அவங்க பையனை எல்.கே.ஜியிலிருந்து படிக்க வைத்த செலவை சொல்லி ஒரு இரு நூறு பவுனும், பிம்.எம்.டபிள்யூ காரும் வாங்கி தந்தால் போதும் என்றார். எஞ்சினியரின் அம்மா, தன் மகன் வாரத்துல மூணு நாளைக்கு நைட் ஷிப்ட் போவான்... ரெண்டு நாள் வெளியூர் போவான் அப்ப உங்க பொண்ணு சும்மா மூஞ்சை தூக்கி வச்சிக்க கூடாது...  நல்லா சமைக்க தெரியனும்... நூறு பவுன் போட்டா போதும் ஆடி சேல்ல ஏதோ ஒரு கார் வாங்கிகொடுத்திடறதா இருந்தா தட்டை மாத்திக்கலாம் என்றார். அடுத்து வந்தார் பி.எஸ்ஸி அக்ரி படித்த தங்கமான விவசாயி மாப்பிள்ளை... அவரின் அம்மாவோ பொண்ணு ஐஸ்வர்யா ராய் கணக்கா இருக்கா... அவளுக்கு எதுக்கு நகையும், நட்டும் ? எங்க வீட்டு பொண்ணுக்கு   நாங்களே வாங்கி போட்டு அழகு பார்ப்போம்.. நீங்க பொண்ணை மட்டும் கட்டிக்கொடுத்தா போதும் என்றார். விவசாயி மாப்பிள்ளை பெண்ணை பார்த்து “ எனக்கு உங்களை ரொம்ப புடிச்சிருக்குங்க...உங்களை காலம்பூரா கண்கலங்காம பார்த்துக்குவேன்னு நினைச்சிங்கன்னா உங்க சம்மதத்தை சொல்லுங்க..” என்று சொல்லிவிட்டு  கிளம்புகிறார்கள்.
இப்ப கல்யாணப்பொண்ணின் அப்பாவும், அம்மாவும் டாக்டர் மாப்பிள்ளையா, இஞ்சினியர் மாப்பிள்ளையா யாரை செலக்ட் பண்றதுன்னு சண்டை போட்டுக்கிட்டு இருக்காங்க... அப்ப கல்யாண பொண்ணு “ அப்பா.. ஒரு டாக்டர் மாப்பிள்ளை மிஞ்சி போனா நோய்க்கு மருந்து கொடுப்பாரு... எஞ்சினியர் மாப்பிள்ளை எப்பவும் மிஷினாவே வாழ்ந்துகிட்டு இருப்பாரு..  அவங்க ரெண்டு பேருக்கு மட்டுமில்ல நம்ம எல்லோருக்கும்  சாப்பாடு கொடுக்கிற உத்தமமான வேலை செய்ற அந்த விவசாயியைத்தான்பா கட்டிக்க விரும்பறேன்..  அவங்க சேத்துல காலை வைக்கிறதால்தான் நாம சோத்துல கை வைக்க முடியுது. ரெண்டு மாப்பிள்ளையை விட உயர்வா இருக்கறவரு அவர்தாம்பா... அதனால் பொங்கலுக்குள்ள எங்க கல்யாணத்தை பேசி முடிச்சிடுங்கப்பா....” என்று அழுத்தமாக சொல்லிவிட  கல்யாணம் நிச்சயமாகிவிட்டது.  “ நூறு வருஷம் இந்த மாப்பிள்ளையும் பொண்ணும்தான் பேரு விளங்க வாழனும்...” என்று தோழியர் பாட்டு பாடி வாழ்த்த விவசாயி மாப்பிள்ளை பெருமையுடன் ஐஸ்வர்யாராயை கைபிடிக்கிறார். டும்... டும்... ஸ் .. அப்பா  கலாட்டாவோட நடந்தது இந்த கல்யாணம். மொத்தத்தில் அன்னிக்கு  எல்லோரும் சிரிச்சுகிட்டே இருந்தோம்....

 (மைக் யாருக்கும் தர முடியாது.. அப்படியே பேசனும் ஆமா..)( இந்த  நாடகத்துல  நான் சொல்லிக்கொடுக்காத வசனம்லாம் சேர்த்துக்கிட்டு  ரகளை பண்ணி சிரிக்க வச்சிட்டிருந்தாங்க இரண்டு பேர்... பெண் பார்க்கும் இடத்தில் மாப்பிள்ளை வீட்டார் வெறும் தண்ணி மட்டும் கொடுங்க என்று கேட்டால் இவங்க “ ஆப்பா? இல்ல புல்லா என்று கேட்டு கலாய்த்தார்கள். பெண்ணை புடிச்சிருக்கா என்று கேட்டால் ஓடி போய் கெட்டியாக பிடிச்சிகிட்டு ம்.. புடிச்சிருக்கு புடிச்சிருக்கு என்று ரகளைதான் போங்க! )
 

 விளையாட்டு இல்லாமல் திருவிழாவா..... நம்ம பராம்பரிய விளையாட்டான உறியடி விளையாட்டை வச்சி அசத்திட்டோம்ல...!  கம்பை  சுத்திக்கிட்டு உறியடிக்க வீரமா எறங்கினாங்க நம்ம தோழிகளும், விவசாய பெண்மணிகளும்...


வந்திருந்த விவசாய பெண்மணிகளுக்கு நினைவு பரிசு கொடுத்ததோடு மட்டுமில்லாம, நமக்கு உணவு தர்ற அவங்களுக்கு சுட சுட வெஜிடேபிள் ரைஸ், காரக்குழம்பு, பொங்கல் , ஸ்வீட் என்று பரிமாறி  நிகழ்ச்சியை முடித்து கிளம்பிய போது ஒரு ஊர் திருவிழா நடந்தது போல் கிராமம் அடையாளம் கொண்டிருந்தது.
(  நான் ஏற்பாடு செய்த இந்த விழா பற்றிய தொகுப்பு, படங்கள் இன்றைய தினமலர்-பெண்கள் மலர்ல வந்திருக்கு... கிராமத்து கல கலப்பை படித்த சேலம், ஈரோடு, திருச்சி பெண்கள் மலர் தோழிகள் அடுத்த வருஷம் நாங்களும் வேலூர் கோட்டைக்கு படையெடுத்து வருவோம்ல... என்றார்கள்.. சந்தோஷம்!)
 நன்றி- பெண்கள் மலர்!