Monday, 5 November 2012

தீபாவளி என்றாலே புதுத்துணி, பட்டாசு, பலகாரம் என்பதுதான்.

தீபாவளி என்றாலே  புதுத்துணி, பட்டாசு, பலகாரம் என்பதுதான்.




ஜவுளிக் கடல்களில் மக்கள் கூட்டம் அலை மோதும். குடும்ப தலைவருக்குதான் இப்ப டென்ஷன்.. பின்ன டூ வீலர்ல முன்னாடி பசங்களையும், பின்னாடி வொய்ப்பையும் அடுக்கி கிட்டு கடை கடையா ஏறி இறங்கனும். ஒரு கடையிலேயே  செலக் ஷன் முடியாது.  இந்த கடையில் நல்லால்லே  வேற போகலாம் வாங்கன்னு ஒவ்வொரு கடையா  ஏறி இறங்கி கடைசியிலே முதல்ல வந்த கடைக்கே நுழைவாங்க.. இங்கேயே பரவாயில்லைன்னு.. என்ன பண்றது  போய்த்தான் ஆகனும். அப்புறம் என்ன பக்கத்துல நீங்க நிக்கறதையே அவங்க மறந்துடுவாங்க. பாவம் நீங்க எவ்வளவு நேரம்தான் நிப்பீங்க இல்ல உட்காருவீங்க.. எப்படியும் பல மணி நேரமாகும்.. அதுக்குள்ள நீங்க வெளியில் போய் நின்னு ப்ரெண்ட் கூட போன்ல பேசுவீங்க… அதுக்கப்பறம்.. என்ன பண்றதுன்னு தெரியாம முழிப்பிங்க.. ரோட்ல சும்மா நின்னாக் கூட சும்மா விடுவாங்களா..  அண்ணா எதுனா கொடுங்கன்னா.. பிச்சைக்காரங்க வந்து வந்து பக்கத்துல நிப்பாங்க( அங்க உள்ள போன பேமிலி மெம்பர்ஸ் பில்லை செட்டில் பண்ணும் போது ஒரு வழியா நீங்களும்….)
ஸார்.. இரண்டு முழம் பத்து ரூபாதான்  வாங்கிக்கங்க ன்னு  மல்லிகை பூவை எடுத்து கிட்டு  மூணு நாலு பேர் மொய்ப்பாங்க.. ( நிக்க விடமாட்டேன்றாங்களேன்னு போனா போகுதுன்னு ஒரு பத்து ரூபாய்க்கு வாங்கிடுவீங்க.. அதுல ஒரு பூவை கிள்ளி வொய்ப் உங்க காதில வைக்கறதுக்கும் உதவும்..?)

வாட்ச்சை திருப்பி திருப்பி எவ்வளவு நேரம்தான் பார்ப்பிங்க.. நேரம் போகல இல்ல..? சரி ரோட்ல  எத்தனை பஸ், ஆட்டோ போகுதுன்னு எண்ணுங்க.. ரோட்ல போற வர்றங்களை வாட்ச் பண்ணுங்க.. அப்ப அப்பதான் அழகா ஒரு பொண்ணு ரோடை க்ராஸ் பண்ணி வர்றதை பார்க்கலாம்னு நினைக்கிறப்ப… உங்க பாக்கெட்ல மொபைல் அதிரும்,
“ என்னங்க எங்க போய் தொலைஞ்சிங்க..? நாங்க எல்லாம் எடுத்து முடிச்சி எவ்வளவு நேரமா தேடிக்கிட்டிருக்கோம்.. வொய்ப் அர்ச்சனையை கேட்டுட்டு கேஷ் கவுண்டருக்கு ஓட்டம். ஒரு வழியா ஷாப்பிங் பையை சுமந்துகிட்டு வெளிய வரும் போது பசங்க கேட்கும், “ மம்மி.. டாடிக்கு இன்னும் எடுக்கலையேன்னு..?  ம்..  இப்பவே எவ்வளவு செலவாயிடுச்சி.. போன வருஷம் எடுத்ததே வீட்ல இன்னும் தைக்காம கிடக்குது.. என்னங்க அத தைச்சிக்கங்க..
உடனே தைச்சுடுங்க இல்லைன்னா அடுத்த வருஷமும்  ரீபிட் ஆகும்.

( உங்களுக்கு பழைய துணிங்கிறது ஏழைகளுக்கு கிழியாத துணி..!  நீங்க பயன் படுத்தாத துணியை ஆதரவற்ற இல்லங்களுக்கு கொடுங்க)

   

பட்டாசு



தீபாவளி பண்டிகையின் போது எச்சரிக்கையுடன் பட்டாசுகளை வெடிக்க வேண்டும். குறிப்பாக பெரியோர்கள் மேற்பார்வையில் குழந்தைகள் பட்டாசு வெடிக்க வேண்டும்.நீண்ட ஊதுவத்தி வைத்து பட்டாசு வெடிப்பது நல்லது. பட்டாசு வெடிக்கும் போது நைலான், சில்க் துணிகள் அணிவதை தவிர்க்க வேண்டும். ஒரு போதும் வெடிக்காத பட்டாசுகளை மீண்டும் கையில் எடுக்கக்கூடாது. எச்சரிக்கையுடன் பட்டாசு வெடித்து, தீபாவளியை மகிழ்ச்சியாக கொண்டாலாம் .

( அக்கம் பக்கம் பிறந்த குழந்தைகள், முதியோர், உடல் நலமில்லாதவர்கள் இருந்தால் அவர்களுக்கு தொல்லை தரும்படி பெரிய பெரிய வெடிக்களை வெடிக்காதீர்கள் உங்கள் சந்தோஷம் அடுத்தவரை துன்புறுத்தாமல் பார்த்து கொள்ளுங்கள்)

பலகாரம்:



பண்டிகை நாட்களில் அன்பை பரிமாறி கொள்ள ஒருவருக்கொருவர் பலகாரங்கள் கொடுத்து உபசரிக்கிறோம்.  நம்ம குடும்ப தலைவிகள் பிஸியா இருப்பாங்க. வீட்ல வாண்டுங்க தொல்லையை சமாளிச்சிட்டு பக்கத்து வீட்டு பாட்டியோடு பலகாரம் செய்ய அடுப்பை பத்த வைப்பாங்க. இந்த அதிரசம் செய்ய மூணு பேராவது வேணும். அப்ப பசங்க சல சலன்னு பேசிட்டு இருந்தா பாட்டி சத்தம் போடும்..." சும்மா இருங்க பேசிகிட்டே சுட்டா எண்ணெய் சட்டி எண்ணை இழுத்துரும்னு சொல்லும்.  என்னோட சின்ன வயசில ஓஹோ அப்படிதான் போலன்னு நம்பியிருக்கேன். அப்புறமா அறிவு கொஞ்சம் டெவலப் ஆன பிறகு  பேசிகிட்டே செஞ்சா கவனம் சிதறிடும் அப்ப பலகாரத்தை  கடாயிலிருந்து எடுக்க லேட்டானா எண்ணையை உறிஞ்சுடும்னு காரணத்துக்காக  சொல்லி வச்சதை பாட்டிங்க இப்படி ஃபாலோ பண்ணுதுன்னு நினைக்கிறேன். சரியா?


தீபாவளி அன்னிக்கு இட்லி, தோசை , பூரியோடு இத்தனையும் சாப்பிட்டா என்ன ஆகிறது..?  நிச்சயம் அஜீரணம் ஆகும். தீபாவளி பலகாரங்களோடு கஷாயமும் சேர்த்து செய்ய வேண்டியதுதான்.

(தீபாவளி பலகாரங்கள்  நம் வட்டத்துக்குள்ளேயே கொடுக்கல்- வாங்கல் இருக்கும் போது நிறைய வீட்டில் அக்கம் பக்கம் தருவது நிறைய சேர்ந்து ஒன்று வேலைக்காரிக்கு தந்து விடுகிறார்கள் அல்லது அப்படியே வீண் செய்து குப்பையில் போடுகிறார்கள். இதை தவிர்த்து  தீபாவளி இல்லாத வேற்று மதத்தினருக்கு கொடுக்கும் போது  பயனாக இருக்கும்.)

Tuesday, 30 October 2012

எறும்பு கற்று தந்த பாடம்

எறும்பு கற்று தந்த பாடம்












வீட்டை சுற்றி வெளியில் தூய்மை செய்து கொண்டிருந்தேன்..  சுவர் ஓரமாக எறும்புகள் வரிசையாக போய் கொண்டிருந்தது. கண்ணுக்கு புலப்படாத அளவு அதற்கு தேவையான தீனியை யானையை சுமப்பது போல பிரயத்தனப்பட்டு சென்று கொண்டிருந்தது. பார்ப்பதற்கு ஒரு தொழிற்சாலையில் பொருட்களை லோடு ஏற்ற பணியாளர்கள் வரிசையாக தலையில் சுமந்து செல்லுவதை போல இருந்தது. சுமையை கூட சுறு சுறுப்பாய் சுமந்து கொண்டிருந்த அந்த கூட்டத்தை கலைக்க மனமில்லாமல் பார்த்து கொண்டிருந்தேன்.. ஓரறிவு உள்ள  உயிர்க்கு கூட எத்தனை விழிப்புணர்வு மழைக்கு முன் தன் உணவை சேகரித்து பாதுக்காப்பான வழி தேடுகிறதே..?  ஆறறிவு உள்ள   நாம் மழையை சேகரிக்க விழிப்பாய் இருக்கிறோமா  என்று கேள்வி எழுந்தது.
அரசு ஒரு சட்டம் கொண்டு வந்தது. ஒவ்வொருவரும் கட்டாயமாக மழைநீர் சேமிப்புக்கான எற்பாடுகளைச் செய்ய வேண்டும். புது வீடுகள் கட்ட முனைவோர் அவர் செய்யப் போகும் மழை நீர் சேமிப்பிற்கான ஏற்பாடுகள் என்ன என்பதை வரைபடத்தில் காட்டினால்தான் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அனுமதி அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. 
அந்த உத்தரவுகள் வந்த உடன் அவசர அவசரமாக பொது மக்கள் மண்ணில் ஒரு சிறு பள்ளம் தோண்டி அதற்குள் நான்கு கற்களைப் போட்டு வீட்டுக் கூரைகளிலிருந்து வரும் மழை நீர்க் குழாய்களை அதற்குள் விட்டு மூடிவிட்டார்கள். ஒரு நல்ல மழை பெய்த உடன் மூடியிருந்த பள்ளத்தைத் திறந்து கொண்டு மீண்டும் மழை நீர் சாக்கடைகளைத்தான் சென்றடைந்தது.
 இப்போது மழை நீர் சேகரிப்பை எத்தனை சதவிகித மக்கள் ஒழுங்காகக் கடைபிடிக்கிறார்கள்?   சட்டம் வரும்போது பரபரப்பாக சில நாட்கள் கடைபிடிக்கப் படுகிறது.   நாளாக.. நாளாக மக்களும், அதிகாரிகளும் கண்டும் காணாமல் விட்டு விடுகின்றனர்.   ‘நீரின்றி அமையாது உலகு ‘ என்று தெரிந்து கொண்டும் தவறு செய்கிறோம். இல்லாத போது தண்ணீருக்காக போராட்டம் நடத்தும் மக்கள் மழை வரும்போது நீரை சேகரிக்க விழிப்பாக இருப்பதில்லையே..? ஏற்கனவே இருளில் மூழ்கி கொண்டிருக்கிறோம்.  நீரும் இல்லாமல்  போனால்   நாம் வசிக்கும் இடங்கள் பாலைவனமாக மாறிவிடும்.  இயற்கை அன்னை இன்னமும் கருணை காட்டுவதால்தான் பருவ மழை எட்டிப் பார்க்கிறது.  நீரின் அவசியத்தை புரிந்து இனியாவது மழை நீர் சேகரிப்பை அவசியமாய் கடைபிடிப்போம்..!


Monday, 29 October 2012

கண்ணதாசன் நம்பிக்கை:

படித்தது :
கண்ணதாசன்  நம்பிக்கை:

ஆண்டவன் மீதும், சாஸ்திரங்கள் மீதும் நாம் வைக்கும் நம்பிக்கையே மூட நம்பிக்கை என்று சொல்லும் பகுத்தறிவாளர்கள் உண்டு.
அவர்களுடைய நம்பிக்கைகள் எல்லாம் கெட்டிக்காரத்தனம் என்றும் நம்முடைய நம்பிக்கைகள் மட்டும் மூடத்தனம் என்று அவர்கள் நினைக்கிறார்கள்.
நம்பிக்கையில் மூட நம்பிக்கை, குருட்டு நம்பிக்கை, கெட்டிக்கார நம்பிக்கை எதுவும் கிடையாது.
மகன் கல்லூரிக்கு கட்டப் போகிறான் என்று நம்பித்தான் தகப்பன் பணம் அனுப்புகிறான். அவன் அதை எப்படியும் செலவழிக்கலாம்.
அழகான ஹோட்டல்..  அருமையான சாப்பாடு ஆரோக்கியமான முறையில் சமைக்கப் பட்டிருக்கும் என்று நம்பித்தான் சாப்பிடுகிறோம். ஆனால் சமையற் கட்டில் என்ன நடந்திருக்குமோ யார் கண்டது?
‘ இவர்   நமது ஒழுங்கான பிரதி நிதியாக இருப்பார் என்று நம்பித்தான் மக்கள் ஒருவருக்கு ஓட்டளிக்கிறார்கள். அவர் எப்படியெப்படியோ மாறிவிடுகிறார்.
நம்பிக்கை வெற்றி பெறும் போது மட்டுமே கெட்டிக்காரத்தனம் போல் காட்சியளிக்கிறது. மற்ற நேரங்களில் அனைத்திலும் அது முட்டாள்தனம்தான்.
ஆண்டவனை நம்புவதிலும் அதே நிலைதான்.
அது தோல்வியுற்றால் மூடத்தனம். வெற்றி பெற்றால் கெட்டிக்காரத் தனம்.
தெய்வ நம்பிக்கையை மூட நம்பிக்கை என்று சொல்வதை பற்றி வருத்தமில்லை. மூடன் என்று சொல்லப்படுபவர்களும், அறிவாளி என்று சொல்லப் படுபவர்களும்  நம்மிடம்தான் வரப் போகிறார்கள் என்ற நம்பிக்கை  தெய்வத்துக்கு இருக்கிறதே..!  யார் என்ன செய்ய..?

Sunday, 28 October 2012

போர்க்களமாயினும் போராடு..!


போர்க்களமாயினும் போராடு..!
துன்பங்களைக் கண்டு அஞ்சிஓடாமல் அதனையே ஏற்று, தம்வசப்படுத்தி வாழ்ந்தவர்கள், அதன் பலனாக மாபெரும் சாதனைகளைப் படைத்திருக்கிறார்கள்.

  

 43 வயதில் நிரந்தரமாகக் கண்பார்வையிழந்த ஆங்கிலக்கவி மில்டன் அதன் பிறகே ஆங்கிலத்தின் மிகச்சிறந்த காவியமான இழந்த சொர்க்கத்தை எழுதினார்.


 விபத்தில் ஒரு காலையே இழந்த இளம்பெண் சுதாசந்திரன் அதன்பிறகே செயற்கைக்காலைப் பொருத்திக்கொண்டு சிறந்த நாட்டியக்கலைஞராகவும், நடிகையாகவும் ஓளிவீசிக்கொண்டிருக்கிறார்.
  

தூக்குமேடை ஏறும் முன்நாளில் கூடப் பதற்றப்படாமல், கடைசியாகத் தனக்குப்பிடித்த குலோப் ஜாமனைச் சுவைத்துவிட்டு, லெனினின் 'அரசும் புரட்சியும்' என்ற நூலைப் படித்துகொண்டு ஒவ்வொரு கணத்தையும் அர்த்தமுள்ளதாக்கியவர் விடுதலை வீரர் பகத் சிங்.


 கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, அவர் இறந்துவிட்டதாக அடிக்கடி வசந்தி பரவத்தொடங்கியதை அறிந்து, தம் மனைவியிடம், ''மதுரம்! நான் சாகலேன்னா இவங்க விடமாட்டாங்க போல இருக்கே. இவங்க திருப்திக்காவது ஒருதரம் நான் அவசியம் சாகணும் போலிருக்கிறதே''என்று அந்த இறுதிநாள்களிலும் நகைச்சுவையைத் தவழவிட்டார்.

  பிரிட்டனில்  21 வயது இளைஞர் ஒருவர் , முற்றிலும் அத்தனை உறுப்புகளையும் முடக்கிப்போடும் மோசமான நரம்புநோயால் பாதிக்கப்பட்டு  பேச்சும், உடல்அசைவும் இழந்தும், கவலைப்படாது, சக்கரநாற்காலியில் இருந்துகொண்டு, மின்னணு கருவியைக்கொண்டே தம் சிந்தனைகளை வெளிப்படுத்தி வருகிறார். அவரே இன்றைய தலைசிறந்த இயற்பியல் விஞ்ஞானிகளுள் ஒருவரும், ஐன்ஸ்டைனுக்குப்பிறகு மாபெரும் கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியவரும், அண்மையில் அமெரிக்காவில் மிக உயரிய அறிவியலாளர் விருதைப்பெற்றவருமான  ஸ்டிபன் ஹாக்கின்ஸ்.



சாக்ரடீசையும், அபிரகாம் லிங்கனையும்விடக் குடும்பவாழ்வில் துன்பப்பட்டவர்கள் யாரிருக்க முடியும்? 
 ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே வாழ்வென்றால் போராடும் போர்க்களமே...!

சிறந்த அன்னை…

சிறுகதை
                                      சிறந்த அன்னை
















என்னை நீரஜின் பள்ளியில் அழைத்திருந்தார்கள். நீரஜ் பள்ளியில் எல்லாவற்றிலும் சூப்பர் ஸ்டார். அதனால் சிறந்த அன்னையாக பள்ளியில் என்னை சிறப்பிக்க போகிறார்களாம்அன்னையர் தினத்தை பற்றி சில வார்த்தைகள் பேச வேண்டும். என்ன பேசலாம்…  அன்னையர் தினத்தை பற்றி  யோசித்துக் கொண்டிருந்தேன்.
வேலைக்காரி கமலா வந்தாள்..”  அம்மா துணி எல்லாம் எடுத்து வச்சாச்சா…? “ கேட்டுக் கொண்டே பக்கெட்டில் உள்ள துணிகளை பரக்க பரக்க துவைத்தாள். துணிகளை மொட்டை மாடியில் காய வைத்து விட்டு கிச்சனுக்குள் சென்று எல்லா பாத்திரங்களையும் கழுவி வைத்தாள்.
அம்மா நான் கிளம்பட்டுமா..?
என்ன கமலா .. வழக்கமா லீவு நாள்னா லேட்டா வருவே நிதானமா செஞ்சுட்டு போவே…? இன்னிக்கு என்ன அரக்க.. பரக்க முடிச்சிட்டேஎங்கேயாவது வெளியில போறீயா..?
இல்லம்மா.. லீவு நாள்ல மட்டும் வந்து வேலை செய்யேன்னு இரண்டு வீட்ல கேட்டுருக்காங்கஅதான் சீக்கிரமா முடிச்சிட்டு போறேன்..”
ஏற்கனவே நாலு வீட்ல செய்றே.. இன்னும் வேறயா..…?”
என்னமா பண்றது எப்படியோ வாயை கட்டி வயித்த கட்டி படிக்க வைக்கிறேன். பொண்ணை அடுத்த வருஷம் காலேஜ் ல் சேர்த்து படிக்க வைக்கனும்… நாளைக்கு அதாவது கஷ்டபடாம இருக்கனும்... அதுக்குதான் நான் கொஞ்சம் கஷ்டப்பட்டாவது இன்னும் ரெண்டு வீடு பாக்கலாம்னு ஒத்துக்கிட்டேன்.   நாளைக்கு அதுங்க நல்லா இருந்தா போதும்.
சரி.. சரி.. நேத்து வீட்டுக்கு விருந்தாளிங்க வந்திருந்தாங்க.. நிறைய ஸ்வீட், மிக்ஸர்னு இருக்கு நீயும் கொஞ்சம் சாப்பிடு…”  தட்டில் போட்டு தந்தாள்.
அம்மா.. இத்த கொஞ்சம் காயித்தல மடிச்சி குடேன். சின்ன பையன் ஏதனா தின்றதுக்கு வேணூம்னு ரெண்டு நாளே கேட்டுகிட்டே இருந்துச்சிஅதுக்கு குடுத்தா ஆசையா திங்கும்..”
பொட்டலத்துடன் சென்றவளை பார்த்து கொண்டிருந்தவளை பார்த்து எனக்கு வியப்பாக இருந்தது. அன்னையர் தினம் பற்றி யோசித்து கொண்டிருந்த எனக்கு  அவள் உணர்வு பூர்வமாக சொல்லி சென்று விட்டு போனதை நினைத்து. உண்மையில் இவளைத்தான் பாராட்ட வேண்டும் என்று மனசு சொல்லி கொண்டிருந்தது.
                                                                        *******

Friday, 26 October 2012

(செவ்வாய் பற்றி படிச்சதுல புரிஞ்சது)



(செவ்வாய் பற்றி படிச்சதுல புரிஞ்சது)

அப்படியா சங்கதி…?


செவ்வாய்க்கு ஃபோபோஸ், டெய்மாஸ் இரண்டு நிலாக்கள் உண்டு. 
( அப்படியா .... இது “செவ்வாயின் இரண்டு நிலா இதிகாசம்..!” னு வைரமுத்து சார் எத்தனை வால்யூம் எழுத போறிங்க…?)



செவ்வாயின்  ஈர்ப்பு விசை, புவி ஈர்ப்பு விசையில் 38 சதவீதமே உள்ளது.அதாவது பூமியில் ஒருவர் 100 கிலோ எடை இருந்தால் செவ்வாய்க் கோளில்  38 கிலோ மட்டுமே இருப்பார்.
( அப்படின்னா… மானாட மயிலாட ஷூட்டிங்கை அங்கேயே வச்சிக்கலாமே..? அப்புறம் நம் ஜட்ஜூங்க யாரும் குண்டுன்னு சொல்ல முடியாது இல்ல…? )




செவ்வாயில் ஒரு நாள் பூமியின் ஒரு நாளை விடசற்று அதிகமாக இருக்கிறது. ( அப்படியா..? சீக்கிரம் ஆபிஸை அங்க மாத்துங்கப்பா எக்ஸ்ட்ரா டூட்டி (தூங்கறதுதான்) பார்க்கலாம்  ..!)



செவ்வாய்க்கும்  பூமிக்கும் சிலஒற்றுமைகள் காணப்படுகின்றன (  அப்படின்னா நாம குடியேறிப்பிடலாம்… ரியல் எஸ்டேட் காரங்க எப்ப போக போறீங்க பிளாட் போட…?)





செவ்வாயில் அடிக்கடி புழுதிப் புயல் வீசுமாம்.
( அப்படியா..?  புயல் நிவாரணம் தூள் கிளப்பும்..!)




பூமியைப் போலவே செவ்வாய்க்கும் பருவ காலங்கள் உண்டு  ( அப்படின்னா.. டீன் ஏஜ்.. பருவம் எப்ப…?)
-       ( ஒழுங்கா சயின்ஸ் புக் படிங்கன்னு சொன்னா… கேட்பிங்களா…? அதான் இப்படி…ஹி..ஹி…!)

துன்பங்களும் பழகிப் போனால்….!

துன்பங்களும் பழகிப் போனால்….!







துன்பங்களும் பழகிப் போனால்….!
அரசன் ஒருவன் தவறிழைத்துவிட்டதால் சினங்கொண்ட முனிவர் ஒருவர்,''நீ நாளையே பன்றியாகிச் சாக்கடையருகே திரியக்கடவாய்'' என்று சபித்துவிட்டார். பன்றியாக மாறிவிடும் கேவலத்தை  விரும்பாத அந்த அரசன் தன் மகனை அழைத்து, ''நான், நாளை பன்றியாக மாறிய மறுகணமே என்னை வாளால் வெட்டிக்கொன்றுவிடு!'' என்று கேட்டுக்கொண்டான்.
எதிர்பார்த்தபடி மறுநாள் காலை அரசன் பன்றியானான். மகன் சோகத்துடன் பன்றியான தன் தந்தையை வெட்ட வாளை வீசும்போது,'' மகனே! பொறு! இன்னும் ஒருமாதம் பன்றிவாழ்க்கை எப்படியிருக்கிறது என்று பார்த்துவிட்டுச் சாகிறேன். அடுத்த மாதம் இதே நாளில் என்னைக்கொன்று விடு'' என்றான்.
பன்றி வாழ்க்கையில் அவன் ஒரு பெண் துணையைத்தேடிக்கொண்டான். பெண் பன்றி கர்ப்பமானது. ஒருமாதம் கழித்து மகன் மீண்டும் தந்தையைக் கொல்ல வாளுடன் வந்தபோது,'' மகனே இப்போது நான் இறந்தால் கர்ப்பமாகியுள்ள என்  மனைவி ஆதரவற்றுவிடுவாள். குட்டிகள் பிறந்த பின் அடுத்த மாதம் இதே நாளில் என்னைக் கொன்றுபோடு'' என்றான்.
மீண்டும் ஒருமாதம் கழித்து, மகன் தந்தை தனக்கிட்ட கட்டளைப்படி தந்தையையின் அருவருப்பான வாழ்வை முடிவு கட்ட வந்தபோது,'' மகனே இந்தக் கேவலமான  வாழ்க்கை எனக்கு இப்போது பழகிவிட்டது. சாக்கடை ஓரத்தில் சமாளித்து வாழவும் பழகிவிட்டேன். மனைவி, குட்டிகள் என்று பந்தமும் பொறுப்பும் எனக்கு இந்த வாழ்வையும் அர்த்தமுள்ளதாக்கிவிட்டது.
இனி இப்படியே இருந்துவிடுகிறேன். என்னை இனி இப்படிய வாழவிடு. எந்தத் துன்பம் வந்தாலும் பழகிக்கொண்டு நீயும் வாழக்கற்றுக்கொண்டால், உன் வாழ்வும் மகிழ்வாக இருக்கும்  '' என்று மகனுக்கு அறிவுறுத்தினான்.