Wednesday, 27 March 2013

காதல்ல இலக்கணம்....மாறும்


 காதலி: ஒரு கவிதை சொல்லு?

காதலன்:-

   நீ

  நான்

  நாம்...

காதலில்-

இலக்கணம் மாறுமோ?
******
 காதலி: அடப்பாவி தமிழ் வகுப்பில ஒருமை,பன்மைக்கு வித்தியாசம் தெரியாத 'எருமை' நீ... காதல்னு வந்துட்டா மட்டும் இலக்கணத்துல எடுத்து விடற..?

*******************





மெல்லினமாய் இருந்தவள்..
வல்லினமாய் மாறினாள்
இடையினமாய்-
என் பார்வை...!

*******************

Thursday, 21 March 2013

அவங்க காதலிக்கறாங்கப்பா...!

                           தூக்கம்  தொலைப்பவன் இரண்டு ரகம்..
                           ஒன்று சீக்கு கண்டவன்
           இரண்டு காதல் கொண்டவன்                                  

                            அவன் இரண்டாவது ரகம்.
                            தூங்காத  இரவுகளில்
                            பூக்கள் உதிரும் ஓசையை
                            கேட்டுக்கொண்டிருந்தான்.

                             காதல் வந்தால் காதலிக்கு
                             கன்னம் சிவக்கும்!
                             காதல் கொண்டவனுக்கோ
                             கண்கள் சிவக்கும்.... !

                               அவளும் அறிவாள் அவனை
                               கனவுகளுக்காகவே
                              உறக்கம் கொண்டிருக்கிறாள்…

                               கனவின் அரற்றலில்
                              ஊர் அறியுமோ
                              அச்சத்தில் பதறினாள்..
                              அவன் காட்சியைவிட்டு
                             போய்க்கொண்டிருந்தான்..
                                     
                               ஆனாலும்
                               இதயத்தில்-
                              நெருங்கி கொண்டிருந்தான்..!

                               அவர்கள் பேசிகொள்ளவில்லை
                               காதல் அவர்களுக்குள்
                              பேசிக்கொண்டிருந்தது..!

                              ஓர் காவியபொழுதின்
                               கடற்கரையில்
                              அவனும், அவளும்…
                              அலையும், அலையும்மனமும்..

                                காதல் ஊடுபரிமாற்றம்
                                நடத்தி கொண்டிருக்கிறது..
                               பாலில் உறையிட்ட  தயிராய்..!

                               அவன்  முத்தமழை பொழிய
                               அவள் கன்ன  குடைபிடிக்க..!


Monday, 18 March 2013

சைதாப்பேட்டை கவிஞர் ...






சைதாப்பேட்டை கோவிந்தசாமி ஒரு பெரிய கவிஞரை  கடத்திட்டு போய்,

" இந்த பாருய்யா.. பயந்துக்காத ... எனக்கு ரொம்ப நாளா  கவித எய்தனும்னு ஆச... நான் சொல்லிக்கரத அப்படியே எய்தி காமி... இன்னா..?. அப்பறம் நீ  நடய கட்டிட்டு போய்க்கினே இருக்கலாம்......

ம் சொல்றேன் எய்திக்க.....

இன்னிக்கு என் லவ்வர்க்கு பொறந்த நாள் பா. அதான்  நெல கொள்ளலை.. தோ கொஞ்ச் நேரத்துல வந்துடும்... இந்த பீச் பூரா லவ்வருங்கதான் வெய்ட் பண்ணினுகிறாப்புல.. நானும் காத்துக்கினுதான் இருக்கன்.. என்னமோ போப்பா ஆளு வராதப்ப இந்த வாட்ச்சி கெழவனாட்டாம் நவுருது.. வந்து அதுங்கூட பேசிக்கிட்டிருந்தா.. கொமரனாட்டாம் ஓடி பூடுது.. அப்பால லேட் ஆயிடுச்சின்னு போய்டும். ம் இங்க பாருய்யா கண்ணுலயே பேசிட்டிருக்காங்க..  எவ்வளவு நேரமா குந்திக்கினு இருக்கிறது? அதான் மணல்ல எதயம் வரைஞ்சிட்டிருக்கேன்.. அதோ அந்த புள்ள வந்துடுச்சி.. அத்த பாத்தங்காட்டியும் சுத்தி ஒண்ணுமே தெரியலைப்பா.. அது மட்டும்தான் என் கூட இருக்காப்பல கீது. அப்பாலிக்கா அது எப்பவும் சுடிதாருதான் போடுமா பொறந்த நாளைக்கு நான் பாண்டி பஜார்ல வாங்கி குடுத்த பொடவைய இன்னிக்கு கட்டிக்கினு வந்துட்டு  புடவையில அழகா இருக்கனான்னு கேக்குது..  எனக்கு ஒரே கன்பீஸ் பொடவையில அது அழகா இல்லாங்காட்டி அது கட்டினதால அந்த பொடவைக்கு அழகான்னு.. ...

இன்னா எய்திட்டியா? கூட எதனா ஒரு லைன் சேர்த்துக்க...




இன்று என் காதலி பிறந்த நாள்
இருப்பு கொள்ளவில்லை எனக்கு
‘கொஞ்ச’ நேரத்தில் கிடைத்து விடும்
அவள் தரிசனம்.!

கடற்கரை காத்திருப்பு
காதலர்களுக்கானது..
காத்திருக்கிறேன்..

காத்திருக்கும் நேரங்களில்
கிழவனை போல  நகர்ந்து
காதலி வந்து விட்டால்
வாலிபனாக ஓடும்
நேரங்களை சபிக்காமல்
என்ன செய்ய…

அவரவர் வேலையை யார் செய்கிறார்..?
கண்கள் பேசிக்கொள்வதும்
உதடுகள்  சந்தித்துக் கொள்வதும்
இங்கேதான் நடந்து கொண்டிருக்கிறது..!

மணலை ரிகையாக்கி இதயம்
வரைந்து கொண்டிருக்கையில்
அவள் நுழைந்துவிட்டாள்…
கடற்கரை காலியானது

என் சுடிதார் தேவதை
கேட்டாள்
நீ  பரிசாக கொடுத்த
புடவையில்.. அழகாய் இருக்கிறேனா?

சேலையில் அவள் அழகா
அவளால்  சேலைக்கு அழகா
இரண்டுமாய் யோசிக்க
இடையில் தெரிந்த இடையில்
சந்தேகம் தீர்த்தது.
 ************************

( சிரிப்பா இருக்கா? டுப்பா இருக்கா? எதுவா இருந்தாலும் ஜஸ்ட் இது காமெடிதான்...!)

Friday, 15 March 2013

அஞ்சலையின் வேண்டுதல்....!

வெள்ளிக்கிழமை மனுவுக்கு
கவனம் அதிகம் போல

 கூட்டமாய்த்தானிருந்தது
ஏழையோ பணக்காரனோ
எதோ ஒன்றை கேட்டு..

பிரகாரம் முழுக்க மனக்குவியல்கள்..
இலஞ்சம் கொடுத்தே
பழக்கப்பட்டதால்
கடவுளுக்கும் ..

எதிரில்
வேலைக்காரி அஞ்சலை..
சத்தமாகவே கன்னத்தில் போட்டு
“ என் மக எப்படியாவது ப்ளஸ் டூ
பாஸ் பண்ணிப்பிட்டா அபிசேகம்..”
பண்ணிடறேன்..

கல்லாமை அவளோடு போகட்டும்னு
கருத்தா இருக்கா..போல
சினேகமாய் சிரித்து கேட்டேன்..
மேல என்ன படிக்க வைக்கிற..!

ஹாஸ்யத்தை
கேட்டது போல் நகைத்தவள்
மேலயா.. க்கும்.
கவர்மெண்ட்டு
 பணமும், அரை பவுனும்
கல்யாணச் செலவுக்கு
வேண்டிதான் ஹைஸ்கோலு..
அதுக்கு மேல என்னாத்துக்கு?

*************

Wednesday, 13 March 2013

என்ன படிக்க...?



தாத்தாவுக்கு
நான் டாக்டர் ஆகனுமாம்
அப்பாவோட ஆசை கலெக்டர்
அம்மாவுக்கோ கம்ப்யூட்டர் இஞ்சினியர்
என்னை யோசிக்கவிடாமல்
ஆளாளுக்கு சொல்றாங்கன்னு
தங்கச்சி காதுல கிசுகிசுப்பா சொன்னா
டெண்டல் படிச்சி
இவங்க வாய்க்கு எல்லாம் ஊசி போடு !


  நன்றி- சுட்டி விகடன்.
( சுட்டி விகடனில் இந்த கவிதையை எழுதியது என் குட்டீஸ்தான்...) 
குழந்தைகள் நம் கனவுகளுக்கு வடிவம் கொடுக்கும் பொம்மை அல்ல. அவர்களுக்கு ஆர்வமுள்ள துறையில் படிக்க அனுமதியுங்கள். வழிகளை சொல்லுங்கள். கருத்துக்களை திணிக்காதீர்கள். 

Tuesday, 12 March 2013

தினமலர்- பெண்கள் மலரில்...!

09-03-2013 தினமலர்- பெண்கள் மலர்
 

Wednesday, 6 March 2013

சக உயிர்க்கு அடையாளம் வேண்டுமா?


மார்ச் 8 -ம் தேதி மகளிர் தினத்திற்காக  பத்திரிக்கைகளில் பெரும்பாலும் பெண்கள் சிறப்பிதழ்கள் வெளி வருகிறது. பல்வேறு அமைப்புகளின் மகளிர் தின கொண்டாட்டங்கள் நடக்கின்றது. அன்றைய தினம் சாதனை பெண்மணிகளை  பெருமை பொங்க  பேசுகிறோம். 
 மற்றொரு பக்கம் பெண்கள் மீதான வன்முறை, பாதுகாப்பற்ற சூழலில் சுதந்திரமாய் செயல் பட முடியாமல் மகளிர் தின கொண்டாம் தேவை இல்லை என்ற ஆதங்கங்கள். உழைக்கும் மகளிரின் போராட்டத்தை நினைவு கூர்ந்து கொண்டாடப்படும்  மகளிர் தினம் அன்றிலிருந்து இன்று வரை எதோ ஒன்றை முன் வைத்து போராடிக் கொண்டிருக்கும்படியாகத்தான் இருக்கிறது. பெண்கள் சக உயிர்கள் என்று மதிக்கப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை.
பெண்கள் தினம் என்ற அடையாள தினம் எதற்கு என்று கேட்டு ஆங்கில ஆசிரியை ஆக இருக்கும் என் தோழி  எனக்கு  கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார். அவரின் கேள்விகளை உங்கள் முன் வைக்கிறேன். நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள்...?

கடிதம்.....

பெண்கள் தினம், அன்னையர் தினம் என்று எதற்கு இவைகள்? ஒரு அடையாளத்திற்காகவா அல்லது பெண்கள் என்ற சில ஜீவன்களின் இருப்பை நினைவுப்படுத்திக்கொள்ளவா? பள்ளி விட்டு அடுத்த நொடி பரபரப்புடன் வேகமாக தோழியருடன் ஓடி வருகிறாள் அந்த சிறுமி. ஏதோ பாடத்தில் சந்தேகம் என்ற என் நினைப்பை அப்படியல்ல என்றது பேயறைந்தாற் போல் இருந்த அவள் முகம். ஆம் பேயேதான் அறைந்திருந்தது. தம்பி என்கிற பேய். பள்ளி மதிய உணவு இடைவேளையில் வங்கிக்கு சென்று வந்ததை அறியாமல் எங்கோ ஊர் சுற்றினாள்  என்று எண்ணி வகுப்பறையில் சக மாணவிகளின் முன்னிலையிலேயே கன்னத்தில் பளார் என்று அறிந்திருக்கிறான் பத்தாம் வகுப்பு படிக்கும் தன தமக்கையை எட்டாம் வகுப்பு படிக்கும் தம்பி. தன் தமக்கை தவறு செய்ததாக எண்ணினால் அதை அவன் ஒரு செய்தியாக தன் பெற்றோருக்கு தெரிவிக்கலாமே அன்றி அதை ஒரு குற்றச்சாட்டாக கூட வைக்க உரிமை இல்லை. ஆனால் அங்கே அவன் ஒரு நீதிபதியாகவே மாறி தீர்ப்பு வழங்கியிருக்கிறான். எது அவனுக்கு அந்த அதிகாரத்தைக் கொடுத்தது?
எது அவனுக்கு அந்த உரிமையை கொடுத்தது? சகோதரன் என்ற உரிமையா? இல்லை, ஆண் என்கின்ற நினைவு கொடுத்ததே அந்த அதிகாரம்.
விளையாட்டாக வீட்டில் சண்டைப் போட்டுக்கொள்ள வேண்டிய வயதில் ஒரு சிறுவன் சந்தேகப்பட்டு தன தமக்கையை பலர் முன்னிலையில் கன்னத்தில் அறையத் துணிகிறான். அதை சொல்லும் போது அந்தச் சிறுமியின் முகத்தில் தெறித்ததே அந்த உணர்வு! அப்பப்பா! ஒட்டு மொத்த பெண்களின் சிதைக்கப்பட்ட மரியாதை உணர்வை(wounded pride) நம் முன் பரிமாறும் ஒரு துடிப்பு.
பெண்கள் ஆகாய விமானங்கள் ஓட்டுவதாலோ ஆட்டோ ஓட்டுவதாலோ ஐடி துறையில் பரிமளிப்பதாலோ மட்டும் முன்னேற்றம் கண்டு விட்டதாக எண்ணிக் கொள்ளலாகுமா? எங்கோ கிராமத்தில் மாமியாரிடமோ அல்லது கணவனிடமோ "தண்டச்சோறு" என்று இதயத்தில் அறை வாங்கும் பெண்களும், ஏய் நான் ஆம்பளைடி என்ற அதிகாரக்குரலுக்கு அடி பணியும் பெண்களும் விடியல் முதல் இரவு வரை அயராது உழைத்தாலும் உழைப்புக்கு உரிய அங்கீகாரம் கிடைக்காமல் அவதிப்படும் பெண்களும் இன்னும் இருக்கின்றனர் என்பதை யாரும் மறுக்கவியலுமா?
அம்மா பெண் என்ற காரணத்தாலேயே அவளை மதிக்காமல் அன்னையையே அடிக்க கரம் உயர்த்தும் பிள்ளைகளும் உண்டு இச்சமூகத்தில். அதுமட்டுமா? பெண் ஆசிரியைகள் வளர்ந்த மாணவர்களிடம் படும் அவஸ்தைகளை வெளியில் சொல்வதில்லை. அவர்களின் தாய்மையுணர்வே பல மாணவர்களின் வக்கிர உணர்வுகளை வெளிக்கொணராது காப்பாற்றுகிறது என்பதை யாரும் மறுக்க வியலாது.
வகுப்பறையில் ஒன்றாகவே பயிலும் மாணவமாணவியரிடமும் ஒருவருக்கொருவர் இயல்பாக இருக்க வேண்டிய அன்பு துளியும் இல்லை. மாணவிகளுக்கு  அவர்கள் ஆண்கள் என்ற எண்ணமும் மாணவர்களுக்கு இவர்கள் பெண்கள் என்ற எண்ணமும் தலைத்தூக்கி இருபாலருக்கும் இடையே இருக்க வேண்டிய இயல்பான நட்பை சிதைக்கிறது. இது இவர்களின் தவறா? இல்லை, இச்சமூகம் இப்படித்தான் இவர்களை வடிவமைக்கிறது. இங்கே ஆண்கள் ஆண்களாகவும் பெண்கள் பெண்களாகவும் உருவாக்கப்படுகின்றனர். ஆண் சக்திவாய்ந்த பிம்பம் போலவும், பெண் ஏதோ பூட்டி பாதுகாப்பதற்கு உரிய பொக்கிஷம் போலவும் ஒரு மாயை உருவாக்கப்படுகிறது. அந்த மாய  உலகில்  இருவருமே  தங்கள்  இயல்புகளை  தொலைத்துக் கொண்டிருக்கின்றனர்.
நாம் அனைவரும் ஒன்றை இதயப்பூர்வமாக எண்ணிப்பார்க்க முயல வேண்டும். தங்கையரை தோளில்  சுமந்து தாலாட்டும் அண்ணன்களை விட தன்  தம்பிகளை அன்போடு இடுப்பில் வைத்து விளையாட்டுக் காண்பிக்கும் தமக்கையர்  அதிகம். அவர்களின் அன்பு எனும் ஊற்றில்தான் இச்சமூக கட்டமைப்பு செழிக்கிறது; அவர்களின் பாச வெள்ளத்தில்தான் ஆண்களின் பாவங்கள் அடித்துச்செல்லப்படுகின்றன. பெண்களின் கடமை உணர்வும்அரவணைக்கும் பண்புமே இப்பூவுலகை உயிர்ப்பிக்கும் சஞ்சீவி. மெல்லியலாரின் மலரினும் மெல்லிய காதலே ஆணின் வல்லிய உருவத்தை தாங்கி நிற்கும் தூண். ஆகவே மானிட இனம் ஒன்றை நினைவில் வைத்துக்கொளல் நலம். பெண்கள் இல்லாத பூமியின் அடுத்த ஒரு கணத்தை சற்றே  நினைத்துப்பார்ப்போம். பெண்களை ஒரு இரண்டாம் பட்ச உயிரி என்ற நினைப்பை மாற்றுவோம். 
                                                                                                                                                                    -விஜயலட்சுமி 
                                                                                                                                                                   
                                                                                                                                                         



**********************