Sunday, 7 April 2013

“மனசாட்சி..! “

 

“  மது.. என்னாச்சு… நேத்துலர்ந்து பார்க்கிறேன் ஒரு மாதிரி டல்லா இருக்கே.. நீ டூர் போயிட்டு வந்ததிலர்ந்தே கலகலப்பா இல்ல… “ மதுமிதாவின் அம்மா கேட்க,


“ அம்மா… நம்ம பாட்டி  உயிரோட இருந்திருந்தா..  நீ நல்லா பார்த்திட்டு இருப்பே இல்ல…?” 


அவள் கேள்வியில் ஒரு நிமிஷம் ஆடிப்போன  விஜயா….  “ இப்ப எதுக்கு சம்பந்தமில்லாம இதை கேட்கிற….”


“  அம்மா ஏதோ ஒரு ஃபிலீங்க்ஸ் அட்டாக்…. அதான் கேட்டேன்… என்னையும் , அப்பாவையும் இவ்வளவு நேசிக்கிற நீ நிச்சயம் இன்னோரு ஜீவனை வெறுக்க முடியாது….. “


“ ஏய்   நீ என்னமோ குழம்பி போயிருக்க… அப்பா ஏதாவது உன் கிட்ட மனசு வருத்தப் படற மாதிரி சொன்னாரா…?


“   நோ மா…  நாங்க திருச்சில மலைக் கோட்டை பார்த்துட்டு… ஒரு ஆர்ட்டிக்கிளுக்காக  அன்னை இல்லம் …ங்கிற முதியோர் இல்லத்துக்கு போனோம். அங்க இருந்த வயசான தாத்தா… பாட்டியை எல்லாம் பார்க்கிறப்ப ரொம்ப பாவமா இருந்துச்சி… சொந்தம் இருந்தும் கவனிக்க முடியாம  அனாதை ஆனவங்க.. அதிலயும் ஒரு பாட்டி கிருஷ்ணவேணின்னு…  நம்ம நேட்டிவ் ஊரைதான்மா சொன்னாங்க….  நீ என் பேத்தி போலன்னு ரொம்ப பாசமா பேசினாங்க…  அப்பா ஊராச்சே ஒரு வேளை அப்பாவை தெரியுமோன்னு பர்சில் வச்சிருந்த    நாம மூணு பேர் இருக்கிற  நம்ம போட்டோவில அப்பாவை காட்டினேன்…  தெரியலைன்னுட்டாங்க… அவங்களுக்கு யாருமே கிடையாதாம்…. பட் என்னமோ தெரியலை நான் கிளம்பிறப்ப அவங்க கண்ணீர் சிந்தியது என்னால மறக்க முடியலைம்மா… என் மொபைல்ல கூட அவங்க போட்டோ எடுத்து வந்திருக்கேன்….


அப்பாவிடம் காட்ட… அதிலிருந்த அம்மாவை பார்த்து அதிர்ந்து போனான் ராகவன்.


“ மது… நாம என்ன விதைக்கிறோமோ… அதைதான் அறுவடை பண்ணமுடியும்… பெத்தவங்களை அனாதையா விட்ட பிள்ளைங்களுக்கும்..  அந்த நிலமை ஒரு நாள் வரும்…    நாளை நீ கல்யாணம்  ஆகி போற இடத்துல இத உணர்ந்தாலே..  பெரியவங்களை மதிக்கிற நல்ல தலைமுறை வளரும்…. வருத்தப் படாதே    நீயும்.. நானும் இன்னொரு நாள் அவங்களை பார்த்துட்டு ஏதாவது உதவி செஞ்சிட்டு வரலாம்… போய் தூங்கு…”


“  அப்பான்னா… அப்பாதான்… உங்ளுக்கு எவ்வளவு நல்ல மனசு…. !”கொஞ்சலாக கை பிடித்து முத்தமிட்டு சென்றாள்.

           
“  பாவி… பெத்த பொண்ணு முன்னாடியே என்னை குற்றவாளியா நிக்க வச்சிட்டியே…  என் அம்மாவையே அவ அனாதைன்னு காட்டறப்ப… வேதனையில துடிச்சி போயிட்டேன்…   எங்கம்மா கூட இருந்தா தற்கொலை பண்ணிக்குவேன்னு மிரட்டி மிரட்டியே… தனியா கூட்டிட்டு வந்துட்ட…  எனக்கு வேதனை தரக் கூடாதுன்னு அம்மாவே…  இருக்கிற இடத்தை கூட சொல்லாம எங்கியோ.. போயிட்டா…..  இப்பக் கூட பாரு… உன்னை காட்டிக் குடுக்காம… அவளுக்கு யாருமில்லைன்னு பொய் சொல்லியிருக்கா…  நல்ல வேளை.. பாட்டி முகத்தை கூட மதுவுக்கு காட்டாமயே வளர்த்துட்ட…  இல்லைன்னா..  உன் வேஷம் கலைஞ்சி  இவ்வளவு மோசமானவளா நம்ம அம்மான்னு உன்னை வெறுத்து போயிருப்பா….. !”


குற்ற உணர்வு குறு குறுக்க… விஜயா உள்ளுக்குள் வருந்தி தூக்கம் வராமல்  புரண்டு கொண்டிருந்தாள் ….  “ மனசு எப்படி வேணா நடந்துகிட்டாலும்… என்னிக்காவது ஒரு   நாள்  தப்பா.. சரியான்னு கேட்க ஆரம்பிச்சுடும்… விஜயா….  இனி நாம நிம்மதியா தூங்கமுடியுமா….?”  

ராகவனின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் திரும்பிகொண்ட விஜயாவின்  மனசாட்சி புரட்டி கொண்டே இருந்தது....


                                                            *********

Thursday, 4 April 2013

ஆட்டோகிராப்




ஆனா அப்ப அதான் ஸ்கூலு
யுவராணின்னு ஒரு டீச்சர்..
கவர்மெண்ட் ஸ்கூல்ல
ஃபேனா சுத்தறது.. ரெண்டு பசங்க
ஒருத்தன் வல பக்கம் இன்னொருத்தன்
இடப்பக்கம்.. அட்டைய வச்சி  வீசிகிட்டு..
கரண்ட் போற நாழியெல்லாம் டீச்சர் ஞாபகம்..

கன்னத்தை கிள்ளி
சிட்டி சார் சொல்வார்.. ஏ ஜில்லு..
 நீ பெரியவளாயி கல்யாணம் கட்டிகிட்டு
குழந்தை குட்டியோடு போகும் போது
வழியில பார்த்தா  கிழவன் கிடக்கிறான் போன்னு
வணக்கம் கூட வைக்க மாட்டாய்

விளையாட்டு வினையாச்சி
கண்ணாடி வளை துண்டில
கண்ணுகிட்ட கீறினா பூங்குழலி
சின்ன அடையாளம் அவளை
இன்னும் சொல்லிகிடக்கு


என்ன  திட்டினாலும் ஒட்டிகிட்டிருப்பா லதா..
எப்பவும் எண்ணெய் வழிஞ்ச முகத்தில
கூடவே வழியும் –அன்பு
ஹைஸ்கூல் முடிஞ்சி
ஊர் மாறி போனாள்.. போன ஊர் தெரியல..

டியுஷனில்..
நீயா நானான்னு-
விழுந்து விழுந்து படிப்பான் தாமு..
பேர் சொல்லும் போது
ஷா வராது அவனுக்கு சா என்பான்.

சொப்பு சோறாக்கி
கல்லூரி வரை ஒண்ணாவே திரிஞ்ச மாலு
தேசம் கடந்து..

பரீட்சையில்  நோட்ஸையே எடுத்து தந்த
அந்த ‘ஜொள்’ மாஸ்டர்..

காதலை நான் பார்க்கவில்லை
என்னை பார்த்த அந்த காதலிடம் சொன்னேன்..
காதல் என்சொல்லுக்கே -
முழங்கயித்துல தூக்கு போட்டுக்கொள்ளும் என் குடும்பம்..
மறுப்பது உன் உரிமை.. மறக்க சொல்வதல்ல
 நாகரீகமாய்  சென்ற அந்த’ ஜெண்டில்மேன்… ‘

 என்றாவது ஓர் நாள்
பயணங்களில் பாதைகளில்
பார்க்க நேரிடும்
முகவரி தெரியாத இந்தமுகங்களை-
உலகம் உருண்டை என்பது உண்மையானால்…!

Tuesday, 2 April 2013

உஸ்..வெய்யில் கண்ணை கட்டுதே...!

அறைக்குள் முடங்கி
கிடந்தாலும்
அம்மாவின்  வாசம்
சொன்னது.
வத்தலும், வடாமும்

காகத்தை  விரட்ட
கருங்குடை ஒன்று
மொட்டை மாடியில்
சிடு சிடுப்பாய் உட்கார்ந்து..!

சாயுங்காலத்திற்கு காத்திருக்காத
துரத்தலில் தேடுகிறேன்
சாலைகளில்
தொலைத்த மரங்களை..

நிழல்  தேசங்களுக்கு
அடைக்கலம் புகுகையில்
புறமுதுகிட்டு ஓடாத 
 சூரிய காந்தி பூக்ளின் பரிகாசம்..!


Saturday, 30 March 2013

பட்டாம் பூச்சிகள்

விடிந்து வெளிச்சம் பரவியது கூட தெரியாமல் அசந்து விட்டிருக்கிறோமே என்று சுசீலா பதட்டுத்துடன் எழ,

“ என்னமா பசங்கதான் இல்லியே.. நிதானமா எழுந்துக்கோ.. மெதுவா டிபன் செய்தா போதும்..” என்றார்  சிவம்.

இந் நேரம் பிள்ளைகளுக்கு ஸ்கூல் நேரமாக இருந்தால் ஒருவரோடு ஒருவர் முட்டிக் கொள்ளாத குறைதான் ஆளாளுக்கு பறந்து பறந்து வேலை செய்ய வேண்டி வரும். பிள்ளைகளுக்கு தேர்வு முடிந்து விடுமுறை விட்டாயிற்று. மருமகள் அனிதாவும் ஆசிரியை என்பதால் விடுமுறையில் பிள்ளைகளை அழைத்து கொண்டு அம்மா வீட்டிற்கு  சென்று விட்டாள். குழந்தைகளுக்கும் ஒரு மாற்றம் வேண்டும் அவர்கள் மாமா,அத்தை பிள்ளைகளோடு சந்தோஷமாய் விளையாடட்டும். அனிதா கேட்குமுன்னரே சிவமே சொன்னார்..” ஏம்மா அனிதா.. லீவு முடியற வரை அம்மா வீட்டிற்கு போறதா இருந்தா போயிட்டு வா.. நாங்க நல்லாத்தானே இருக்கோம்.. பார்த்துக்கிறோம்.  ரவி  வேணா வாத்துக்கொரு நாள் வந்துட்டு போகட்டும்…”

இன்று ஸண்டே என்பதால் ரவியும் குழந்தைகளை பார்க்க நேற்றே புறப்பட்டு போய்விட்டான்.

குளித்து டிபன் முடித்து விட்டு மதிய சமையலுக்கு காய் வாங்கி வர கிளம்பினார் சிவம்.

“ சார் வெள்ளரிக்காய் வாங்கிக்கோ.. வெய்யில்லுக்கு நல்லது… இந்தா இள நீரையும் எடுத்துட்டு போய் அம்மாக்கு குடு..” காய் காரி சாமர்த்தியமாய் சொல்லி பைகளில் போட்டாள்.

“ உங்களை கடைக்கு போகச்சொன்னா இத்தனையும் அடுக்கிட்டு வந்துடுவிங்க.. உங்க முன் நெத்தியில் இளிச்ச வாயன்னு எழுதி வச்சிருக்கு போலிருக்கு.. இந்த இளநீ எட்டு ரூபா குடுக்கலாம்.. பத்து ரூபாய்க்கு வாங்கிட்டு வந்திருக்கிங்க..” சுசீலா அர்ச்சனை செய்வாள்.

“ விடும்மா பாவம் பெண்பிள்ளைங்க வேகாத வெயில்ல இதெல்லாம் வித்துதான் பொழைக்கறா.. இதெல்லாம் தர்மமா நினைச்சுகனும்மா.. மிஞ்சி போனா எவ்வளவு சம்பாதிப்பா? துணி, நகை வாங்க போனா சொன்ன விலைக்குதான வாங்கறோம். இந்த ரெண்டு ரூபாயில் கணக்கு பார்க்காத..”

“ சிவம் சார்..” குரலை கேட்டு காய்காரிக்கு அவசரமாய் ரூபாயை எண்ணி கொடுத்து விட்டு திரும்பினார்.

“ அடடே.. சண்முகம் பார்த்து எவ்வளவு நாளாச்சுப்பா… புது வீடு எப்படி இருக்கு?”

“ எப்படியோ போகுதப்பா.. பேரப்பசங்க இருக்கறதால.. நேரம் ஓடறது தெரியலை.. ரிடையர்டு ஆயிட்டாலும் வீட்டுக்கு வாட்ச் மேன் உத்தியோகம் பார்க்க வேண்டியதா இல்ல இருக்கு..?” சரி சரி நான் வண்டிதான் எடுத்துட்டு வந்திருக்கேன்.. வாயேன் ஒரு எட்டு என் வீட்டிற்கு போய்ட்டு வந்துடலாம்…”

சண்முகம் கூப்பிடும் போது மறுக்க முடியவில்லை. தவிர என்ன வேலை பெரிசா கிடக்கிறது பின் சீட்டில் ஏறி உட்கார்ந்தார் சிவம்.

சண்முகம் மருமகள் காபி போட்டு கொடுத்து விட்டு போனாள். உள்ளே அவர் பேரன் கம்ப்யூட்டரில் கேம்ஸ் விளையாடிக்கொண்டிருந்தான்.

“ தினேஷ் வாப்பா..  தாத்தாவிற்கு ரெண்டு ரைம்ஸ் சொல்லிட்டு போ..”

குழந்தை ஓடி வந்து காயும் வெயிலுக்கு சம்மந்தமே இல்லாமல்… “ ரெயின் ரெயின் கோ அவே..” என்று பாடி விட்டு மறுபடியும் கம்ப்யூட்டரில் விளையாட ஓடி விட்டது.

“ என்னப்பா சின்ன குழந்தை வெளியில விளையாட விடலாம் இல்ல.. வீட்டுக்குள்ளேயே அதுவும் எப்பவும் வீடியோ கேம்ஸ் விளையாடினா கண் பார்வை என்னாகிறது?”

“ நீங்க வேற சார்.. இந்த ஏரியா ஒரு மாதிரி.. சுத்தி இருக்கறவங்க எல்லாம் படிக்காத ஜனங்க.. அவங்க வீட்டு பிள்ளைங்களோடு இவனை விளையாட விட்டா அவங்க பழக்கமெல்லாம் இவனுக்கு தொத்திக்கும்…அவங்க பேச்சு கூட டீசண்ட்டா இருக்காது.. வெளிய அனுப்பக்கூடாதுன்னு அப்பாகிட்ட சொல்லி வச்சிருக்கோம்…” பேப்பரிலிருந்து தலை நீட்டிய சண்முகத்தின் மகன் ராம்.

 “சரிப்பா.. வா தோட்டத்து பக்கம் போவோம்..” சண்முகம் அழைக்கவும்… அப்பாடா இந்த இறுக்கமான சூழ் நிலையில் இருந்து தப்பிக்கலாம் என்று சிவமும் அவர் பின்னால் கிளம்பினார்.

பக்கத்தில் நிறைய சிறுவர்கள் பட்டாளம் விளையாடி கொண்டிருந்தது. கண்ணா மூச்சி விளையாடி கொண்டிருந்தார்கள். கைகளை இறுக்கி மூடி.. ரைட் என்றதும் விடுவித்தான் அந்த சிறுவன். அவன் தேடுவதற்குள் அவன் முதுகில் நாலைந்து பேர் தொட்டு அவனை அவுட்டாக்கி விட்டனர்.

“ டேய் தம்பி.. இங்க வா..  ஏன்பா அவுட்டாயிட்ட.. ? அவங்க ஒளியறதை லேசா பார்த்திருந்தா கண்டுபிடிச்சிருக்கலாம் இல்லையா?” சிவம் கேட்க..

“ இல்ல தாத்தா.. இந்த வெளையாட்டு பேரு கண்ணாமூச்சி… கண்ணுல்லாம் தொறக்க கூடாது..”

“ பார்த்தியாப்பா… இதான் குழந்தைங்க உலகம் உண்மையானது.. நாமதான் அவங்களை தொலைச்சிட்டிருக்கோம்.. படிக்காதவங்க வீட்டு குழந்தைங்கள்னு உன் பேரனை இவங்களோட விளையாட விட மறுக்கறது எத்தனை அசட்டுத்தனம்?”

அதற்குள் இன்னொரு வாண்டு சண்முகத்திடம் “ தாத்தா தினேஷ்.. ஏன் இன்னும் வெளையாட வர்லை?” என்றது.

“ உஷ்…விரலை உதட்டில் வைத்தவர்.. “ இன்னிக்கு அவங்கப்பா இருக்கார்..  நாளைக்கு வருவான் என்ன…? “ கிசு கிசுப்பாய் சொன்னார்.

சண்முகத்தின் கிசுகிசுப்பில்  பதில் கிடைத்து விடவும்.. நமுட்டு சிரிப்பு சிரித்து வைத்தார் சிவம்.

“சரி தாத்தா…  இது புது தாத்தாவா…? கேட்டு விட்டு ‘டாட்டா’.. சொல்லி முத்தம் வைத்து விட்டு ஓடிப்போனது.

 நட்பு பாராட்ட சாதியும், அந்தஸ்த்தும் பார்ப்பதில்லை குழந்தைகள்..! 

*******************

   நம்ம தலைமுறையிலேயே நம் மழலை பருவங்களில் மறந்த விளையாட்டுக்கள் நிறைய.. இன்னும் நம் குழந்தைகள் விளையாட்டென்பதையே மறந்து விட்டார்கள். வீதிகளில் கூச்சலிட்டு சுதந்திரமாய் ஓடி பிடித்து விளையாடும் குழந்தைகளை  நகர வாழ்க்கையில் பார்ப்பது அரிதாகத்தான் இருக்கிறது. பள்ளி விடுமுறையில் அவர்களை எந்திரமாக்க வேண்டாமே! பட்டாம்பூச்சிகள் பறக்கட்டும்...!

Thursday, 28 March 2013

சொல்ல மறந்த கதை...



   பேருந்து தன் வேகத்தை குறைத்து கல்யாண ஊர்வலம் போல நகர்ந்து அந்த ரோட்டோர சுமாரான ஹோட்டலின் முன் நின்றது.“ டீ, டிபன் சாப்பிடறவங்க எல்லாம் இங்க முடிச்சிக்கலாம்… வண்டி இங்க இருபது நிமிஷம் நிக்கும்…”  கண்டக்ட்டர்  குரல் கொடுத்தார்.

அதுவரை மில்டனின் கவிதைகளில் மூழ்கியிருந்த  ருத்ரா புத்தகத்தை மூடி ஜன்னலுக்கு வெளியே பார்த்தான். ஹோட்டல் ஒன்றும் ஹைஜீனிக்காக தெரியவில்லை..  பசிக்கு பிஸ்கெட் டீ மட்டும்  எடுத்து கொண்டு ஒரு வழியாக கோவை போய் சாப்பிடலாமா என  யோசித்தான்

பக்கத்திலிருந்த பெரியவர் , “ என்ன தம்பி யோசிக்கிறிங்க.. இந்த ஓட்டல்லதான் கண்டக்டர், டிரைவருக்கு கமிஷன்.. அதான் எப்பவும் இங்க கொண்டு வந்து  நிப்பாட்டுவாங்க.. இன்னும்  நாலு மணி நேரமிருக்கு என்னால் பசி தாங்க முடியாது…. எதையோ சாப்பிட்டுதான ஆகனும்…? முணு முணுத்து கொண்டே இறங்கினார்.

ஒவ்வொருவராய் இறங்கி கொண்டிருந்தார்கள்.

“ டாடி எனக்கு ஜூஸ் வேணும்… “ அடம் பிடித்த அந்த குழந்தையை “ சனியனே.. இப்பதான சளி பிடிச்சி நல்லானது..திரும்பவும் ஜூஸ் கேட்கிறே..?” முதுகில் வைத்தாள்.

சே.. என்ன பெண் இவள்  குழந்தையிடம் பொறுமை இல்லாமல்.. உடம்புக்கு ஆகாது அப்புறமா வாங்கி தர்றேன்னு குழந்தைக்கு பக்குவமா எடுத்து சொல்ல மாட்டாளா..? இவளும் சுபா மாதிரிதான் இருக்கா..எதற்கெடுத்தாலும் பொறுமை இல்லாமல் கத்துவது.பெரும்பாலும் அவன் குழந்தைகள் இரண்டும் அவனையே சுற்றி சுற்றி வரும்.“ ஆமா நான் எவ்வளவுதான் செஞ்சு போட்டாலும் இதுங்களுக்கு  அப்பாவாம்… அப்பா..” பொருமித்தள்ளுவாள்.
“ சுபா.. குழந்தைகளோடு குழந்தையா பழகினாதானே? எப்பவும் உன் விருப்ப படிதான் அதுங்க நடக்கனும்னு சும்மா திட்டிகிட்டே இருந்தா… அதான் நான் எப்ப வருவேன்னு காத்திருக்குதுங்க…”

அவளை மாற்ற முடியவில்லை. சரி எதற்கு வெளியில் வந்தும் சும்மா 
 எதையெல்லாமோ  நினைத்துக் கொண்டு..  பஸ்ஸை விட்டு இறங்கி டீ குடித்தவாறே மெல்ல பார்வையை அலைய விட்டான்.காற்றில் பட படத்த கூந்தலை ஒற்றைவிரலால் தள்ளி எட்டி பார்த்து கொண்டிருந்த அவள்..நேகாவேதான். இவ்வளவு நேரம் கூடவே பயணித்திருக்கிறாள்..  இவனும் பார்க்கவில்லை..அவளும் பார்க்காமல் போயிருக்கிறாள்.அந்த பாடாவதி ஹோட்டலுக்கு   நன்றி சொல்லி விட்டு அவசரமாக பேருந்துக்குள் ஏறினான்.

“.. நேகா..”

பரிச்சயமான அந்த குரலில் நிமிர்ந்தவள் அதிசயித்து போனாள்.

“ருத்ரா.. நீங்க எப்படி இங்க… ஆச்சரியமா இருக்கு…? முகம் மலர்ந்தாள்.

“ நான் ஆபிஸ் வேலையா கோவை வரை போய்ட்டிருக்கேன்.. நீ..? பக்கத்தில் பார்வையை தேட விட்டவாறே..கேட்டான்.

“ அவர் வரலை..  சொந்தக்காரங்க கல்யாணம் அதான் அம்மா வீட்டுக்கு வந்துட்டு திரும்பி போய்ட்டிருக்கேன்.

நாம பார்த்து ஒரு ஆறெழு வருஷமாவது ஆயிருக்கும்ல..  பிரபாகர் யு.எஸ் போனதிலர்ந்து நான் அவங்க வீட்டுக்கு போறதில்ல..

“ எல்லாரும் ஏறியாச்சா… வண்டி எடுக்கலாமா..கண்டக்ட்டர்  விசில் ஊதியதும்..

ஒரு நிமிஷம் .. தன் சீட்டுக்கு போனவன், பெரியவரை பார்த்து..“ சார் பின்னாடி அந்த சீட்ல உட்கார்ந்துக்க முடியுமா.. அவங்க இங்க வராங்களாம்..”
பெரியவர் எதோ ஒரு சந்தேகத்தோடு பார்த்து கொண்டே நேகா சீட்டுக்கு போனார்.

“  நேகா… எத்தன வருஷம் கழிச்சி பார்க்கிறோம்..  அட்லீஸ்ட் கோவை போற வரைக்குமாவது  பேசலாம்னுதான்..  லைப் எப்படி போயிட்டிருக்கு..அப்புறம் உனக்கு எத்தன பசங்க?

“ ஒரே பையன் செகண்ட் ஸ்டாண்டார்டு படிக்கிறான்.. என் லைப் எப்படி போயிட்டிருக்குன்னு என்னை பார்த்தாலே தெரியலை?”..களுக்கென்று சிரித்தாள்.அந்த சிரிப்பில் கொஞ்சம் கர்வமும் எட்டிப்பார்த்தது.

 ***

அவன் நண்பன் பிரபாகர் வீட்டில்தான் அவளை முதலில் சந்தித்தான். பிரபாகரின் தங்கைதான் அறிமுகப்படுத்தினாள்.. “அண்ணே.. இவ எதிர்வீட்லதான் இருக்கா.. உன்னை மாதிரியே நிறைய கவிதை எல்லாம் எழுதுவா.. உன்னோட போட்டி போட இவதான் சரியான ஆளு..எங்கே ஒரு கவிதைய சொல்லி உங்க வீரத்தை காமிங்க பார்க்கலாம்…”
அதற்கு பிறகு வந்த நாட்களை எல்லாம் தென்றல் வருடி சென்றது.இலக்கியத்தில் ஆரம்பித்து அரசியல் வரை வாய் வலிக்க பேசினார்கள்.

நேகா திண்டுக்கல்ல ஒரு கவியரங்கம் நீயும் கலந்துக்கிறியா?
எதுக்கு?

 நாம ஒண்ணா பஸ்ல அத்தனை தூரம் போயிட்டு வரலாமில்ல..
யோசித்தவள் சரி என்றாள்.

கவியரங்கம்  முடிந்து ஹோட்டலில் சாப்பிட உட்கார்ந்த போதுதான் சொன்னான்..

“ நேகா என் கூட வந்தியே உங்க வீட்ல என்னை தப்பா நினைக்க மாட்டாங்களா..?”

பெரிய ஹாஸ்யத்தை கேட்டது போல் சிரித்தாள், “ என்ன ஐயாவிற்கு இப்படி ஒரு சந்தேகம்? அதான் உன் முகத்திலயே நல்லவன்னு எழுதாமலே வந்து ஒட்டிட்டிருக்கே .. உன் மனசு!அப்புறம் என்ன பயம்? அப்பாவுக்கு உன்ன பத்தி நல்லா தெரியும் ருத்ரா.. உன் கிட்ட பழகினது கொஞ்ச நாட்கள்தான்னாலும் ஏதோ கால காலமாய் பழகின மாதிரி இருக்கு..”

மென்மையாக அவள் கைகளை பற்றியவன் “ நேகா நீ இல்லாம என் வாழ்க்கை  நல்லாயிருக்கும்னு தோணலை.. நட்பை தாண்டி என் மனசுக்குள்ள உட்கார்ந்திருக்கேன்னு புரியுது..”

 கைகளை விடுவித்தவள்..”ஏய் என்னாச்சு உனக்கு?”

“ நிஜமாத்தான் மா.. நீயில்லாம என்னால இருக்கு முடியாது.. உனக்கும் இப்படி தோணுச்சின்னா நான் உங்க வீட்ல வந்து பேசறேன்…”

“ இதுக்கு நான் மறுத்தா..?”

“ தெரியும்.. உன் மனசுக்குள்ள நான் இருப்பேன்னு..”

“ ஓ அத்தனை நம்பிக்கையா ருத்ரா..? என்னோட அப்பாகிட்ட சம்மதம் 
 வாங்கறதெல்லாம் இருக்கட்டும்.. வெறும் ரசனை மட்டும் வாழ்க்கையாயிடாது ருத்ரா..உனக்கொரு நல்ல வேலை கிடைச்சி லைப்ல செட்டிலாகு அப்புறம் வீட்ல சொல்லிக்கலாம்.”

இடைப்பட்ட நாட்களில் வேலை தேடி அவனும், மேற்கொண்டு படிக்க அவளும் வெவ்வேறு திசைகளில்..அவ்வப்போது போனில் பேசி கொண்டார்கள். அன்றைக்கு ருத்ராவிற்கு நாக்கில் சனி உட்கார்ந்து விட்டதோ என்னவோ..” நேகா  நான் ஒண்ணு கேட்டா தப்பா எடுத்துகிட மாட்டியே.. இரண்டொரு முறை நீ பைக்ல ஒருத்தன் கூட போனதை பிரபா பார்த்திருக்கான்..நான் ஒண்ணும் தப்பா நினைக்கல… உன்னோட படிக்கிறவனா?”

அவன் கேள்வியில் வெகுண்டவள்..” உன் புத்தியை நீ காட்டிட்டே பார்த்தியா.. இதை நீ கேட்டிருக்கவே வேணாமே.. உன் மனசுக்குள்ள குறு குறுப்பு இருக்கவேதானே கேட்கிற.. ரைட் ருத்ரா இப்பவாவது உன் இன்னொரு முகத்தை காமிச்சியே.. இத்தன நாளா பழகி  நாம புரிஞ்சிகிட்டது இவ்வளவுதானா..? இந்த மாதிரி வர்ற மெல்லிய கீறல் ஒவ்வொண்ணா ஒரு நாளைக்கு மொத்தமா போட்டு ஒடைச்சிடும்..வேண்டாம்.அப்படி உடையறதை என்னால் தாங்க முடியாது. இந்த அழகான நினைகளோடவே நம்ம பாதையில் நாம் போய்க்கலாம்….”

பிரபாகருக்கு வெளி நாட்டில் வேலை கிடைத்த நேரம்.இவனுக்கு இங்கேயே பிஸினஸ் தொடங்க அப்பா பணம் தந்ததும் அதை சொல்ல நேகாவை சந்தித்த போதுதான் அவளின் திருமண அழைப்பிதழை நீட்டினாள்.உடைந்து போய் மனசுக்குள் அழுதான்.

அதற்கு பிறகு இப்போதுதான் சந்திக்கிறான்.

******
“ நேகா அன்னிக்கு விளையாட்டா கேட்டது உன் மனசை எவ்வளவு பாதிச்சதோ .. நீ என்னை விட்டு போன பிறகு கிட்டத்தட்ட ஒரு வருஷம் பைத்தியம் போல்தான் இருந்தேன்னு சொல்லனும்.. எதிலயும் பிடிப்பில்லாம..அந்த சூழ் நிலையில் நண்பர்களோட சேர்ந்து குடிக்க கூட ஆரம்பிச்சேன்.  பிஸினஸில் எக்கச்சக்கமா நஷ்டம்..  என் சொந்தக்காரங்க எல்லாம் இவங்க சேப்ட்டர் அவ்வளவுதான் கைகொட்டி நின்னப்ப..என் அம்மாதான் என்னை தெய்வமா தாங்கினா.எதேதோ முயற்சிகள் அப்புறம் வேலை கிடைச்சது.  கல்யாணம் பண்ணனுமான்னு நான் யோசிச்சப்பா.. அப்ப என் அப்பாவோட உடல் நிலை, அவர் கடைசி ஆசைன்னு உறவுல சுபாவை எனக்கு கட்டி வச்சாங்க..

 ...என் லைப் பத்தி  நான் எவ்வளவு கற்பனைகள் வச்சிருந்தோனோ அதில் கொஞ்சகூட ஒத்து வராதவளாத்தான் அமைஞ்சிருக்கா. அவங்கப்பா  இவளுக்கு ஓரளவு சொத்து வச்சிருக்காருன்னு வேலைக்கு போறதெல்லாம் பிடிக்கலைன்னுட்டா.இருந்தாலும் என் வாழ்க்கையில் அவதான்னு வந்துட்ட பிறகு அவளை கட்டாயப்படுத்தி மாத்தனும்னு நான் நினைக்கலை நேகா.. சில விஷயங்களை சொல்வேன்..அவ ஏத்துக்கலைன்னா விட்டுடறது.மற்றபடி அவ குடும்பத்தை நிர்வகிக்கிறதுல கெட்டிக்காரி தெரியுமா? உறவினர் வீட்டு விசேஷம்னா இவதான் ஓடி ஓடி செய்வா..எல்லார் மனசுலயும் இடம் பிடிச்சுடுவா.என்னை பத்தி எல்லாம் தெளிவா சொல்லியிருக்கேன்.உன் கூட பழகின நாட்களயும்.எந்த ரியாக்ஷனும் காட்டாம சாதரணமாதான் எடுத்துகிட்டா.இரண்டு குழந்தைங்க..  பெரியவன் ஆதர்ஷ்..சின்ன பெண் நேத்ரா. பெண் பிறந்தவுடனே உன் பேரைத்தான் வைக்கனும்னு ஆசையா இருந்துச்சு நேகா.. ஆனா ஒவ்வொரு முறையும் கூப்பிடறப்ப சுபா எதாவது சங்கடமா பீல் பண்ணுவாளோன்னுதான் உன் பேர்ல முதல் எழுத்தையும் என் பேர்ல இருக்கிற கடைசி எழுத்தையும் சேர்த்து வச்சேன்.  எவ்வளவு வாயடி தெரியுமா நேத்ரா.. அவ பேசறப்ப பார்க்கனுமே.. வாய் ஒரு பக்கம் கண் ஒரு பக்கம் போய்  நிறைய மேனரிசம்… ரொம்ப ரசிப்பா இருக்கும். தினம் அவளோட குழந்தையா குழந்தையா விளையாடினாதான் விடுவா.

          சரி நேகா என்னை பத்தியே ரொம்ப பேசி அறுத்திட்டேனா.. உன் வாழ்க்கையை பத்தி சொல்லு..”

“  அவர் ரொம்ப ஸாப்ட் டைப்.. ருத்ரா..சொல்லப்போனா என்னை விட நல்லவர்.எங்களுக்குள்ள எல்லாமே திறந்த மனசுதான்.  எந்த விஷயத்திற்கும் கோபப்பட்டு அவரை நான் பார்த்ததே இல்லை..வீட்ல எப்பவும் எதையாவது ஜோக்கடிச்சிட்டிருப்பார். உன்ன பத்தியும் சொல்லியிருக்கேன் ருத்ரா.. அதுக்கு அவர் என்ன சொன்னார் தெரியுமா…

" ம்.. அவன் தப்பிச்சிகிட்டான்.. நான் மாட்டிக்கிட்டேன்னு..” அவ்வளவுதான் நான் ஓங்கி அவர் முதுகில் ஒரு அடி விட்டேன் தெரியுமா? என்ன ஒண்ணு அவருக்கு கவிதைன்னாலே காத தூரம் ஓடுவார்.ரசனை வேற வாழ்க்கை வேற ருத்ரா.ரசனைகளோட வாழ்க்கை அமைஞ்சிட்டா சந்தோஷமான வாழ்க்கைதான். ஆனால்  அது இல்லைன்னாலும் வாழமுடியாம போயிடறதில்ல.  நான் வேலைக்கு போகனும்னு எல்லாம் அவர் என்னை வற்புறுத்தலை.. என் படிப்பு வீணாக கூடாதேன்னு நானா போறேன்.. எனக்கான தேவைகள்ல அவர் எந்த குறையும் வைக்கறதில்ல..என் பையனை கலெக்டராக்கி பார்க்கனும்கிறதுதான் என் வாழ்க்கையின் அடுத்தகட்ட ஆசை ருத்ரா…”

 அவர்கள் கண்கள் கெஞ்சி விழிகளை மூடும் வரை மாறி மாறி பேசி கொண்டிருந்தார்கள்.பயண களைப்பு கொஞ்ச நேரம் அசதியில் தூக்கம்.கோவை வந்து இறங்கும் நேரம் வந்தது.

“  நேகா.. நாம நினைச்ச  மாதிரி வாழ்க்கை அமைச்சிருந்தா  இன்னும் நல்லாயிருந்திக்குமோன்னு எப்பவாவது தோணியிருக்கா..?

நேகா மெல்லிதாய் புன்னகை ஒன்றை சிந்தி மௌனத்தை பதிலாக தந்து கடந்து 

போனாள்.

ருத்ராவிற்கு மில்டனின் கவிதை ஒன்று நினைவுக்கு வந்து போனது..

இவ்வளவு வெறுமையாகவும்
இவ்வளவு முழுமையாகவும்
ஒரே சமயத்தில் உணர்வது
காதலில் மட்டுமே சாத்தியம்..!


 ‘ருத்ரா.. ஐ மிஸ் யூ..‘என்ற ஒற்றை வார்த்தையாவது அவளிடமிருந்து வராமல் போனது அவனுக்கு எதோ வெற்றிடமாய் தோன்றியது.