Saturday, 30 March 2013

பட்டாம் பூச்சிகள்

விடிந்து வெளிச்சம் பரவியது கூட தெரியாமல் அசந்து விட்டிருக்கிறோமே என்று சுசீலா பதட்டுத்துடன் எழ,

“ என்னமா பசங்கதான் இல்லியே.. நிதானமா எழுந்துக்கோ.. மெதுவா டிபன் செய்தா போதும்..” என்றார்  சிவம்.

இந் நேரம் பிள்ளைகளுக்கு ஸ்கூல் நேரமாக இருந்தால் ஒருவரோடு ஒருவர் முட்டிக் கொள்ளாத குறைதான் ஆளாளுக்கு பறந்து பறந்து வேலை செய்ய வேண்டி வரும். பிள்ளைகளுக்கு தேர்வு முடிந்து விடுமுறை விட்டாயிற்று. மருமகள் அனிதாவும் ஆசிரியை என்பதால் விடுமுறையில் பிள்ளைகளை அழைத்து கொண்டு அம்மா வீட்டிற்கு  சென்று விட்டாள். குழந்தைகளுக்கும் ஒரு மாற்றம் வேண்டும் அவர்கள் மாமா,அத்தை பிள்ளைகளோடு சந்தோஷமாய் விளையாடட்டும். அனிதா கேட்குமுன்னரே சிவமே சொன்னார்..” ஏம்மா அனிதா.. லீவு முடியற வரை அம்மா வீட்டிற்கு போறதா இருந்தா போயிட்டு வா.. நாங்க நல்லாத்தானே இருக்கோம்.. பார்த்துக்கிறோம்.  ரவி  வேணா வாத்துக்கொரு நாள் வந்துட்டு போகட்டும்…”

இன்று ஸண்டே என்பதால் ரவியும் குழந்தைகளை பார்க்க நேற்றே புறப்பட்டு போய்விட்டான்.

குளித்து டிபன் முடித்து விட்டு மதிய சமையலுக்கு காய் வாங்கி வர கிளம்பினார் சிவம்.

“ சார் வெள்ளரிக்காய் வாங்கிக்கோ.. வெய்யில்லுக்கு நல்லது… இந்தா இள நீரையும் எடுத்துட்டு போய் அம்மாக்கு குடு..” காய் காரி சாமர்த்தியமாய் சொல்லி பைகளில் போட்டாள்.

“ உங்களை கடைக்கு போகச்சொன்னா இத்தனையும் அடுக்கிட்டு வந்துடுவிங்க.. உங்க முன் நெத்தியில் இளிச்ச வாயன்னு எழுதி வச்சிருக்கு போலிருக்கு.. இந்த இளநீ எட்டு ரூபா குடுக்கலாம்.. பத்து ரூபாய்க்கு வாங்கிட்டு வந்திருக்கிங்க..” சுசீலா அர்ச்சனை செய்வாள்.

“ விடும்மா பாவம் பெண்பிள்ளைங்க வேகாத வெயில்ல இதெல்லாம் வித்துதான் பொழைக்கறா.. இதெல்லாம் தர்மமா நினைச்சுகனும்மா.. மிஞ்சி போனா எவ்வளவு சம்பாதிப்பா? துணி, நகை வாங்க போனா சொன்ன விலைக்குதான வாங்கறோம். இந்த ரெண்டு ரூபாயில் கணக்கு பார்க்காத..”

“ சிவம் சார்..” குரலை கேட்டு காய்காரிக்கு அவசரமாய் ரூபாயை எண்ணி கொடுத்து விட்டு திரும்பினார்.

“ அடடே.. சண்முகம் பார்த்து எவ்வளவு நாளாச்சுப்பா… புது வீடு எப்படி இருக்கு?”

“ எப்படியோ போகுதப்பா.. பேரப்பசங்க இருக்கறதால.. நேரம் ஓடறது தெரியலை.. ரிடையர்டு ஆயிட்டாலும் வீட்டுக்கு வாட்ச் மேன் உத்தியோகம் பார்க்க வேண்டியதா இல்ல இருக்கு..?” சரி சரி நான் வண்டிதான் எடுத்துட்டு வந்திருக்கேன்.. வாயேன் ஒரு எட்டு என் வீட்டிற்கு போய்ட்டு வந்துடலாம்…”

சண்முகம் கூப்பிடும் போது மறுக்க முடியவில்லை. தவிர என்ன வேலை பெரிசா கிடக்கிறது பின் சீட்டில் ஏறி உட்கார்ந்தார் சிவம்.

சண்முகம் மருமகள் காபி போட்டு கொடுத்து விட்டு போனாள். உள்ளே அவர் பேரன் கம்ப்யூட்டரில் கேம்ஸ் விளையாடிக்கொண்டிருந்தான்.

“ தினேஷ் வாப்பா..  தாத்தாவிற்கு ரெண்டு ரைம்ஸ் சொல்லிட்டு போ..”

குழந்தை ஓடி வந்து காயும் வெயிலுக்கு சம்மந்தமே இல்லாமல்… “ ரெயின் ரெயின் கோ அவே..” என்று பாடி விட்டு மறுபடியும் கம்ப்யூட்டரில் விளையாட ஓடி விட்டது.

“ என்னப்பா சின்ன குழந்தை வெளியில விளையாட விடலாம் இல்ல.. வீட்டுக்குள்ளேயே அதுவும் எப்பவும் வீடியோ கேம்ஸ் விளையாடினா கண் பார்வை என்னாகிறது?”

“ நீங்க வேற சார்.. இந்த ஏரியா ஒரு மாதிரி.. சுத்தி இருக்கறவங்க எல்லாம் படிக்காத ஜனங்க.. அவங்க வீட்டு பிள்ளைங்களோடு இவனை விளையாட விட்டா அவங்க பழக்கமெல்லாம் இவனுக்கு தொத்திக்கும்…அவங்க பேச்சு கூட டீசண்ட்டா இருக்காது.. வெளிய அனுப்பக்கூடாதுன்னு அப்பாகிட்ட சொல்லி வச்சிருக்கோம்…” பேப்பரிலிருந்து தலை நீட்டிய சண்முகத்தின் மகன் ராம்.

 “சரிப்பா.. வா தோட்டத்து பக்கம் போவோம்..” சண்முகம் அழைக்கவும்… அப்பாடா இந்த இறுக்கமான சூழ் நிலையில் இருந்து தப்பிக்கலாம் என்று சிவமும் அவர் பின்னால் கிளம்பினார்.

பக்கத்தில் நிறைய சிறுவர்கள் பட்டாளம் விளையாடி கொண்டிருந்தது. கண்ணா மூச்சி விளையாடி கொண்டிருந்தார்கள். கைகளை இறுக்கி மூடி.. ரைட் என்றதும் விடுவித்தான் அந்த சிறுவன். அவன் தேடுவதற்குள் அவன் முதுகில் நாலைந்து பேர் தொட்டு அவனை அவுட்டாக்கி விட்டனர்.

“ டேய் தம்பி.. இங்க வா..  ஏன்பா அவுட்டாயிட்ட.. ? அவங்க ஒளியறதை லேசா பார்த்திருந்தா கண்டுபிடிச்சிருக்கலாம் இல்லையா?” சிவம் கேட்க..

“ இல்ல தாத்தா.. இந்த வெளையாட்டு பேரு கண்ணாமூச்சி… கண்ணுல்லாம் தொறக்க கூடாது..”

“ பார்த்தியாப்பா… இதான் குழந்தைங்க உலகம் உண்மையானது.. நாமதான் அவங்களை தொலைச்சிட்டிருக்கோம்.. படிக்காதவங்க வீட்டு குழந்தைங்கள்னு உன் பேரனை இவங்களோட விளையாட விட மறுக்கறது எத்தனை அசட்டுத்தனம்?”

அதற்குள் இன்னொரு வாண்டு சண்முகத்திடம் “ தாத்தா தினேஷ்.. ஏன் இன்னும் வெளையாட வர்லை?” என்றது.

“ உஷ்…விரலை உதட்டில் வைத்தவர்.. “ இன்னிக்கு அவங்கப்பா இருக்கார்..  நாளைக்கு வருவான் என்ன…? “ கிசு கிசுப்பாய் சொன்னார்.

சண்முகத்தின் கிசுகிசுப்பில்  பதில் கிடைத்து விடவும்.. நமுட்டு சிரிப்பு சிரித்து வைத்தார் சிவம்.

“சரி தாத்தா…  இது புது தாத்தாவா…? கேட்டு விட்டு ‘டாட்டா’.. சொல்லி முத்தம் வைத்து விட்டு ஓடிப்போனது.

 நட்பு பாராட்ட சாதியும், அந்தஸ்த்தும் பார்ப்பதில்லை குழந்தைகள்..! 

*******************

   நம்ம தலைமுறையிலேயே நம் மழலை பருவங்களில் மறந்த விளையாட்டுக்கள் நிறைய.. இன்னும் நம் குழந்தைகள் விளையாட்டென்பதையே மறந்து விட்டார்கள். வீதிகளில் கூச்சலிட்டு சுதந்திரமாய் ஓடி பிடித்து விளையாடும் குழந்தைகளை  நகர வாழ்க்கையில் பார்ப்பது அரிதாகத்தான் இருக்கிறது. பள்ளி விடுமுறையில் அவர்களை எந்திரமாக்க வேண்டாமே! பட்டாம்பூச்சிகள் பறக்கட்டும்...!