Wednesday, 5 June 2013

நீங்க வயிறு முட்ட தின்பவர்களா? அப்ப...?

 குட்டிக்கதை :   பரிசு

அம்மா  ரெடி  மிக்ஸ்  சமையல்  போட்டி  ஊர் ஊராக நடத்தும் பொறுப்பு சமையல் நிபுணர் செல்லம்மாளிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.  நிறைய ஊர்களில் பரிசுக்குரிய போட்டியாளரை தேர்ந்தெடுப்பது கஷ்டமாகவே இல்லை.  ஆனால்  கும்பகோணத்தில் மட்டும் ஐந்து பேர்  நல்ல சுவையுடன் தயாரித்திருந்தார்கள். அவர்களில் ஒருவரை மட்டும் எப்படி தேர்ந்தெடுப்பது குழம்பித்தான் போனாள்.  ஐந்து பேரில் நான்கு இளம் பெண்கள், ஒருவர் வயதான பெண்மணி.

அவருடன் வந்திருந்த கணவர்இதற்கு போய் என்ன குழப்பம் ஐந்து பேரிடமும் தனித்தனியாக இந்த கேள்வியை கேட்டுப்பார்…” என்று ஒரு யோசனையை சொன்னார்.

ஐந்து பேரையும் வரவழைத்து" சமையல் சுவையாக இருக்க என்ன செய்ய வேண்டும் ?"என்று கேட்டாள்.

"அம்மா ரெடி மிக்ஸில் சமைத்து அதை அழ அழகாக டெகரேஷன் செய்தால் கண்ணை கவரும் ருசி கிடைக்கும் ..."என்று ஒவ்வொரு மாதிரியாக நான்கு இளம்பெண்களும் சொன்னார்கள்.

வயதான பெண்மணி மட்டும், "அம்மா ரெடி  மிக்ஸில் சமைத்து அதை அம்மாவின் அக்கறையோடு பரிமாறும் போது சுவையோ சுவை ..."என்றாள்.
என்னதான் சுவையாக சமைத்திருந்தாலும் அதை அன்போடு பரிமாறினால்தான் சாப்பிட முடியும் என்று சொன்ன வயதான பெண்மணிக்கே பரிசு கிடைத்தது.
                                                               ****

நீங்க வயிறு முட்ட தின்பவர்களா? அப்ப ... உங்க வீட்ல அன்போடு பரிமாறுகிறார்கள். ஸோ அவங்களுக்கு ஒவ்வொரு நாளும் பரிசு எல்லாம் கொடுக்க வேண்டாம் பாராட்டவாவது செய்யுங்களேன்....
( ஆஹா டைட்டில் வந்திடுச்சி...!)

இங்க ஒரு வீட்டு கிச்சன், டைனிங் ...

" என்னங்க சும்மாதானே இருக்கிங்க... இந்த கீரையை கொஞ்சம் கிள்ளுங்களேன்.....
" என்னங்க சும்மாதானே இருக்கிங்க... இந்த தேங்காயை கொஞ்சம் துருவி தாங்க..."
" என்னங்க சும்மாதானே இருக்கிங்க... இந்த காயை கொஞ்சம் பொடியா கட் பண்ணுங்க...."
" என்னங்க..சும்மாதானே இருக்கிங்க.  குக்கர் மூணு விசில் வந்ததும் கொஞ்சம் ஆப் பண்ணிடுங்களேன்..."

டைனிங் :
"ஸ்... ப்பப்பா... ஒரு சீரியல் பார்க்க முடியுதா.. நானே எல்லாத்தையும் செய்ய வேண்டியதாயிருக்கு...வந்து கொட்டிக்கங்க..."
ஹா...ஹா.... 

இதெல்லாம் எங்க வீட்ல நடக்கறதில்லை நம்புங்க.. ஏன்னா நான் எதை போட்டாலும்  ...(வாயை திறக்காம) சாப்பிடறாங்களே அதுவே  பெரிய ஒத்தாசை.... ஹி..ஹி...!




Saturday, 1 June 2013

ஆன்மீகம் என்றால் என்ன...?





 இந்த கேள்வியை நம் பதிவர் தோழி அருணா செல்வம் கேட்டிருந்தாங்க.. அவங்க பதிவில் கருத்தாக போட நினைத்ததை இங்கு பதிவாக போட்டுவிட்டேன். இது எனக்கு தோன்றிய சிந்தனைகள்தான். இதுதான் சரி என்று சொல்லும் அளவிற்கு வயதோ, அனுபவமோ எனக்கு கிடையாது. குற்றமிருந்தால் பெரிது படுத்தாதீர்கள்.

ஒவ்வொரு  மனிதனுக்குள்ளும் வாழ்க்கையின் உயர்நிலையை 
 எட்டி பிடிக்கவேண்டும் என்பதே லட்சியமாக இருக்கிறது. உயர்நிலை என்பது வசதியானவாழ்க்கை..அதில் இன்பம் தருவனவாக நினைப்பது அனைத்தும் புறப்பொருட்கள்தான்!  (வீடு, வாகனம்..இன்னும்பிற)  இந்த புற சந்தோஷங்களை சம்பாதிப்பதிலேயே கடைசி வரை ஓடுகிறான்.எல்லாம் அடைந்து அவற்றால் மகிழ்ச்சியில் திளைத்து இனிமேல் அனுபவிக்க முடியாத   நிலைக்கு கீழே விழும் போது தான் தன்னை பற்றியும்,தனக்குள் இருக்கும் ஆன்மாவை பற்றியும் நினைக்கிறான்.அந்த ஆன்மாவிற்கு இந்த புறபொருள் மகிழ்ச்சி எதுவும் தேவைப்பட்டிருக்கவில்லை. அது அறிந்தது பாவம், புண்ணியம் மட்டுமே. அதுகாறூம் தான் செய்த நல்ல செயல்கள் என்ன..தீயசெயல்கள் என்ன என்று பட்டியல் போடுகிறது. தீய செயல்களுக்கு மனம் வருந்துகிறது.மனிதனாக வாழ தவற விட்ட காலங்களை கனமாக்குகிறது. அவன் சந்தோஷம் என்று சேகரித்த அத்தனையும் அவனுக்கு பிறகு இன்னொருவனுக்கு உரிமையுடைதாக ஆகும் உண்மை புரிகிறது. உரிமை கொண்டாடிய உறவுகள் கூட அவனுடன் பயணிக்க போவதில்லை என்ற யதார்த்தம் தெரிகிறது. இப்போது உணர்கிறான் தன்னுடன் தனக்குள்ளே இருந்து தன்னை விட்டு விலகாமல்  கடைசி வரைகூடவே வரும் ஆன்மா பற்றி.அந்த ஆன்மா மனித வாழ்க்கையில் அன்பும், கருணையும் கொண்டு நல்ல செயல்களையே செய்திருந்தால் மனம் லேசாகி இறப்பு பற்றி கவலை கொள்ளாதவனாக ஆகிறான்.ஆன்மாவை உணர்தலே ஆன்மீகம்.ஒரு இடத்தை சென்றடைய பல்வேறுவழிகள் இருக்கும் உதாரணமாக சைக்கிள், இருசக்கரவாகனம், பேருந்து  விமானம் ஏன் நடைப்பயணமாக கூட இருக்கலாம். இவை போலதான் ஆன்மாவை அடைய பல ஆன்மிக வழிகளை முன்னோர் உருவாக்கினர்.அந்த ஆன்மிக வழிகள் எல்லாமே நல்லசெயல்களை புண்ணியமாகவும்,     தீயசெயல்களை பாவமாகவும் எடுத்து காட்டியது. ஆன்மீக வழியை பின்பற்றியவர்கள் பழி, பாவங்களுக்கு அஞ்சி நற்செயல்கள் செய்வதையே வாழ்க்கையின் நோக்கமாககொண்டனர். நாளடைவில் அந்த ஆன்மிக வழிகள் இனம், மதம் என்ற வேறுபாட்டை பெரிதாக்கி ஒவ்வொருவரும்தன் வழிகள்தான் சிறந்தது என்று ஆன்மீகத்தின் நோக்கத்தையே திசை திருப்பியதால் மத வழிபாடுகளாக மாறிவிட்டது. இந்த வழிபாடுகளில் சிலர் எளிமையாக ஆன்மாவை உணர்ந்துகொண்டிருக்கின்றனர்..சிலர் வெறும் ஆரவாரங்களுடன் தன்னை போலியாக காட்டி கொண்டிருக்கின்றனர்.
     
   நிலையற்ற பொருட்களில் தன்னை தொலைக்காமல் ஆன்மாவை உணர்வதே ஆன்மீகம்.

ஆன்மிகம்னா எல்லாவற்றையும் துறந்துடறது இல்ல. நாம் போற பாதையில் ஒரு முள் இருந்தால் அதை எடுத்து யார் காலிலும் படாமல் எடுத்து ஓரமாக போடுவது கூட ஆன்மீகம்தான்! மற்றவர் துன்பம் அடையகூடாது என்று நினைக்கும் அந்த கருணை இறை நிலைதானே! இந்த இறை நிலையை ஒருமனிதன் தானாக உணர்ந்து செய்யும்போது அவனுக்கு ஆன்மீகம் தேவைப்படவில்லை.அவனை நாத்திகவாதி என்கிறோம்.போதனையால் உணர்ந்து செய்யும்போது ஆன்மீகம் தேவைப்படுகிறது.அவனை ஆத்திகவாதி என்கிறோம்.

 கலப்பட மனிதர்களால் நாத்திகமும் கூட ஆத்திகத்தை எதிர்த்து கொண்டிருப்பதுதான் அதன் வேலை என்ற நிலையை அடைந்து கொண்டிருக்கிறது.

இதற்கு மாற்று கருத்துக்கள் கூட இருக்கலாம்.எனவே என் கருத்துக்களை சரி, தவறுகளுக்கு கொண்டு போகவில்லை.

( இவ்வளவும் பேசிவிட்டு உண்மைய சொல்லனும்னா இப்ப நிறைய சம்பாதிக்கனும்னா ஒண்ணு அரசியல், இல்ல சாமியார்(ஆன்மீகம்) அப்படின்னு இல்ல ஆயிடுச்சி.. இதெற்கெல்லாம் காரணம் ஆன்மாவை உணராத பேராசை பிடித்த மனிதர்களாகத்தானே இருக்கமுடியும்.. அப்ப உண்மையான ஆன்மீகம் எங்கே.. ? )

Thursday, 30 May 2013

கலவர பூமிக்குள் காதல்....

 



  அந்திப்பொழுதுகளுக்கே ஒரு வாசம் உண்டு.  அவன் அவள் வீட்டை கடக்கும் நேரம்.. வாசல் தெளித்து கோலமிட்டு கொண்டே விழிகளால் விசாரிப்பாள்.
அவனும் அப்படியே!
இப்படியே ஒரு மாதம். இப்படியே போய்விடுமா? எப்படியும் பேச வேண்டும்..  அவனுக்குள் ஏக்கம்… மெல்ல தலைசீவும் பாவனையில் ஒரு சின்ன  ஒரு கையசைப்பு’ போய்விட்டு வருகிறேன்’..இமைகளை மூடி திறந்து சரி என்பாள்.
போதவில்லை.. பெரும் மழையிடையே மின்னல்  நொடியில் வெட்டி செல்வது போல  நிமிட பார்வைகளின் துளைப்பு போதவில்லை. நல்ல வேளையாய்  பார்வை எட்டும் தூரத்திலொரு டீ கடை.  தொண்டையும் பார்வையும் விழுங்கி கொள்ள கடை போட்டவனுக்கு  கணக்கில்லாத நன்றி சொல்லிக்கொண்டான்.  தே நீரா.. தேனீரா தெரியவில்லை  எதிரில் அவள்!  அக்கா குழந்தைக்கு அக்கறையாய் சோறூட்டி கொண்டிருந்தாள். ‘ இங்க பார்த்தியா.. பூச்சி.. அங்க பாரு காக்கா.. அங்கு.. இங்கு என்று கைகாட்டி கொண்டிருந்தாலும்  கண்கள் மட்டும்  அவனை காட்டி கொண்டிருந்தது.  பார்வைகளின் பரப்பளவு முடியவில்லை பாழாய் போன தே நீரின் கொள்ளவு முடிந்துவிட்டது. மெல்ல கடக்கிறான் அவள் வீட்டை தாண்டி,
‘ இதப்பாரு கொரங்கு… குழந்தையிடம் சத்தமாய்..’
‘அடி என் செல்ல பிசாசே.. என்னையா சொல்கிறாய்.. என்றாவது கிடைக்கும் அப்போது  இருக்கு உனக்கு’.. குறுஞ்சிரிப்பை கிள்ளி விட்டு கடக்கிறான்.
 அவள் வீட்டை கடக்கவே ஆறு முறை  தே நீர் அருந்தும் வழக்கமாய் போனது.  இரண்டொரு முறையாவது கிடைத்து விடும் ஜன்னல் வளையங்களுள் அவனை தேடும் அவள் விழிகளின் தரிசனம்..!
சந்தேகமில்லை  அவன் மனதுக்குள் அவளும் அவள் மனதுக்குள் இவனும் ஊடுருவித்தான் போயிருக்கிறார்கள்..  கேட்டு விடுவோம்.. கேட்டு விடுவோம்.. மை தொட்டு எழுதியதெல்லாம் உண்’மை’ காதலின் மேன்மை!   வாகாய் சட்டைப்பையில் தஞ்சம் கொண்டது நான்காய் மடித்த அந்த கடிதம்.
எப்படி சேர்ப்பது..?  வாயிலில்தான் நிற்கிறது வண்ண மயில்.. வந்து கொண்டிருந்தான் பொடிபையன்.. சுற்றும் முற்றும் பார்த்தான்.. எல்லோரும் எங்கே போய் தொலைந்தார்கள்..? இருக்கட்டும் அவனுக்காகத்தான் போலும்.  முகவரி, முத்திரை இடாத கடிதங்களுக்கெல்லாம் குட்டிபயல்கள்தான் தபால் காரர்கள்.  மனது இடித்தாலும் வேறுவழியில்லை… லஞ்சம்  காதலையும் விட்டு வைக்கவில்லை.  மிட்டாயை தந்து மின்னலிடம் சேர்க்க சொன்னான். .  நான்காய் மடித்த காகிதம் எட்டாய் சுருங்கி கொண்டது அவள் உள்ளங்கைகளுக்குள்… யாரேனும் பார்த்து விடும் பயம்.
இதயத்தை வடித்திருந்தான். எத்தனை முறைதான் படிப்பது.. இன்னமும் மனமில்லை கிழித்து போட.  தலையணை உறைக்குள் தஞ்சம் கொண்டது. நித்தம் கனவுகளை சுமந்து கொடுத்தது.   கால் மணியில் வருபவள் அரை மணி நேரமாய் நீராடும் அவள் அம்மாவுக்கு தெரியாது மிச்ச மணிகளை கொத்திகொண்டிருப்பது  காதல் வாசிப்பென்று..!
காதல் தேசத்தில் அவர்கள் ராஜாங்கம்! கற்பனை பிரதேசங்களில் அவர்கள் உலா. நாளும் வளர்ந்தது கனவுகளின் கோட்டை. 
யாரோ யாரோவாய் சன்னிதியில் இருவரும் எதிரெதிரே.. இறைவா சேர்த்து விடு இதயங்களை..!
காலம் கணக்கு சொல்லும்.  இடமாற்றம்  அவனுக்கு.. எதோ சொல்லி வந்திருந்தாள்.. முதன் முதலாய் சந்திக்க.. முதல் சந்திப்பே பிரிவை சொல்லவா..?  கண்களில் கர கரத்தது கண்ணீர் வார்த்தைகள். மெல்ல தேற்றினான்..  யுகம் மெய்யென்றால்  திரும்ப வருவேன் மணமுடிக்க!
யுகம் மெய்தான் வருவான்..  சாதியும் சம்பிரதாயங்களும் ஒன்று சேர்க்குமா இல்லை  ஊரும் உறவுகளும் இரண்டு படுமா..? கலவர பூமிக்குள் காதல் கலங்கித்தான் நிற்கிறது..!
 ***************************************************************************************************
( ரசித்து ரசித்து வளர்ந்த கடித காதல் இப்போது இல்லை ! யாரோ எழுதிய காதல் மொழிகள் குறுஞ்செய்திகளாகவும், மின்னஞ்சலாகவும் மாறிவிட்டது.. கால ஓட்டத்தில் காதலும் வேகமாக தோன்றி  அதே வேகத்தில் காணாமல் கொண்டிருக்கிறது. 
சங்க கால பாடல்களில் சுடுகிறார்.. கண்ணதாசன் சொன்னதையே வார்த்தை மாற்றி சொல்லியிருக்கிறார் என்றெல்லாம் கவிஞர் வைரமுத்து பற்றி விமர்சனங்கள் இருந்தாலும் தண்ணீர் தேசம் முதல் மூன்றாம் உலகப்போர் வரை  ரசித்து படிக்காமல் இருக்க முடியவில்லை.  கவிதை தொடர் ஒன்று நாமும் முயற்சிக்கலாமே என ஆவல் வந்தது.. ஆனாலும் நேரங்கள் அதற்கு இல்லை. கண்களில் ஆரம்பித்து கடிதங்களில் வளர்ந்த காதலை பற்றி ஒரு பக்கமேனும் எழுதுவோமே என்று எழுதியிருக்கிறேன்.  படிக்கிறவர்களுக்கு  கவிதையா கதையா தோணுதோ இல்லையோ  ஏதோ ரசிச்சி கிறுக்கிட்டேன்.  ஆஹா ஒருத்தர் டீ கடையில் நின்னு ஸைட் அடிச்சி லவ் லெட்டர் கொடுக்கறதை இப்படியெல்லாம்  எழுதலாமா? ஹா..ஹா..!