Friday, 14 December 2012

“ ராசி…!”


                                                                                        
இரவு மணி மூன்றிருக்கும்..  திடீரென விழிப்பு வந்தது  தினகருக்கு..  பக்கத்து ரூமில் அம்மாவின் விசும்பல் கேட்டுக் கொண்டிருந்தது.  மகன் எதிரில் சோகமாய் இருந்தால் அவனுக்கு வருத்தம் அதிகமாகிவிடும் என்று இரவு நேரத்தில் தனிமையில்  அழுது கொண்டிருப்பாள் என நினைத்தான். 

எதிர்பாராதது எல்லாம் கண நேரத்தில் நடந்து விடுகிறது.
“வைதேகி.. நான் பட்ட கஷ்டங்கள் என் குழந்தைகள் படக் கூடாதுடி .. எனக்கு உழைக்க தெம்பிருக்கு.. கொஞ்ச நாள் பொறுத்துக்கோ..”


“ வாரத்துல ஒரு நாள் கூட ரெஸ்ட் எடுக்காம இப்படி லீவு நாள்ல கூட எதுக்கு வெளி வேலைக்கு போறிங்க.. உடம்பை பார்த்துக்கனும்ல..” அம்மா திட்டும் போதுதான்  அப்பா அடிக்கடி அப்படி சமாதானம் சொல்வார்.

அந்த ஓயாத உழைப்பில்தான் இந்த வீடு, அக்கா கல்யாணம், அவன்  படிப்பு எல்லாமே சாதிக்க முடிந்தது. அதிகமா உழைத்து விட்டார் என்றுதான் கடவுள் ஓய்வெடுக்க சொல்லிவிட்டாரோ என்று நினைத்தான்.

  “ தினகர் வேலைக்கு போயிட்டாண்டி இனி அவன் வாழ்க்கைய அவன் நகர்த்த முடியும்னு எனக்கு நிம்மதியா இருக்கு.. ஒரு நல்ல வாழ்க்கை அமைச்சி கொடுத்திட்டா இனி என்ன இருக்கு  நாம ப்ரீயா இருக்கலாம்…” சந்தோஷமாய் சொன்னார்.

அம்மாவும், அப்பாவும் ஜாதக பொருத்தம் பார்த்து  யமுனாவை பார்த்தார்கள். “ எங்களுக்கு பிடிச்சிருக்குடா..  நல்ல குடும்பம்..  இருந்தாலும் உன் இஷ்டம்தான்..”

எனக்கும் பிடித்துதான் நிச்சயித்தோம்.   இரண்டு மாதமிருந்தது  திருமணத்திற்கு, அதற்குள்தான் இப்படி நடந்து விட்டது. காலையில் எழுந்தவர் உடம்பு என்னமோ செய்கிறது என்று சொன்னவர்தான் அடுத்த நிமிடமே சாய்ந்து விட்டார். பதறி போய் ஹாஸ்பிட்டல் அழைத்து சென்றும் காப்பாற்ற முடியவில்லை.

“ இந்த பொண்ணை நிச்சயம் பண்ண நேரம்தான் நல்லாருந்த மனுஷன் திடுக்குன்னு போய்ட்டார்.  இனி எங்கிருந்து இந்த பொண்ண கட்றது..? “

" காலடி எடுத்து வைக்கறதுக்கு முன்னயே மாமனாரை முழுங்கிட்டா.. இந்த கல்யாணம் அவ்வளவுதான்.."

ஊரின் பலவித பேச்சுக்கள் யமுனாவின் குடும்பத்தை நிலை குலைய வைத்தது. வைதேகி ஒரு சொல்லும் சொல்லவில்லை. பதினைந்து நாள் துக்கம் முடிந்ததும் வைதேகியே சம்பந்தி வீட்டாரை அழைத்து சொன்னாள்,

“ யார் எது சொன்னாலும் கவலைப்படாதீங்க..  அவரோட காலம் அவ்வளவுதான். அதுக்கு  இந்த பொண்ணு என்ன பண்ணுங்க.. இதே மாப்பிள்ளை பார்த்த பெண் வீட்டில் இப்படி நடந்தால் மருமகன் வந்த நேரம்தான் மாமனாருக்கோ, மாமியாருக்கோ இப்படி ஆயிடுச்சின்னு சொல்றதில்லை. ஆனா பெண்ணை மட்டும் ஏன் அப்படி சொல்லனும்? ஒரு பெண்ணா நான் அந்த தப்பை செய்யமாட்டேன். ஜாதக பொருத்தம் பார்த்தப்ப கூட ஜோதிடர் இப்படி ஒரு ஆபத்து வரும்னு சொல்லலையே.. இது இயற்கையா நடந்து போன விஷயம். அவர் விருப்பபட்டு பார்த்த பொண்ணு யமுனா அதனால உங்க பெண்ணே எனக்கு மருமகளா வரனும். குறிச்ச தேதியில் கல்யாணம் நிச்சயமா நடக்கும்… நீங்க ஆக வேண்டியதை பாருங்க..”

“ அம்மா என் பொண்ணு வாழ்க்கை எப்படி ஆயிடுமோன்னு தவிச்சிட்டிருந்தோம்.. இப்படி ஒரு குணவதிக்கு என் பெண்ணை மருமகளா அனுப்பறோம்னு இப்பத்தான் எங்க மனசுக்குள்ள ஒரு அமைதி.. இனிமே யமுனா உங்க பொண்ணும்மா..”
சம்பந்தி கை கூப்பி கண்ணீர் விட்டு கொண்டிருந்தார்.
*********

Monday, 10 December 2012

இது நிஜமா…?





        நாய் குரைக்கும் சத்தம் கேட்டு சுந்தருக்கு தூக்கம் தொலைந்தது.  நாக்கு வறண்டது தண்ணீர் குடிக்கலாம் என்று கதவை திறந்தான். தாத்தா ஹாலில் மெதுவாக நடந்து பாட்டி ரூமிற்கு போவதை பார்த்து அதிர்ந்தான்.  அறைக்குள் தாத்தாவும், பாட்டியும் பேசி கொண்டது தெளிவாக கேட்டது. பாட்டி அழுது கொண்டிருந்தாள்.


     சுந்தருக்கு வியர்த்தது.. தாத்தா இறந்து  ஒரு வாரமாகிவிட்டது.  மனசுக்குள் கிலி பரவியது. மெல்ல அறைக்குள் திரும்பி அப்பாவை எழுப்பினான்… “


      அப்பா..” கை கால் நடுங்க உதற தாத்தா நடந்து போனதை சொல்வதற்குள் வியர்த்து கொட்டியது.


      “ ஹேய்.. கனவு எதாவது கண்டிருப்ப.. பேசாம படு..”  திரும்பி கொண்டார்.
அம்மாவையும் எழுப்ப.. இருவரும் பாட்டியின் அறையில் பேச்சு குரலை கேட்டதும் மொத்தமாய் அதிர்ந்தார்கள். மெதுவாக எழுந்து வெளியில் வந்து  நின்று கொண்டார்கள். அம்மா கையில் சாமி படமும், விபூதியும் வைத்திருந்தாள்.


    “ ஹேய்… பயப்படாதடா.. தாத்தா எல்லாருக்கும் நல்லதுதான நினைப்பார் உன்ன என்ன செய்ய போறார்.. “ அப்பா சுந்தருக்கு விபூதியை நெற்றியில் வைத்து விட்டார்.


    “ கமலா அப்பா வந்த அடையாளத்தை  தெரிஞ்சிக்கலாம்..  இரு..” என்றவர் ஓரமாய் மூட்டையில் இருந்த மணலை வாசல் படி முழுதும் நிரப்பினார். கொஞ்ச நேரம் கழிந்தது.. பாட்டி அறையில்  மௌனம்.  மூன்று பேரும் அமைதியாய் வாசலில் காலடி தடம் பதிகிறதா என்று பார்த்து கொண்டிருந்தார்கள்.


     திடிரென்று ஒரு பாகம் மட்டும் மழை பொழிவது போல் ஈரமாகி கொண்டே ஒரு பாதை போயிற்று… அப்படியே தெரு முனை வரை.  பிறகு
எந்த சுவடும் இல்லாமல் மறைந்து போயிற்று.


   “ கமலா நான் சொல்லலே அப்பா இங்கேதான் இருப்பாருன்னு.. சரி வாங்க உள்ளே போகலாம்..”


குமார் பயத்தில் வர மறுக்க.. நாங்க பக்கத்திலதான இருக்கோம்.. பயப்படாம தூங்கு..

 அம்மா குமாரை அணைத்து கொண்டு தூங்க வைத்தாள்.

 மறுபடியும் பாட்டியின் பேச்சுக்குரல்…

 குமார் அலறி எழுந்தான். “ அப்பா.. மறுபடியும் தாத்தா வந்திருக்கிறாரா..?”

    அவன் அலறலை கேட்டு எழுந்தவர்கள் “ ஏய்.. என்னடா ஆச்சி கனவு எதாவது கண்டியா..? “ உலுக்கினார்கள்.

  “ அம்மா.. பாட்டி.. பேசிட்டிருக்காங்க…தாத்தா… “  உதடுகள் உலர்ந்தது.
தண்ணீர் கொடுத்து ஆசுவாசப்படுத்தி “ இப்ப  டைம் பார்த்தியா.. நாலு மணி.. கொஞ்ச நேரம் போனா பொழுது விடிஞ்சுடும்..”

“ அப்ப பாட்டி யார் கூட பேசிட்டிருக்காங்க?”

“ வா.. பாரு..’ பாட்டி அறை திறந்தேதான் இருந்தது.. தூக்கம் வராமல் பாட்டி

தாத்தாவின் போட்டோ முன்பு அழுது பேசி கொண்டிருந்தாள்.

  “ கமலா சின்ன புள்ளைய கூட வச்சிகிட்டு டி.வி  யில ஆத்மா, முன் ஜென்மம்னு கண்ட கண்ட நிகழ்ச்சியை பார்க்காதன்னு எத்தனை தடவை சொன்னேன். பாரு அவன் கனவுல எதோ பயந்து போயிருக்கான்..”

  “ சுந்தர் கண்ணா நீ தாத்தாவையே நினைச்சிகிட்டு தூங்கியிருப்ப அதான் இப்படி கனவு … ஒண்ணுமில்லடா”

“ அப்ப கனவா..? கனவுல கிராபிக்ஸ்லாம் நல்லா வருதுப்பா… தாத்தா நடந்த போன எடமெல்லாம் மழை மாதிரி கூடவே போச்சுப்பா…” சுந்தர் கண்களை விரித்து கைகளை பரப்பி சொல்ல.. பாட்டி அழுவதை நிறுத்தி சிரித்து விட்டாள்.

                                                   ----------



( பின் குறிப்பு:  ஹா.. ஹா..  இப்படி நான் கனவு கண்டு பயந்ததை(?!)  ஒரு கதையாக்கிட்டேன். ஒரு ரகசியம்- ஒரு சில கதைக்கான கரு என் கனவுலயும்  கிடைக்கும்) 

Friday, 7 December 2012

“ நான் கிறுக்கனா...?”


                                                                                              

“மியாவ்.. மியாவ்.. பூனை சத்தம் போட்டு    ஞாயிறு தூக்கத்தை கெடுத்தது. எழுந்து போர்டிகோவிற்கு சென்று பார்த்தேன் பக்கத்து வீட்டு பூனைகள் காம்பவுண்டில் குதித்து விளையாடிக் கொண்டிருந்தது.”  சே.. கொஞ்ச நேரம் தூங்க முடியுதா பாருங்க பக்கத்து வீட்ல பெரிசா பூனை வளர்க்கிறேன்னுட்டு மூணு, நாளு இம்சைங்களை வளர்க்கிறா. இங்க வந்து அமர்க்களம் பண்ணுதுங்க. பூனை பண்றதெல்லாம் குறும்பு.. அடிச்சா பாவமாம்.” முணு முணுத்து கொண்டே ஜன்னலை மூடினாள் ரஞ்சனி.

நான் பூனைகளையே பார்த்து கொண்டிருந்தேன். பூனை என்னை ஒரு மாதிரியாக பார்த்தது , “ ஆமா நாங்கதான் குறும்பு பண்றோமா? நீங்க குறும்பு பண்றதேயில்லையா? என்றது. நான் பதிலே பேசவில்லை. ஏற்கனவே என் மனைவி என்னைப் பற்றி அவள் அப்பாவிடம் புலம்பி கொண்டிருந்தாள்.

“ அப்பா, மாப்பிள்ளை எஞ்சினியரா இருந்தாலும் எழுத்தார்வம் உள்ளவர்னுதானே சொன்னிங்க எனக்கு என்னமோ கிறுக்கா இருப்பாரோன்னு பயமாயிருக்குப்பா.. நேத்து தோட்டத்தில் செடி கூட பேசிட்டிருக்காருப்பா...”
நான் இல்லை என்று நினைத்து கொண்டு அவள் அப்பாவிடம் போனில் பேசியதை கேட்டு தொலைத்து விட்டேன்.

 நேத்து நடந்ததை சொல்லிடறேன்.. மெல்ல தயங்கி வந்த என் ரஞ்சனி, “ என்னங்க கல்யாணமான புதுசுல பார்க், சினிமான்னு போவாங்க..  நீங்க என்னடான்னா இலக்கிய கூட்டமா கூட்டிட்டு போறிங்க.. இன்னிக்காச்சும் சினிமா போலாங்க.. நான் ரெடியாகறேன்.. நீங்க போய தோட்டத்துல இருக்கிற ரோஜாவை பறிச்சிட்டு வாங்க..” என்றாள்.
வெளிர் ரோஜா நிறத்தில் இருந்த அந்த ரோஜா மனதை கொள்ளை கொண்டது பறித்து விடலாமென்று மெல்ல கை நீட்டிய போது,

‘ வாடும் வரையாவது
என்னை பிரசவித்த
என் தாயோடு இருக்க விடு

ரோஜா கெஞ்சுவது போலிருந்தது. “ ஸாரி.. நீ செடியிலே இரு..” என்று சொல்லிக் கொண்டிருந்தேன் அதை கேட்டுவிட்டுதான் அவள் அப்பாவிடம் புகார் செய்தாள்.என்னை எதிர் பார்க்காமல் கிள்ளி தலையில் செருகி கொண்டு நல்லாயிருக்கா? என்றாள்.  “கொஞ்சங்கூட நல்லாயில்லே..” சொல்லலாம் என்று வாய் வரை வந்த வார்த்தையை முழுங்கி கொண்டேன்.சொல்லிவிட்டால் அவ்வளவுதான் இரவு பட்டினி போட்டுவிட்டுவாள் என்று பொய்யாக சிரித்து வைத்தேன்.

என்னை கிறுக்குன்னு அவ அப்பா கிட்ட சொல்லிட்டிருந்தது கேட்டும் எனக்கு கோவம் வரலைங்க. ஏன்னா என்னை பெத்தவங்களே என்னை புரிஞ்சுக்கலை. “ “போடா  பைத்தியக்காரா.. வானம், மழைன்னு புலம்பிட்டிருக்காம பொழைக்கிற வழியை பாரு..” இலக்கியம் படிக்க ஆசைப்பட்ட என்னை மெக்கானிக்கல் எஞ்சினியர் கட்டாயப் படுத்தி படிக்க  வைத்தார்கள். மெக்கானிக்கல் படிச்சி எக்கனாமிக்கலா நல்லா சம்பாதிக்க ஆரம்பிச்சதும் உடனே கல்யாணம்.

நான் என் வாழ்க்கையை கவிதையா வாழ்ந்து பார்க்கிறேன்ங்க.. அது புரியாம எனக்கு வேலை வெட்டி இல்லைங்கிறாங்க..
தூரத்தில பச்சை பசேல்னு புல்வெளி ... கயிற்று கட்டில்ல படுத்து கிட்டு வருடி போற தென்றல் சுகத்தோட மெலொடியஸா பாட்டை கேட்கும் போது எத்தனை ஆனந்தமாயிருக்கும் .. இப்படி எல்லாம் பேசினா ஓடிடறாங்க. ரசனை இல்லாத பிறவிங்க.

அதுக்குதாங்க நான் இப்ப எல்லாம் என் ரசனைகளை மனசுக்குள்ளேயே வச்சிக்கிறது. என் பெண்டாட்டி என் ரசனைகளோடு ஒத்து போகலைன்னாலும் தீர்மானமா சொன்னா, “ நீங்க எதையாவது கிறுக்கிட்டு போங்க.. மாசம் ரெண்டு புடவை,  ஞாயித்து கிழமையில ஹோட்டல், பீச்னு இப்படி கூட்டிட்டு போனா உங்களை என்ன சொல்ல போகிறேன்..?” என்று. அவ உலகம் அவ்வளவுதான்.

“ கீச்..கீச்  சத்தம் கேட்டதும் திரும்பி பார்த்தேன். எங்கள் வீட்டு மரத்தில் இருந்த குருவி கூட்டில் இருந்த இரண்டு குருவிகளும் புதிதாய் தெரிந்த மற்ற இரண்டு குருவிகளுடன் சண்டை போட்டுக் கொண்டிருந்தது. பார்க்க எல்லைப் போர் மாதிரி இருந்தது. ஒரு வழியாய் புதிய குருவிகள் வலியோடு ஓடி விட்டது. நிம்மதியாய் கூட்டில் உட்கார்ந்து கொண்டன. ஆண் குருவி என்னை பார்த்து “ எப்படி பார்க்கிறான் பாரு கல்லுளி மங்கன் மாதிரி ஒரு கோலை எடுத்து விரட்டி இருக்கலாமில்லையா..?” என்றது.

“  ஆமா.. ஆமா சண்டை போட்டா சுவாரஸ்யமா பார்க்கிறதுதானே இவனுங்க வேலை.. “ என்றது பெண் குருவி.

“ ஏய் விட்டா பேசிகிட்டே போவிங்களா மனுஷந்தான் சண்டை போடறான் உங்களுக்கென்ன வந்துச்சி..? என்றேன்.

“ ம் இது நாங்க கஷ்டபட்டு கட்டின கூடு அதுல அதுங்க ரெண்டும் உட்கார்ந்துக்க பார்த்துச்சி.. நீ கட்டின வீட்ல பக்கத்து வீட்டுக்காரன் வந்து குடியேறினா சும்மா விட்டிருவியா...?

“ அட பாவிங்களா.. உங்களுக்கும் கூட சுய நலம் பரவிடுச்சா..?

“ ம் பின்ன  மனுஷனை பார்த்து பார்த்து எங்களுக்கும் அந்த புத்திதானே வரும்..?

போய்யா.. போ   நாங்க ரெண்டு பேரும் ஜாலியா டூயட் பாடனும். பொறாமையா பாக்க போற...”

பிறகு ரெண்டும் துள்ளல்... தாவல் கீச்.. கீச் ஒரே கும்மாளம்.
எட்டி  பார்த்த ரஞ்சனி , “ ச்சே.. நம்ம வீட்டுல வந்துதான் இதுங்க அமர்க்களம்  பண்ணனுமாக்கும்... போர்டிகோ மொத்தம் நாசம் பண்ணுதுங்க.. ஒரே கூச்சல் வேற இன்னிக்கு ஒரு வழி பண்ணாம விட போறதில்லை சொல்லிக் கொண்டே உள்ளே போனாள்.

“ பாருய்யா என்னமோ இவ வீடாமே... நம்மளை மாதிரி இவளேவா கட்டினா..? இவளை விடவா நாம் சத்தம் போட்டிட்டிருக்கோம்? வாயாடி எந்நேரமும் புருஷனை தொணைச்சிட்டேயிருப்பா...” பெண் குருவி கிண்டல் பேச, ஆண் குருவி எக்காளம் போட்டது.

அதற்குள் கையில் கோலோடு வந்த என் மனைவி கூட்டை ஓங்கி தட்டினாள். பறவைகள் ரெண்டும் தப்பித்தோம்.. பிழைத்தோம் என்று பறந்தது. நில அபகரிப்பு வழக்கில் குற்றவாளியை தண்டித்தது போல சந்தோஷமா “ அப்பா... இனிமே தொல்லை இல்ல சொல்லிக்கொண்டே உள்ளே போனாள்.

“ என்னங்க.. அந்த டோரை சாத்துங்க கொசுங்க தொல்லை “ உள்ளேயிருந்து சத்தம் போட்டாள்.

டோரை சாத்திவிட்டு வராண்டாவில் உட்கார்ந்து கொண்டு கொசுவின் இசையை ரசிக்க ஆரம்பித்தேன்.

“ அடியேய் இவனை பாருடி எவ்வளவு கடிச்சாலும் தாங்கறான்..” பெண் கொசுவிடம் சொல்லிக்கொண்டே இரண்டும் ஸ்ட்ரா போட்டு ரத்தத்தை உறிஞ்சி கொண்டிருந்தது.
                                     
( டிசம்பர் 14- 20 இன்றைய பாக்யா இதழில் வெளிவந்துள்ளது)
                                                                          

பொன்னு விளையுற பூமி...!





இந்த முறை ஊரில் உள்ள  நிலத்தை விற்று விடுவது என்று தீர்மானித்து விட்டேன். ஜோதியின் பிடுங்கல் தாளாமல். என்னங்க உங்க பிரெண்டு எல்லாம் சொந்த வீடு கட்டி , கார் வாங்கி பந்தாவா போய்கிட்டிருக்காங்க..  இன்னமும் வாடகை வீட்டை கட்டிகிட்டு அழ வேண்டியதாயிருக்கு.. கொஞ்ச லோன் போட்டு மிச்சத்துக்கு ஊர்ல இருக்கிற நிலத்தை வித்துடுங்களேன். அங்க ஷூ கம்பெனி ஒண்ணு ஆரம்பிக்க போறாங்கன்னு பக்கத்துல இருக்கறவங்களெல்லாம் நிலத்தை தந்துட்டாங்களாம். இன்னமும் உங்கப்பாதான் வீம்பா வச்சிகிட்டிருக்கார்..”  வேணும்கிறது அவருக்குதான் பென்ஷன் வருதே பேசாம எப்படியாவது விக்க பாருங்க..

தினம் இதே புராணம் பாடுவாள். உதாரணத்துக்கு  சேகரையும், பிரகாஷையும் கம்பேர் பண்ணி சொல்லி கொண்டே சண்டை.

ஒரு சமயம் போல் இருக்காது. எனக்கும் பொறுமை இழந்துவிட்டால் வெடிப்பேன். ஆமாடி அவனுங்க பொண்டாட்டி சாமர்த்தியக்காரிங்க போய் போய் ஆத்தா வீட்லருந்து அள்ளிகிட்டு வந்துடறாளுங்க.. அவனுகளுக்கு என்ன செலவு இருக்கு..  சம்பளத்தை அப்படியே சேர்த்து வைக்கிறானுங்க.. நான் என்ன உன்ன இது வாங்கிட்டு வா.. அது வாங்கிட்டு வான்னா சொல்றேன்.. ?”

ஓஹோ..  ஐயாவுக்கு மாமியார் வீட்லர்ந்து வாங்கிட்டு வரனுமாக்கும்.. எங்க வீட்ல ஒண்ணுமில்லைன்னு தெரிஞ்சுதானே கட்டிட்டு வந்திங்க.. இப்ப எதுக்கு குத்தி காட்டறீங்க.." உடனே ஒப்பாரிதான்.

ஹேய்.. நானா கேக்கறேன்.. சும்மா சீண்டிகிட்டே இருந்தா அவனால எப்படி முடியுதுன்னு சொன்னேன். இத பாரு வருமானத்துக்கு தகுந்தா மாதிரிதான் வாழ முடியும். வீடு வாங்கலாம் உடனே முடியாது..”

அவளை அடக்கி வந்தாலும்,  வீட்டு ஓனர் வருஷத்துக்கொரு முறை ஏற்றிக் கொண்டே போகும்போது.. மாச சம்பளத்தில் ஒரு தொகை போகும் போது வருத்தமாகதான் இருந்தது. எப்படியாவது கஷ்டப்பட்டு கட்டிட்டா நிம்மதியா இருக்கலாம, என் வாரிசுகள் சுமன் ஆறாவதும்,  காவ்யா இரண்டாவதுமாக படிக்கிறார்கள். இன்னும் சில வருடங்களில் அவர்களுக்கு செலவு செய்யவே சரியாக இருக்கும் என்று தோன்றியது.

பொங்கலுக்கு என்றுதான் வருஷத்திற்கொரு தரம் ஊர்ப்பக்கம் போக முடிகிறது. பேரப் பிள்ளைகளை பார்க்க வேண்டும் என்று நினைத்தால் அம்மாவும், அப்பாவும் புறப்பட்டு பத்து நாட்கள் தங்கிவிட்டு போவார்கள்.  அப்போதெல்லாம் குழந்தைகளுக்கெல்லாம் ஒரே கொண்டாட்டம் தான். இங்கேயே இருக்க சொன்னால் மறுத்து விடுவார் அப்பா,  அங்க என்னப்பா  குறை சொப்பு சாதம் பொங்கிட்டு உங்கம்மா பொழுதண்ணிக்கும் எங்கூடதான் வம்பு அளந்திட்டிருப்பா.. சாயங்காலமானா சிவன் கோயில் ஒரு நடை போய்ட்டு வந்துட்டா பொழுது போயிடுது..”

அப்பா கிராமத்து பள்ளி கூடத்தில் வாத்தியாராக இருந்து ரிடையர்டு ஆனவர். தாத்தா விவசாயம் பார்த்துதான் கஷ்டப்பட்டு அப்பாவை படிக்க வச்சிருக்கார். அப்பாவும் எனக்கு நினைவு தெரிந்தும் வயல் வேளைகள் செய்தது நினைவிருக்கிறது. அதிகாலை மூன்று மணிக்கே எழுந்து வயலுக்கு தண்ணி காட்ட போய்விடுவார். எட்டு மணிக்கு வந்து சட சடவென்று குளித்து விட்டு அம்மா தயாராக கட்டியிருக்கும் கேரியரை சைக்கிளில் மாட்டிக் கொண்டு கிளம்பி என்னையும் அழைத்து கொண்டு கிளம்பி விடுவார்.

தவிர்க்க முடியாமல் சில சமயங்கள்ல அப்பாவோட வகுப்பில என்னையும் போட்டுருவாங்க.. அப்பதான் அப்பாவை பார்த்து பிரமிச்சேன். தமிழ் இலக்கணத்தை இத்தனை சுலபமா அப்பா மாதிரி யாரும் சொல்லி தரமுடியாதுன்னு.

வாத்தியார் புள்ள மக்குன்னு சொல்வாங்க.. நான் மக்கா இல்லாட்டியும் சுமாராதான் படிச்சேன். அப்பா என்னை அதற்காக திட்டியதே இல்லை.  என்னால் என்ன முடியுமோ அதை படிக்க வைத்து வேலைக்கு போன பிறகு கல்யாணமும் செய்து வைத்தார். “ சரவணா உனக்கு பணக்கார பொண்ணா, சம்பாதிக்கிற பொண்ணா பார்க்கலைன்னு வருத்தப் படாதே.. உங்கம்மா வீட்லர்ந்து நான் எதுவுமே கேட்கலை.. அவ சிக்கனமா குடும்பம் நடத்தின பாங்கு இப்படி உன்னை படிக்க வச்சி உங்க அக்காவுக்கும் கல்யாணம் பண்ணி வைக்க முடிஞ்சது. “ என்பார்.

பஸ்ஸை விட்டு இறங்கி என் வீட்டிற்கு  நடந்தோம். முன் போலில்லை செம்மண் புழுதியில்லாமல் தார் ரோடு போட்டிருந்தார்கள் . எங்கள் வீட்டிற்கு செல்லும் முனையில் அந்த புது வீடு பிரமாண்டமாய் இருந்தது. அடடே இங்க பானைக்காரம்மாதான இருந்தாங்க.? ஒருவேளை இடத்தை யாருக்காச்சும் வித்துட்டு போயிருப்பாங்களோ என்று யோசிக்கும் போதே பானைக்காரம்மா  எதிர் பட்டாள்.
“ அடடே என்னப்பா நல்லாயிருக்கியா ? நம்ம வீடுதான் புள்ளைங்கள்ளாம்  படிச்சி நல்லா சம்பாதிக்க ஆரம்பிச்சிட்டாங்க.. பெரியவனுக்கு பொண்ணு பார்த்திட்டிருக்கேன்.  கல்யாணத்துக்கு பத்திரிக்கை வைக்கிறேன் அவசியம் வரனும்..”

பாவம் கணவனில்லாமல்  கஷ்டபட்டு பானை வேலை செய்தே பிள்ளைகளை படிக்க வைத்தாள்.

 வீட்டிற்கு சென்றதும் அம்மா எனக்கு பிடித்ததாய் சமைத்து வைத்திருந்தாள். அப்பா குழந்தைகள் வைத்து கொள்ள தோட்டத்திலிருந்து மருதாணி பறித்து வந்தார். சாப்பிட்டு முடித்து பொதுவாக பேசிவிட்டு நிலத்தை பற்றி பேச்செடுத்தேன்.

“அப்பா.. நம்ம நிலம் பயிரில்லாம சும்மாதானே கிடக்கு.. பாக்டரிக்காரங்க நல்ல விலைக்கு கேட்கறாங்களாமே கொடுத்துடலாமில்ல..”
அப்பா கொஞ்ச நேரம் மௌனமாய் இருந்துவிட்டு,  “ நீ சொல்றது வாஸ்தவம்தாம்பா.. நிலம் சும்மாதான் கிடக்கு. என் அப்பா காலத்தில மூட்டை மூட்டையா நெல் குவிச்சதும், கூடை கூடையா களாக்காய் பறிச்சதும் நினைச்சு பார்த்தா கனவா இருக்கு.. இப்ப எங்க வயக்காட்டு வேலைக்கு ஆளும் கிடைக்காம என்னால ஒத்தையா பார்க்க முடியாம விட்டுட்டேன்.. சும்மா கிடக்கிறது கஷ்டமாயிருக்கு.. அதுக்காக பயிரு விளைஞ்ச மண்ணில் பாக்டரி பார்க்க மனசு எடம் கொடுக்கலேப்பா.. ஒரு பொருள் ஒரு காலத்துல உபயோகமா இருந்து ஒரு நேரத்துல பிரயோஜனப் படலைன்னா அது நமக்கு வேண்டாததா ஆகிடறது அந்த பொருளோட தப்பா. பிரயோஜன படாத மாதிரி  நினைச்சுக்கறது நம்ம மனசுதான். எங்கூட கைகொடுக்க ஒரு ரெண்டு ஆள் கிடைச்சாக் கூட போதும்.. அன்னலட்சுமி நிறைஞ்சி கொட்டுவா..  ஆனாலும் நீ கேட்டு நான் எதுவும் மறுத்ததில்லை.. யோசிச்சி ரொம்ப அவசியம்னா.. உன் விருப்பபடி செய்..!”

சரிப்பா.. பார்க்கலாம். நான் இளங்கோ வீடு வரை போய்ட்டு வர்றேன். என் நண்பனை பார்க்க கிளம்பினேன். 

“சரவணா அப்படியே வரும்போது புதுப்பானை வாங்கிட்டு வாப்பா. முன்னல்லாம் நம்ம   நெலத்து புது அரிசிதான் பொங்க வைப்போம். ஆச்சு ஏழெட்டு வருஷமா ஒண்ணுமில்ல.. “

நண்பனுடன் பேசிவிட்டு அம்மா சொன்னது ஞாபகம் வந்ததால் கடை பக்கம் கிளம்பினேன். “ தம்பி புது பானை வாங்கிட்டு போப்பா..” பானைக்காரம்மாவின் குரல் கேட்டதும் திரும்பினேன். எழுபதுக்கு மேல் பானைகளை அடுக்கி வைத்திருந்தாள். சுற்றி கூட்டம் வேறு. கொஞ்ச நேரம் நின்றிருந்து ஒரு பானையை எடுத்து கொண்டேன்.” ஏம்மா புள்ளைங்கல்லாம் நல்லா சம்பாதிக்கறாங்க இல்ல எதுக்கு இப்ப போய் கஷ்டபடறே.. “

அட என்னப்பா இப்படி கேட்டுப்பிட்ட.. இதுல என்ன கஷ்டம் இருக்கு.. எங்களுக்கு சாப்பாடு போட்டு இந்தளவுக்கு வளர்த்ததே இந்த தொழிலுதான.. இப்ப பானை யாரு உபயோகப்படுத்தறா.. இப்பல்லாம் பொங்கல் சீசன்லதான் வியாபாரம்.. சும்மாருக்க முடியுமா அதான் கடை போட்டுருவேன். . ஏன் தம்பி  நீ சம்பாதிக்க ஆரம்பிச்சதும் உங்கப்பாவோட வாத்தி வேலைய விட்டுடவா சொன்ன..? இத மட்டும் ஏன் குறைச்சலா நினைக்கனும்..? எனக்கு தெரிஞ்ச வேலைய நான் செய்யுறேன்..”

அவள் சொன்ன பேச்சில் நியாயமிருந்ததால் மேற்கொண்டு பேச முடியாமல் பானை வாங்கி கொண்டு நகர்ந்தேன்.

பொங்கல் படைத்து சாப்பிட்டு எல்லோரும் தொலைக்காட்சி முன்னர் உட்கார்ந்தோம். எதோ ஒரு நடிகை பொங்கல் பானையில் பொய்யாய் சோப்பு நுரை பொங்க பொங்கல் கிளறி  நிகழ்ச்சி நடத்தி கொண்டிருந்தாள்.

இன்னும் கொஞ்ச நாள் போனா.. கரும்பு கூட பிளாஸ்டிக்கில வச்சி கொண்டாடுவாங்க. விவசாயத்தோட நிலம அப்படி போயிட்டிருக்கு.. இன்னும் இவங்க பேரன் பேத்தி காலத்துல சாப்புடறதுக்கு சாப்பாட்டுக்கு பதிலா மாத்திரை தயாரிச்சாலும் தயாரிப்பாங்க..” என்று அப்பா காவ்யாவை மடியில் உட்கார்த்தி வைத்து கொண்டார்.

லீவு முடிந்து கிளம்பும் போது, “ அப்பா..  நிலத்தை விக்க வேணாம்பா..  அடுத்த மாசம் வர்றேன் தென்னங்கண்ணாவது  வச்சிடலாம்..” கிளம்பினோம்.

“ஒரு நேரத்துல பிரயோஜனப் படலைன்னா அது நமக்கு வேண்டாததா ஆகிடறது அந்த பொருளோட தப்பா?” என்று படிச்ச வாத்தியாரும், “  இத மட்டும் ஏன் குறைச்சலா நினைக்கனும்..? எனக்கு தெரிஞ்ச வேலைய நான் செய்யுறேன்..” என்று படிக்காத பானைக்காரம்மாவும்  நடத்திய பாடத்தில்   நிலத்தை விற்கும் முடிவை மாற்றினேன்.

“ ஜோதி.. எப்படியும் வீடு கட்டிடலாம்.. கொஞ்ச நாள் பொறுத்துக்கோ.. அடுத்த தையில்  நல்ல காலம் பொறக்கும்.. “
                                                               
                                                **********

Wednesday, 5 December 2012

யுகந்தோறும் காத்திருப்பேன்…!

காத்திருத்தல் அலுப்பான
விஷயம்தான்-
காதல் வராத வரை..!
 நொடிகளும், நிமிடங்களும்
கரைய.. கரைய..
விழிகள் மட்டும்
திசையில்  தேங்கியிருக்கும்..
வந்து விட்டால் பேசிக்கொள்ள
வராது போனால்
திட்டி கொள்ள
 ஒத்திகை அரங்கேறும்..
கணங்கள் கூடினாலும்
காத்திருத்தல் அலுப்பதில்லை-
காதலில்..!
 ******

அன்பே..இன்றும்
தாமதமாய் வா..
நேற்று போலவே
மன்னிப்பாய்…
முத்தமொன்று 
கிடைக்குமென்றால்..!
********

Tuesday, 4 December 2012

உயர்ந்த உள்ளம்







ஏழ்மையால் துவண்ட உள்ளங்களுக்கு
தேடிப்போய் உதவிகள் செய்தவர்.!
தன் வருவாயையும் தனக்கென கொண்டதில்லை
தன்னை தேடி வந்த கோடிகளையும்-
 நற் பணிக்கே ஈன்றவர்..!
எளிமை கொண்ட மனிதன்
வலிமையான  சமுதாய  தொண்டன்..!
திரு.பாலம் கல்யாண சுந்தரம் பற்றி  தெரிந்தவர்களுக்கு  அவர்கள் சமுதாய தொண்டினை நினைவுப் படுத்தவும், தெரியாதவர்களுக்கு அறிந்து கொள்ளவுமே இப்பதிவு.
"பாலம் ஐயா" அவர்கள் நெல்லை மாவட்டத்துக்காரர். 
இவர் மாணவராக இருந்த போதே இந்தியாவிலே தேசிய பாதுகாப்பு நிதிக்கு நன்கொடை அளித்த முதல் மாணவன் என்று கல்யாண சுந்தரம் தமிழ்நாட்டுக்கே பெருமை சேர்த்துள்ளார்.
 ஸ்ரீவைகுண்டம் குமர குருபரர் கலைக்கல்லூரியில் நூலகராக பணியாற்றியவர்.
தனக்கு வந்த பென்ஷன் தொகை 11 லட்சம் ரூபாயை அப்படியே குழந்தைகள் நல நலநிதிக்காக தந்தவர்.
அமெரிக்கா வழங்கிய 30 கோடி ரூபாயை உலக குழந்தைகள் நலனுக்காக கொடுத்தவர்.
ஓட்டல் ஒன்றில் ஊழியராக வேலை செய்து அதன் வருமானத்தை மற்ற நற்பணிகளுக்காக கொடுத்தவர்.
சூப்பர் ஸ்டார் ரஜினி இவர் நற்பண்புகளை கண்டு "இவரை தந்தையாக" தத்து எடுத்து வீட்டில் வைத்திருந்தார். தன்னை சந்திக்க வரும் அறிஞர் பெருமக்களை சுதந்திரமாக சந்திக்க முடியவில்லை என்று ஒரு சிறிய அறையில் தங்கி உள்ளார். 
இவரின் தொண்டுகள்:
ஏழை எளிய மாணவர்களை தத்து எடுத்து கொள்ளுதல்.  மாணவ மாணவியர்களின் கல்வி வளர்ச்சிக்கு சீருடை, நோட்டு புத்தகம் வழங்குதல்

  10 மற்றும் பிளஸ் 2 பொது தேர்வில் மாநில அளவில் மாவட்ட அளவில் அதிக மதிப்பெண் பெறும் அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு பரிசு வழங்குதல்.

  பள்ளியில் ஒவ்வொரு வகுப்பிலும் நல் ஒழுக்கம், பொது அறிவு, அதிக மதிப்பெண் ஆகியவற்றுடன் தேர்வு அடையும் மாணவர்களுக்கு பரிசு வழங்குதல்.

அறிவு பரப்பும் ஆக்க பணியில் அயராது உழைக்கும் திரு கல்யாண சுந்தரனாரின் கடமை உணர்வு பாராட்டுதற்குரியது.

Sunday, 2 December 2012

அசோகர் சாலையோரத்தில மரத்தை நட்டு வச்சார்.. ஆனா இவிங்க..






வருடம் : கி .பி 2050 , இடம் : தமிழ் நாடு

" பொது மக்கள் துணி காயபோடுறதுக்கு வசதியா தெருவெல்லாம் தூணை நட்டு வச்சு , அதுக்கு குறுக்கால கம்பி கெட்டி வச்சிருக்காங்களே அந்த கால ஆட்சியாளர்கள்..அவங்கல்லாம் சிறந்த ஆட்சியாளர்கள்தானே டீச்சர்....! "

" அப்படி இல்லை மாணவர்களே , அந்த காலத்தில் இதற்கு பெயர் எலெக்ட்ரிக் போஸ்ட்..இதன் வழியாகத்தான் மின்சாரம் என்னும் பொருளை கொண்டு சென்றார்கள்..
அதைதான் நாம் துணி காயபோட பயன்படுத்திக்கொண்டிருக்கிறோம்.. "