Saturday 22 March 2014

படையல்....

காலையில் ஆறுமணிக்கெல்லாம் போன் மணி அடித்தது.. இது போன்ற நேரங்களில் போன் வந்தாலே எதோ ஒரு கலக்கம்  வந்து ஒட்டிக்கொள்ளும்...  போனை எடுக்க பயந்து ‘ நீங்களே பேசுங்க “... கணவரிடம் தந்தேன்.

காதில் வைத்த அவர், “ ஓ.. சாரி.. அப்படிங்களா எப்ப என்ன ஆச்சு எத்தனை மணிக்குண்ணா..?” என்று கேட்கும் போதே எதோ ஒரு துக்க செய்திதான் என்று புரிந்து பதட்டமாகிவிட்டது.

“ சுஜி  உங்க சித்தப்பா போய்ட்டாராம்டி.... ஈவ்னிங் அஞ்சு மணிக்கு எடுப்பாங்களாம்.. நீ சீக்கிரம் கிளம்பிடு... நான் ஆபிஸ் போய்ட்டு கொஞ்சம் வொர்க் இருக்கு அது முடிச்சிட்டு ஒன் அவர்ல கிளம்பி வர்றேன்...”

சித்தப்பாவிற்கு ஏற்கனவே ஒரு முறை ஹார்ட்-அட்டாக் வந்திருக்கிறது.. இந்த முறை காப்பாற்ற முடியவில்லை... சித்தப்பா எப்படி போய்ட்டாருன்னு நம்ப முடியலை... சித்தப்பாவை மாதிரி சுறு சுறுப்பான ஆளை பார்க்கவே முடியாது... எல்லா விசேஷத்துக்கும் அவர்தான் முன்ன நிப்பார்... ஒரு குரல் கொடுத்தாரானால் எட்டூருக்கு கேக்கும்... கல்யாண விசேஷத்துல பொண்ணு ரூம்ல மேக்கப் பண்ணிக்கிட்டு லேசுல மேடைக்கு கிளம்பமாட்டாங்க... சித்தப்பா வந்தாருன்னா ஒரே கூச்சல்...” ஏம்மா எவ்வளவு நேரம் தான் மேக்கப் பண்ணுவீங்க... எல்லாம் நல்லாத்தான் இருக்கீங்க... சட்டு புட்டுன்னு புடவைய மாத்தி மேடைக்கு அழைச்சிட்டு வாங்க... முகூர்த்த நேரம் போய்க்கிட்டே இருக்கு... இப்ப வர்றீங்களா இல்லையா..?”  இரண்டு மூணு தரம் சத்தம் போடுவார்... அவ்வளவுதான் கல்யாண பொண்ணை சிங்காரிக்கிற கூட்டம் மாட்டை ஹோய்.. ஹோய்...னு ஓட்டினா வேகமா ஓடுமே அதுமாதிரி வேக வேகமா டிரஸ் பண்ணி விடுவாங்க...

        “ இப்படி ஒரு சித்தப்பா இல்லைன்னால இவளுங்க லேசுல நகர மாட்டாளுங்க...”  அத்தை முணுகுவாங்க.

தாலிகட்டி சாப்பாடு முடிந்து பொண்ணை பேக் பண்ற வரை சித்தப்பா பம்பரமா சாட்டை எடுத்து ஓட்டாத குறையா வேலை வாங்குவார்.. எல்லா விசேஷமும் அதது நேரத்துக்கு சரியா முடிஞ்சிடும். எல்லாரும் பெருமையா பேசுவாங்க சித்தப்பா இல்லைன்னா இவ்வளவு சரியா வேலை முடிஞ்சிருக்காது...

விசேஷம் மட்டுமில்லை இறப்பு வீடுகளுக்கு சென்றாலும் அங்கு சித்தப்பாதான் ‘ இதை செய்.. அதை செய்..’ என்று வழிமுறைகள் சொல்லிட்டிருபாரு.... “ தேவாரம் படிக்கிறச்சே யாரும் அழக்கூடாது... சித்த நேரம் அமைதியா இருங்கோ...” கூட்டம் அமைதியாகிவிடும்.

இப்போது சித்தப்பா அவசரமில்லாமல் கண்ணாடிபெட்டிக்குள் உறங்கி கொண்டிருந்தார்.  “ வாடிக்கண்ணு.... சித்தப்பா போய்ட்டாரும்மா... “ சித்தி கையை பிடித்து கொண்டு அழுதாள்.
 நான் சிறிது நேரம் சித்தப்பாவையே பார்த்து கொண்டிருந்தேன்.. “ யாருப்பா எங்களையெல்லாம் இனி வழி நடத்துறது?”  எனக்கு  அழுகையை வெளிப்படுத்த தெரியாது... மனதுக்குள் உணர்வுகளை தேக்கி கொண்டு அமைதியாக உட்கார்ந்து விட்டேன்.. யார் யாரோ வந்து திடீர் திடீரென்று பாட்டு பாடி சித்தியை கட்டிக்கொண்டு அவரின் அழுகையை அதிகப்படுத்திக் கொண்டிருந்தார்கள்.. அப்படி அழ வைத்து விட்டு புடவை தலைப்பால் கண்ணையும், மூக்கையும் துடைத்து கொண்டு பின் பக்கம் உட்கார்ந்து , “ ஏண்டி மல்லிகா அவங்க பேத்தி, பொண்ணுங்கன்னு ஒண்ணாவது வாயை திறந்து அழுவுதா பாருடி... எல்லாம் அப்படியே குதிர் கணக்கா உட்கார்ந்து இருக்காளுங்க...” என்று வம்பளந்து கொண்டிருந்தார்கள்... எதற்கோ பின் பக்கம் வந்த என்னை பார்த்த அவர்கள், “ ஏண்டி சித்தப்பான்னு வாய் வரலையே ஒனக்கு?”
 துக்கத்தை அழுகையாய் வெளிப்படுத்தினால் மட்டும்தான் உலகம் நம்பும் போலும்.
ஆயிற்று சித்தப்பாவை வழியனுப்ப குளிப்பாட்டி கொண்டிருந்தார்கள், யாரோ தேவாரம் பாடிகொண்டிருந்தார்கள்.
“ தேவாரம் பாடும் போது யாரும் அழக்கூடாது..” சித்தப்பா சொல்வது போல் இருந்தது..
“ நல்ல மனுஷன்யா... எல்லாருக்கும் முன்ன நிப்பார்..” யார் யாரோ சித்தப்பாவை பற்றி பேசிக்கொண்டிருந்தார்கள். இருக்கும் போது யாரும் பெருமை பேசுவதில்லை...சித்தப்பா இந்த முறை அமைதியா போய்க்கிட்டிருந்தார்..
ஆயிற்று ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு குடும்பமாய் சித்தப்பாவிற்கு படையலாம்...

நேத்து சென்னையில் இருக்கிற அக்கா புளிசாதம், எலுமிச்சை மாங்கா சாதம்னும்... முறுக்கு , எல்லடை பழம் என்று வகை வகையாய் பரப்பி வைத்திருந்தார்கள்...  சித்தப்பா புகைப்படத்தில் அமைதியாய் பார்த்து கொண்டிருந்தார்..

“ சுஜி எல்லா வீட்டு பங்காளிகளும் படைச்சாயிடுச்சுடி இனி நம்ம வீடுதான் பாக்கி... இன்னிக்கு காலையில் பெரியம்மா ஒத்தாசைக்கு வர்றேன்னிருக்காங்க... கொஞ்சம் வடைக்கு உளுந்தும், கடலையும் ஊற போட்டுடறேன்...” உள்ளூரில் இருக்கும் அக்கா சொன்னாள்.

மறுபடியும் இலை நிறைய பண்டங்கள்... சித்தப்பா அமைதியாய் புகைப்படத்தில்... ஊதுவத்தி புகை...  “ பரவாயில்லை தேனு சித்தப்பாவுக்காக காலையிலையே இத்தனையும் செஞ்சிருக்கா...”   நாலாவது வீட்டு பாலாம்மா அக்காவை பெருமையா சொல்லிக்கிட்டிருந்தாங்க..

“ சித்தப்பா நம்ம எல்லாருக்கும் எவ்வளவு செஞ்சிருக்காரு?” அக்கா மூக்கை உறிஞ்சினாள்.. ஊது வத்தி புகைந்தது... எனக்குள்ளும் எதோ... அக்கா இதே ஊர்ல இருக்கா... சித்தப்பான்னு இத்தனை நாளா எதாவது இப்படி வீட்ல சுட்டா கொடுத்திருப்பாளா?  ஊருக்கு போகும்போது சித்தப்பாவுக்கு எதாவது பிஸ்கெட் வாங்கிட்டு போனா அம்மா சொல்வா,” ஏண்டி உன் அக்காவை பாரு பக்கத்திலயே இருந்தாலும் எங்களுக்கே எதுவும் தர்றதில்ல... நீ ஊருக்குன்னு வந்தியனா நோட்டை இழுத்துட்டு போயிடற.. பிழைக்க தெரியாதவ...”
       
எல்லாம் வேடிக்கையாக இருந்தது...
ஒன்பது நாளும் அமர்க்களப்பட்ட சித்தப்பா வீடு இன்று காரியம் முடிந்து அவரவர் கிளம்பிவிட்டார்கள்.. சித்தியின் தனிமை என்னவோ செய்தது... பி.பி சுகர் என்று ஏற்கனவே ஓடிந்து போயிருக்கும் சித்தியை இனி யார் கவனிப்பார்கள்...

மறு முறை ஊருக்கு சென்றிருந்தேன்... இந்த முறை சித்திக்கு தேவையான பழம், பல்லுக்கு இதமான பிஸ்கெட் என்று வாங்கி வைத்திருந்தேன்... கையிலிருந்த பையை பார்த்து தேனு, “ ஏண்டி அவங்க மருமகளுகளே ஒண்ணும் கவனிக்கிறதில்ல... நீ எதுக்குடி இதெல்லாம் செலவு பண்ணிக்கிட்டு வாங்கிட்டு போய் கொடுக்கிற?”

“ க்கா... செத்தப்பறம் போட்டோவுக்கு படைக்கிறதை விட இருக்குறப்ப கொடுக்கிறது எனக்கு புடிச்சிருக்குக்கா... மிஞ்சி போனா நூறு ரூபாய் ஆகுமா... அன்புக்கு விலை போடமுடியுமாக்கா ?”

சித்தி பையை வாங்கி கொண்டு பாசத்தோடு பார்த்தாள்.. திரும்பும் போது பக்கத்திலிருந்த அண்ணி, பெரியம்மா... அத்தை அக்கா என.. எல்லோரும் சித்தியின் போட்டோவிற்கு படைக்க இருக்கும் அன்ன பூரணியாய் தெரிந்தார்கள்.