Tuesday 15 April 2014

“ நினைவில் சில கனவுகள்....! “                                         
                                              

சம்பங்கி பூவின் வாசம் கும்மென்று வீட்டை ரம்மியமாக்கியது.. கொஞ்சம் தொடுத்து பூஜைக்கு வைக்கலாம் என்று பால்கனியிலிருந்து பறிக்க போன போதுதான் அந்த காட்சியை பார்த்தேன். நெடு  நெடுவென்று மரம் போல் அடர்ந்து வளர்ந்த கொடிகளுக்கிடையில் அந்த இரண்டு சிட்டுக்குருவிகள் கூடு கட்டிக்கொண்டிருந்ததை... மெல்ல சத்தம் போடாமல் ஒதுங்கி கவனிக்கலானேன்... அந்த குருவிகள் கணவன், மனைவியாக இருக்க கூடும்... ஆண் குருவி ஒரு குச்சியை வைக்க.. பெண் குருவி தேங்காய் நார் போன்றதை வைக்க இரண்டும் மாறி மாறி எதை எதையோ நிரப்பி ஒரு கூட்டை உருவாக்கி கொண்டிருந்தது... இலட்ச கணக்கில் செலவு செய்து  நாங்கள் இருக்கும் வீட்டை கட்டும் போது இருந்த சந்தோஷத்தை விட  இந்த இயற்கையின் படைப்பை பார்க்கும் போது இரண்டு மடங்கு அதிகமாகவே உணர்ந்தேன்...
      
அப்போதிலிருந்து அந்த கூட்டை கண்ணும் கருத்துமாய் கவனிப்பதே எனக்கு வேலையாயிருந்தது.. என் வீட்டு வாலு ‘ சஞ்சய்’ க்கு தெரிந்தால் அவ்வளவுதான்... பிரித்து மேய்ந்து விடுவான்.. ஹனிஷாவை மட்டும் கூப்பிட்டு காண்பித்தேன்..” ஹனும்மா.. இங்க பாரேன் குருவி வீடு கட்டியிருக்கு...தம்பிகிட்ட சொல்லாம நீ மட்டும் பத்திரமா பார்க்கனும்..”

“ எதுக்கு மம்மி... இப்படி கட்டியிருக்கு?”
“ அந்த கூட்டுக்குள்ளதான் குட்டிக்குருவி வளரும்..”
“குட்டி  குருவி எப்படிம்மா இருக்கும்?”
மெல்ல கூட்டை எட்டிப்பார்த்தேன்... அம்மா அப்பா குருவிகள் இரைக்கு போயிருந்தது.. உள்ளே இரண்டு முட்டைகள் பத்திரமாய் தாயின் வயிற்றில் இருப்பதை போல.. மெல்ல மொபைலில் படம் எடுத்து,

“ ஹனும்மா... இந்த முட்டைக்குள்ளதான் குட்டிக்குருவிங்க இருக்கும்டா... அது கொஞ்சம் பெரிசானா இந்த ஓட்டை ஒடைச்சி வெளிய வந்துடும் அப்புறம் உன்ன மாதிரியே அதுவும் வளரும்...”

“ மம்மி நான்  உன் வயித்திலதானே வளர்ந்தேன்னு சொன்னே...  நான் கூட இப்படிதான் உன் வயித்தை கிழிச்சி வெளில வந்தேனா...ஒனக்கு வலிச்சதா?” ஹனி அப்பாவியாய் கேட்கவும் குழந்தைகளுக்கும் சிறகை விரிக்கும் அந்த பறவைகளுக்கும் பெரிதாக வித்தியாசம் தெரியவில்லை...

“ சரிடா செல்லம்... குட்டிகுருவி வெளியில் வர்ற வரை நாம அப்பப்ப வந்து பார்த்தா அதோட அப்பா அம்மா வேறு இடத்துக்கு வீட்டை எடுத்துட்டு போய்டும். தெரியாமத்தான் பார்க்கணும்..”

“ சுஜி வர வர என்னை கவனிக்கிறதே இல்லே.. இந்த கூடு வந்ததிலிருந்து  அதுங்களோடவே உனக்கு சினேகமா போச்சு...” சரவணன் செல்லமாய் சிணுங்கினாலும் அவனும் அந்த கூட்டின் ரசிகனாய் மாறிப்போனான். அலுவலகம் விட்டு வந்ததும் அவனும் அவற்றை கொஞ்ச நேரம் பார்த்து விட்டுதான்  காபி குடிக்க உட்காருவான்.

       ஒரு நாள் மெல்லிய கீச்.. கீச்..கிறீச் என்று சத்தம் கேட்கவே... சஞ்சய்க்கும் தெரிய ஆரம்பித்துவிட்டது.. “ மம்மி என்னை தூக்கி காண்பியேன்...” அடம்பிடிக்க தொடங்கிவிட்டான்.
      
 “சஞ்சய்.. இதுக ஒன் தம்பி, தங்க மாதிரி... கல் எடுத்து அடிக்க கூடாது... குச்சி எல்லாம் எடுத்து நோண்டக்கூடாது.. பெரிசா வளர்ந்தாத்தான் உங்கூட வெளையாடும்... ஓகேவா?

“ ஓகே மம்மி... தொடாம பார்த்துக்கேன்...”

தினம் அந்த அப்பா அம்மா குருவிகள் இரண்டும் இரை தேடி வந்து குட்டிகளுக்கு  மூக்கால்  கொத்தி எடுத்து ஊட்டி விடும் ....அவைகளும் சின்னதாய் வாய் திறந்து தின்னும்.. இந்த உன்னதமான அன்பின் பிணைப்பை பார்க்கும் போது எனக்கு பசி கூட மறந்து போய்விடும்.

பக்கத்து காம்பவுண்டில் எட்டிப்பார்த்து, “ மாலாக்கா... இங்க பாருங்களேன் இந்த இரண்டு குருவிங்க என்ன அழகா ஊட்டி விடறதை... சீக்கிரம் வாங்க...” கையை ஆட்டி உற்சாகமாய் கூப்பிட,

மாலாக்கா எந்த சொரணையுமில்லாமல், “ சுஜி இது போய் என்ன அதிசயம் இப்படி பாத்துட்டிருக்க... இப்பதான் பருப்பு வேக போட்டிருக்கேன்.. நிறைய வேலையிலிருக்கு..” கூட்டை எட்டி கூட பார்க்க அவகாசமில்லாமல் உள்ளே போனாள்.

சே... என்ன மனுஷி இவள்... பார்க்கலைன்னாலும் அப்புறம் வர்றேன்னாவது சொல்ல தெரியுதா... இப்படி எல்லா ரசனைகளையும் மூட்டை கட்டி சம்பாதிக்கிறதும், சாப்புடறதுமாத்தான் நிறைய பேர் வாழ்க்கை போய்ட்டிருக்கு...

ஒரு நாள் என்ன ஆச்சோ தெரியலை ரொம்ப நேரமா அப்பா அம்மா குருவிகளை காணோம்.. குட்டிக  ரெண்டும் கீச்.. கீச் ன்னு கத்தி பசிக்கு ரகளை பண்ணிக்கிட்டிருந்தது... குட்டிக்கு சாதப்பருக்கை போட்டுத்தான் பார்ப்போமேன்னு... கொஞ்சம் கிண்ணத்தில் வைத்து கொண்டு ஒன்றிரண்டு பருக்கைகளாக அதுக்கு ஊட்டி விட கொத்தி தின்றது....” ஐய்யா... குட்டி குருவி பூவா திங்குது...” சஞ்சய் க்ளாப்ஸ் பண்ணிக்கொண்டு எதிர்த்த வீட்டு சோனுவிடம் சொல்ல ஓடினான்.

       எதுவும் கிடைக்கவில்லையோ என்னவோ பொழுது போய் வந்து சேர்ந்த அப்பா, அம்மா அதன் மொழியில் குழந்தைகளை கொஞ்சி கொண்டிருந்தது. அதிலிருந்து கொஞ்சம் தானியங்களை பால்கணியில் பரத்தி வைக்க தொடங்கினேன்... பெரிய குருவிகள் அதை கொத்தி குட்டிகளுக்கு போடுவதை தினசரி வழக்கமாக்கி கொண்டது.

        நாங்க நாலுபேரும் இந்த கூட்டோட சொந்தம் கொண்டாடி வந்தோம். சரவணன் குட்டிங்க ரெண்டுத்துக்கும் மனிஷா, சீயான்னு பேர் வச்சி  கொஞ்ச ஆரம்பிச்சிட்டான்.  “ நான் வர்றதுக்குள்ள என்ன தூக்கம் ஒங்களுக்கு? கீச்... கீச்... பறவைகள் மொழியிலேயே ஹாய் சொல்லுவான்.. சத்தம் கேட்டதும் அதுகளும் கீச்...கீச்... கிறீச்... பதில் கொடுக்கும்.

கொஞ்ச நாளில் குட்டிக்குருவிகள் தத்தி தத்தி கூட்டுக்கள் அடி எடுத்து வைக்க தொடங்கியது.. பெரிய குருவிங்க ரெண்டும் அதுக்கு ரெக்கை விரிச்சி பறக்க சொல்லிக்கொடுத்து கொண்டிருந்தது. ஒரு நாள் பெரிய குருவிகள் வெளியில் போயிருந்த போது குட்டிங்க பறக்க முயற்சி செஞ்சி கீழே விழுந்து விட்டது... பதட்டத்தில் எனக்கு என்ன பண்ணுவதென்றே புரியவில்லை.. சரவணன் தான் ஒரு டர்க்கி டவலில் கையை சுற்றிக்கொண்டு ஒரு பூவை சுமப்பது போல் மெல்ல அந்த குட்டிகளை தாங்கி அதன் கூட்டில் வைத்தான். “ தேங்க் யூ சரா.. யூ ஆர் வெரி க்ரேட்...!”  அவன் கன்னத்தில் இதமாக ஒரு முத்தம் கொடுத்தேன்.

       இப்போது குட்டிகள் கொஞ்சம் பறக்க தெரிந்து கொண்டது..  கொஞ்சம் மேலே சிறகடித்து உட்காருவதும் மீண்டும் கூட்டுக்குள் போவதுமாய் இருந்தது.  தினசரி சஞ்சய் சோனுவை அழைத்து வந்து குட்டி குருவிகளோடு விளையாடிக்கொண்டிருந்தான்.

        நாங்கள் அன்றும் வழக்கம் போல் காலையில் குட்மார்னிங் சொல்ல  கூட்டருகே வந்து “ மனிஷா, சீயான் .. கீச்... கீச்...”

பதிலுக்கு எந்த சப்தமுமில்லை... மறுபடியும் க்கீச்..கீச் என்று சொல்லிக்கொண்டு  அதன் வீட்டை எட்டிப்பார்த்தோம்.. குட்டிகள் இல்லை... பறக்க தெரிந்ததும் அதன் அப்பா அம்மா அழைத்து சென்று விட்டிருக்கிறது. இனி அவைகளோடு விளையாட முடியாது கண்களில் நீர் கோர்த்தது... கொஞ்ச நாட்களாய் எங்களுடன் வசித்த ஜீவன் கள் எங்களை விட்டு பிரிந்துவிட்டது.

“ டாடி எனக்கு சீயான் வேணும்... போய் அதுங்களை கூட்டிட்டு வாங்க...”  சஞ்சய் மண்ணில் புரண்டு அடம் பிடித்து கொண்டிருந்தான்.
“ மம்மி இனி வராதா?” மனிஷா ஏக்கமாய் என்னை பார்த்தாள்.

  மனுஷங்ககிட்ட இருந்தா வாழவிடமாட்டாங்கன்னு வேறு உலகம் தேடி போயிடுச்சு போலிருக்கு... வெய்ய காலம் தொடங்கிடுச்சு... வழக்கமா அந்த கொடியோட கிளைகளை வெட்டி சீர் பண்ணி தண்ணி ஊற்றுவோம்... அப்பதான் புதுசா கிளைக்கும்... இந்த முறை கொடியை வெட்ட மனசு வரலை.. அந்த குருவிங்க கூடு அப்படியே இருக்கனும். அதுங்க கஷ்டப்பட்ட கட்டிய வீட்டை இடிக்க முடியாது. என்னிக்காச்சும் ஒரு நா அது வீட்டை பார்க்க வருமான்னு யோசனை பண்ணிக்கிட்டே தூரத்துல அண்ணாந்து பார்க்கிறேன்... கண்ணுக்கெட்டின தூரம் வரை செல் போன் டவர்தான்..!