Friday, 16 November 2012

இறக்கை கட்டி பறக்குதய்யா அண்ணாமலை சைக்கிள்!எங்கே போனது சைக்கிள்...?

“ அப்பா எனக்கு டான்ஸ் க்ளாஸ் டைமாயிடுச்சி கொஞ்சம் கூட்டிட்டு போய் விடனும்..வண்டியை கீழ இறக்குங்க…” - என் மகள்.
“ கொஞ்ச தூரத்துலதானே க்ளாஸ் அதுக்கு வண்டியை எடுக்கனுமா? நான் வேணா சைக்கிள்ல கொண்டு போய் விடறேன் வா..”- என் கணவர்.
“ என்ன்னது… சைக்கிளா?  அதுக்கு நான் நடந்தே  போறேன்..” என்று சொல்லிவிட்டு என் குட்டீஸ் வேகமாய் போய்விட்டது.
சைக்கிள்ல போறது கேவலம்னு சின்ன பசங்களே நினைக்க ஆரம்பிக்கிறாங்க. இன்னும் கொஞ்ச நாள்ல சைக்கிளை  மியுஸியத்துலதான் பார்க்க முடியும். இப்ப சைக்கிள் பயன்பாடு  நிறையவே குறைஞ்சி போச்சு. நடுத்தரப் பிரிவினர்கள்கூட கார்களைப் பயன்படுத்தும் அளவுக்கு மாற்றம் வளர்ச்சியும்  ஏற்பட்ட பிறகு சைக்கிள் துரு பிடித்துதான் போயிருக்கு. விலையில்லா சைக்கிள்னு அரசு மாணவர்களுக்கு கொடுத்துகிட்டிருந்தாலும் பயன் படுத்தவறங்க குறைச்சலாதான் இருக்கு.. ஆரம்பத்தில் ட்யூஷன் செல்ல,  பக்கத்து கடைகளுக்கு செல்ல என்று மாணவர்கள் சைக்கிளை எடுத்து போனாலும் இரண்டொரு மாதங்களுக்கு பிறகு  அதை சீண்டுவதில்லை. அது வீட்டின் எங்காவது மூலையில் கேட்பாரற்று கிடந்து பேரிச்சம் பழத்திற்காவது போட்டு விடேன் என்று கெஞ்சும். மாணவர்களுக்கும்- சைக்கிளுக்கும் இருக்கிற உறவு ரொம்ப நாள் நீடிக்கறதில்ல. லைசென்ஸ் வாங்கற வயசு வந்தவுடனே  டூ-வீலர்ல பறக்க ஆரம்பிச்சிடுவாங்க.
கார்-பைக் வாகன பெருக்கத்தால் போக்குவரத்து திண்டாடி கொண்டிருப்பதை கண்கூடா பார்க்கிறோம். வாகனங்கள் பொது இடங்களில் ஆக்கிரமிச்சி  சாலை நெரிசல் உண்டாகிறது. டிராபிக்கிலும், சிக்னலுக்காகவும் வாகனங்கள் காத்திருக்கிற நேரத்தில  ஒராண்டுக்கு எத்தனை லிட்டர் பெட்ரோல் வேஸ்ட் ஆகுதுன்னு கணக்கு போட்டு பாருங்க.
எரிபொருள் பற்றாக்குறை, சுற்றுச்சூழல் பாதிப்பு, அதிகமான விபத்து, போக்குவரத்து நெரிசல் இதெல்லாம் இந்த மாதிரி வாகன பெருக்கத்தாலதான். சீனாவில் சைக்கிள் போக்குவரத்துக்கு முன்னுரிமை தர்றாங்களாம். சீனாவின் ஷாங்காய் நகரத்தில் சைக்கிளை  நிறுத்த பூமிக்கு அடியில் பல இடங்களில் ஸ்டாண்டுகளை ஏற்படுத்தியிருக்காங்களாம்.  ஐரோப்பிய நாடுகள்ல சைக்கிள் ஓட்டறதை  கௌரவ குறைச்சலா நினைக்கறதில்லை.  நாமதான் சைக்கிள்ல வந்தா குறைவா பார்க்கிறோம்.
சைக்கிள் ஓட்டறதால  சாலைகளில் நெரிசல் குறையும்.. வாகன புகை மாசு கட்டு படுத்தப்படும் அப்புறம் உடம்புக்கும் ஆரோக்கியம்.
சைக்கிளை மறக்காதீங்க. கொஞ்சம் நினைவு படுத்தி பாருங்க.. முதன் முதலா நீங்க எப்படி சைக்கிள் கத்துக்கிட்டிங்கன்னு அந்த சுவாரஸ்யமான நினைவுகளை. ஒரு மணி நேரம் குட்டி சைக்கிளை கடையில வாடகை எடுத்து  அப்பாவோ, நண்பனோ பிடித்து கொள்ள பெடலை மிதிச்சி கை நடுங்க.. இடுப்பு நிக்காம  சைக்கிளோட கீழ விழுந்து.. சின்னதா அடிபட்டு.. நீங்க ஓட்ட ஓட்ட  கூடவே டிரெய்னர்  கொஞ்ச தூரம் ஓடி வந்து.. ஒரு வழியா கத்துகிட்டிருப்பிங்க. நீங்க மிதிக்க மிதிக்க உங்களை முன்னேத்தின அந்த சைக்கிளை எந்த மூலையில போட்டு வச்சிருக்கிங்க?
எதுக்கு இந்த சைக்கிள் புராணம்..?  லொங்கு லொங்குன்னு சைக்கிளை மிதிச்சிகிட்டு வேலூர்லர்ந்து  சென்னை வரை வர முடியுமா?  சைக்கிள்ல ஆபிசுக்கு போனா  ஆப்-டே லீவு எழுதிட்டு மத்தியானம் போய் சேர்ந்துதான் அட்டெண்ட்ஸ் போட முடியும். எவ்வளவோ முன்னேறியிருக்கோம்.. இப்ப போய் சைக்கிளை உபயோகிக்க முடியுமான்னு கேக்காதீங்க. நான் சைக்கிளைதான் பயன்படுத்தனும்னு சொல்லலியே. அருகிலுள்ள இடங்களுக்கு போகும் போது சைக்கிளை பயன் படுத்தலாமே என்கிறேன்.  பக்கத்து தெருவுக்கு கூட வண்டியில போற பந்தாவை விடலாமே.  சைக்கிள் மிதிக்கிறது கஷ்டம் ஆனா ட்ரெட் மில், உடற்பயிற்சி மிஷின்ல மட்டும் கையையும், காலையும் காசு கொடுத்து மிதிச்சிகிட்டு இருக்கிறது மட்டும் வேடிக்கையா இருக்கு.
என் கணவர் அருகிலுள்ள இடங்களுக்கு வண்டியை எடுக்க மாட்டார். சைக்கிளில்தான்  போவார். அதற்கு இரண்டு விதமான விமர்சனம் கிடைக்கும்.   “இந்த காலத்துல சைக்கிள்லாம் யார் ஓட்டறாங்க.. இவர் ரொம்ப நல்ல மனுஷன்.. எரி பொருள் சிக்கனம், உடற்பயிற்சின்னு   நல்ல விஷயமா செய்றார் …!” என்று ஒரு சிலர்.. “  அவங்க ரொம்ப கஞ்ச பிசினாறிப்பா மனுஷன் பெட்ரோல் ஆயிட போகுதுன்னு சைக்கிள்ல சுத்தறார் பாரு…” என்று ஒரு சிலர்  கமெண்ட் இருக்கும். உங்க பார்வை எந்த ரகம்னு தெரியலை…!
சைக்கிள் பயணம் மாசு கட்டுபாடுக்கும், உங்க உடல் நலத்துக்கும் நல்லதுன்னு நினைச்சிங்கன்னா  உங்க வீட்ல மூலையில் இருக்கிற (இருக்கா?) சைக்கிளை  தூசி தட்டி  ஹேண்ட் பாருக்கு ஒரு கை கொடுத்து பெருமையா ஏறி உட்காருங்க .. இறக்கை கட்டி பறக்குதய்யா அண்ணாமலை சைக்கிள்னு…..!