Thursday, 8 November 2012

எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான்…!

  எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான்…!
நேற்று என் மகள் அவ ஸ்கூலில் நடந்த விஷயத்தை சொன்னா.. இப்படி ஒரு பசங்க மெட்ரிக் ஸ்கூல்ல கூடவா இருக்காங்கன்னு வியப்பா இருந்தது. என் மகள் க்ளாஸ்ல எதோ ஒரு பொது விஷயத்திற்காக பசங்க கிட்ட பணம் கலெக்ட் பண்ணியிருக்காங்க.. அதுக்கு ஒரு மாணவி பொறுப்பேத்துக்கிட்டு ஆயிரத்து இரு நூறு ரூபாயை கலெக்ட் பண்ணி தன் பையில் வைத்து விட்டு க்ளாஸில் இருந்த மொத்த பேரும் பி.டி பீரியடுக்காக விளையாட போயிருக்காங்க. பீரியடு முடிஞ்சி வந்து பார்த்தா கலெக்ட் பண்ண பணத்தை காணலை. அந்த மாணவிக்கு வேறு வகுப்பில் உள்ள மாணவி மேல் சந்தேகம் வந்திருக்கு.. (ஏற்கனவே அவுக பென்சில், பேனான்னு சுட்ட அனுபவமாம்) . அந்த வகுப்பு சென்று அந்த மாணவியின் பையை சோதனை போட்ட போது அவள் புத்தகத்தில் அந்த பணம் இருந்ததாம். விசாரணையில் ஒத்து கொண்டிருக்கிறாள். பணம் கலெக்ட் பண்ணதை தெரிஞ்சிகிட்ட அந்த பெண் க்ளாஸ் காலியானப்ப பார்த்து எடுத்தாளாம்.. அதில் அப்பவே இரு நூறு ரூபாயை கேண்டின் சென்று காலி பண்ணிவிட்டு மிச்சத்தை நோட்டுக்குள் ஒளித்து வைத்திருக்கிறாள். கேள்விப்பட்ட ஆசிரியரும், ஆசிரியையும் “ ஏம்மா இப்படி எல்லாம் பண்றீங்க?” என்று லேசாய் திட்டிவிட்டு சென்று விட்டார்களாம். இதை  ஏன் ஹெட்மிஸ்டர்ஸ் கவனத்துக்கு கொண்டு செல்ல வில்லை என்று என் பெண்ணிடம் கேட்டேன். ஏற்கனவே ஒரு மாணவி ஆசிரியையின் செல்போனை திருடி உடைக்குள் ஓளித்து வைத்திருந்ததை கண்டுபிடித்து ஹெட்மிஸ் அந்த மாணவிக்கு டி.சி கொடுத்தாங்களாம்.. பிறகு அந்த மாணவியின் பெற்றோர் பள்ளிக்கு வந்து கையில் காலில் விழுந்து கெஞ்சி சஸ்பெண்ட்  மட்டும் பண்ணி சேர்த்து கொண்டார்களாம்.
இப்போது தவறு செய்யும் மாணவர்களை கண்டிக்க கூட ஆசிரியர்கள் பயப்படுகிறார்கள். எவ்வித வம்பையும் விலைக்கு வாங்க அவர்கள் தயாராக இல்லை. ஆசிரியர் கண்டித்ததால் மாணவரோ அல்லது மாணவியோ தற்கொலை என்று நிறைய செய்திகள் வருகிறது. மாணவரிடத்தில் தவறே இருந்தாலும்.. அந்த இடத்தில் கண்டித்து மன உளைச்சலை ஏற்படுத்தியதாக சித்தரிக்கப்பட்டு  ஆசிரியர்கள் குற்றவாளியாகிறார்கள்.
முன்பெல்லாம் டீச்சர்னா க்ளாஸ்ல கண்டிப்பா ஒரு ஸ்கேலையோ அல்லது பிரம்பையோ வச்சிருப்பாங்க. தவறு செய்ற பிள்ளைங்களை பளீர்னு ஓண்ணு குடுப்பாங்க. இன்றைக்கு பள்ளிகளில் மாணவர்களை தண்டிப்பதையே நிறுத்தி விட்டார்கள்.     பள்ளியில் ஆசிரியர்கள் பாடம் நடத்தும்போது பிரம்பு அல்லது ஸ்கேலை கையில் வைத்து நடத்துவதைக்கூட தடை செய்திருக்கிறார்கள். 
பெற்றோர்கள் பக்கம்…
பள்ளி ஆசிரியரை தனியாக  சந்தித்து தன் இயலாமையை அவர்களிடம் சொல்லி, தன் பிள்ளைக்கு கொஞ்சம் புத்தி சொல்லுமாறு கேட்டுக் கொள்ளும் பெற்றோர்கள் இருக்கிறார்கள்.
சில பெற்றோர்களுக்கு பள்ளியில் மாணவனுடைய படிப்பு சரியாக இல்லை, வீட்டில் சற்று அதிகமாக கவனம் எடுத்துக்கொள்ளுங்கள் என ஆசிரியரோ, பள்ளி நிர்வாகமோ சொல்லும் படியும் இருக்கிறது.
 ஒரு சில பெற்றோர்கள்  தங்களுடைய குழந்தைகளை கண்டிப்பதற்கே பயமாக இருக்கிறது.  தோளுக்கு மேல் வளர்ந்து  விட்டார்கள்,  பள்ளியில் ஆசிரியர் சொல்வதை அப்படியே ஏற்றுக்கொள்வார்கள் என்று கூறி ஆசிரியரிடம் பொறுப்பை ஒப்படைத்து விட்டு தப்பிப்போரும் உண்டு.   . 
ஏதாவது ஆசிரியர் மாணவர்களின் நலனில் அக்கறை கொண்டு சற்று கடுமையாக நடந்து கொண்டால்   அதே பெற்றோர்கள் எப்படி அந்த ஆசிரியர்களிடமும், பள்ளி நிர்வாகத்திடமும் சண்டையிடுவார்கள் என்று சொல்ல தேவையில்லை.
எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலேஅது நல்லவனாவதும் தீயவனாவதும் அன்னை வளைப்பினிலேஎன்ற பாட்டின் வரிகளைக் கேட்கும் போதெல்லாம் எனக்கு தொடர்ந்து ஒரு சந்தேகம் இருந்து வந்தது,
 ஏனெனில் எந்த தாயும் தன் குழந்தை நல்லவனாய் இருப்பதைத் தான் விருப்புவாளே தவிர தீயவனாய் அவனை வளர்பதில்லையே. அவ்வாறிருக்க அவன் தீயவனாய் மாறுகின்ற போது அது யாருடைய குற்றம் என்று பார்க்கையில் அப்பாடலை இயற்றிய கவிஞர் கூறியது முற்றிலும் சரியே என்றே தோன்றுகின்றது.அவ்வாறு எந்தக் குழந்தையும் பிறக்கும் போதே நீதிமானாகவோ, கல்விமானாகவோ பிறப்பதில்லையே அவர்கள் வாழும் சூழ்நிலைக்கு ஏற்றவாறு தானே அவர்களின் செயற்பாடுகளும் வெளிப்படுகின்றது. அவ்வாறு எந்த ஒரு சூழ்நிலையையும் ஒருதாய் நினைத்தால் அதைச் குழந்தைகளுக்கேற்ற சிறந்த சூழ்நிலையாக அதை மாற்றி அமைக்க முடியும் என்று கூறலாம்.
 பள்ளிகளில் பணத்தை ஈட்ட கூடிய கல்வியைதான் கற்க முடியும். வாழ்க்கைக்கான கல்வியை அன்னையிடமிருந்துதான் கற்பிக்கப் படுகிறது.ஒரு தாயிடமிருந்து பெறப்படும் அன்பு, பொறுமை, சகிப்புதன்மை, விருந்தோம்பல், முன்னெச்சரிக்கை, சேமிக்கும் திறன், திட்டம் தீட்டுதல்,போன்ற அரியப் பல பழக்க வழக்கங்களும், நல்லொழுக்கமும் ஒருங்கே அமைந்த ஒரு மனிதனால் தான் வாழ்க்கையில் சிறப்படையை முடிகின்றது என்பதை யாரும் மறுக்க முடியாது.
ஒரு வித்து ஆரோக்கியமான குருத்தாக முளைத்து  நல்ல செடியாக வளர்ந்து பலன் தரும் விருட்சமாகப் பரந்து  விரிய நாம் அவற்றை நல்ல மண்ணில் விதைக்க வேண்டும்.  நல்ல வகையில் நீர் ஊற்ற வேண்டும்.  நல்ல வகையில் பராமரிக்க வேண்டும்.  பயிரும் செடியும் வாடுவதும் கருகுவதும்  விதையின் தவறு அல்ல.   அவற்றுக்கு நல்ல மண்ணையும் நீரையும் தேவையான கவனத்தையும் பராமரிப்பும் தருவது நம்முடைய கடமை.
ஒரு மாணவன் கெட்டுப்போகிறான் என்று யாராவது சொன்னால் அந்த நிலைமைக்கு  உண்மையான காரணம் இளவயதில் அந்த இளஞ்செடிக்கு சரிவர தண்ணீர் ஊற்றவில்லை அல்லது சுடு நீரை இந்தக் குருத்துக்குத்  தவறாக ஊற்றி விட்டிருப்பார்கள் என்பதுதான் உண்மை.
ஒரு விஷயம் மட்டும் நல்லா புரிஞ்சது, பள்ளி, கல்லூரி என்று மாணவர்களிடம் தோன்றும் தீய பழக்கம் பணம் அடிப்படையாக கொண்டுதான் வருகிறது. சிறு வயதிலேயே விருப்ப படி செலவு செய்ய கற்று கொண்ட குழந்தைகள் பெற்றோர்களிடமிருந்து பணம் கிடைக்காத போது திருட ஆரம்பிக்கிறார்கள்.  பெற்றோர்கள் இந்த விஷயத்துல கவனமா இருந்து பிள்ளைகளுக்கு  வழிகாட்ட வேண்டும்.
பெற்றோர்களுக்கு:
குழந்தையின் முன்பு நல்லவற்றையே பேசுங்க, நல்ல காரியங்களே செய்யுங்கள்.
குழந்தைக்கு நல்ல பழக்க வழக்கங்களை தொடர்ந்து போதியுங்க
குழந்தையின் முன்பு கணவன், மனைவி சண்டைப் போடுவதை தவிர்த்துடுங்க.

குழந்தைகளுக்கு எது அவசியம், எது  ஆடம்பரம் என்று தேவைகளை பற்றி புரிய வைங்க. குழந்தைகள் எளிமையா வளர்க்கும் போது அவர்களிடம் நல்ல குணங்கள் வெளிப்படும்.
குழந்தையுடன் தான தர்மம் போன்ற நல்ல காரியங்களில் ஈடுபட்டு முன்னுதாரனமாக இருங்க.
குழந்தையோடு சேர்ந்து புத்தகங்களை வாசியுங்க இதனால் குழந்தைக்கும் அப்பழக்கம் வந்துவிடும்
 குழந்தையின் சிறிய பிராயத்திலிருந்தே தான் செய்யும் எல்லாக் காரியங்களிலும் தன் குழந்தைக்கே அதிக முக்கியத்துவம் கொடுத்து வளர்த்து வரும் போது ஒரு போதும் அவர்கள் தீயவர்களாய் உருவாக முடியாது.
வேலைக்கு போகும் அன்னையோ அல்லது சீரியல் பார்க்கும் அன்னையோ ஒரு குழந்தையோட வளர்ச்சியில் பெரும்பங்கு உங்க கிட்டதான். ஏன்னா குழந்தைங்க தாய் கிட்டதான் அதிகமா நேரத்தை செலவிடறாங்க.
ஆசிரியர்களே,
வீண் பழி சுமக்க வேண்டி வருமோ என்று மாணவர்களின் தவறை சுட்டி காட்ட  அஞ்சி நமெக்கென்ன என்று போய்விடாமல் குறைந்த பட்சம் அவர்கள் பெற்றோர்களையாவது அழைத்து பிள்ளைகள் செய்த தவறை புரியும்படி கூறுங்கள். ஒருவேளை அந்த பெற்றோர்களுக்கு கூட அந்த பிள்ளைகள் இப்படி இருப்பது தெரியாமல் இருக்கலாம் அல்லவா?
 மாணவப் பருவத்தில் வளரும் குழந்தைகளை நல்ல நட்பு கலந்த முறையில் அணுகுங்கள்.
மாணவப் பருவத்தில் பள்ளியிலும் சமூகத்திலும் எவ்விதம் நடத்துகிறோம் என்பதைப் பொறுத்து அந்த மாணவர்களின் நடத்தையும் அமைகிறது என்பதை உணர்ந்து செயலாற்றுங்கள்.
பள்ளியை விட்டு சென்றபின்னும் எதிர்காலங்களில் இந்த மாணவர்கள் தங்கள் வாழ்க்கையை எப்படி அமைத்துக் கொள்ளவேண்டும்  உங்கள் செயல்பாடுகள் இருக்கட்டும்.
இனி, எந்த குழந்தைகளும் நல்ல குழந்தைகள்தான்…!