Tuesday, 22 January 2013

இனிய தருணங்கள்.... !பெண்கள் மலர் தோழிகள்  கொண்டாடிய பாசப் பொங்கல்விழுதுகளற்ற ஆலமரங்கள்  அவர்கள். தனிமை என்பது பலருக்கும் வரமாக இருக்க, இவர்களுக்கு மட்டும் அது சாபமாக இருக்கிறது. ஏதேதோ காரணங்களால் புறக்கணிப்பு தேசத்திற்கு நாடு கடத்தப்பட்டவர்கள். உறவுகள் இருந்தும் ஒதுக்கப்பட்டவர்கள்.

வாஞ்சையாய் சில வார்த்தைகள்... கனிவுடன் சில கவனிப்புக்கள்.. இவைகளே அவர்கள் முகத்தில் புன்னகை பூக்கச் செய்துவிடுகிறது. பண்டிகைகள் என்பது இவர்களுக்கு மற்றொரு நாளே, வேதனையுடன் வேடிக்கை பார்க்க மட்டுமேயான இன்னொரு தினம். கூடி களித்திருப்பதும் உறவுகளுடன் திளைத்திருப்பதுமான பண்டிகை அனுபவத்தை இவர்களுக்கு அளித்தால் எப்படியிருக்கும்... அந்த பண்டிகை பூரணத்துவம் பெற்றுவிடாதா..? இப்படித்தான் அர்த்தமுள்ள கொண்டாட்டமாக்கினோம் பெண்கள் மலர் தோழிகளாகிய நாங்கள்.

நட்பே உறவான தோழிகளாகிய நாங்கள் வேலூர் பொற்கோவில் செல்லும் வழியில் இருக்கும் ஓ.ஆர்.டி அமைப்பின் தஞ்சம் என்ற முதியோர் இல்லத்தில் பொங்கல் பண்டிகையை கொண்டாடினோம். அங்கே தஞ்சமடைந்திருந்த முப்பதிற்கும் அதிகமான பெண்களுடன் நடந்த பாச பகிர்தல்களில் பொங்கி வழிந்து பிரவாகமெடுத்தது சந்தோஷம்.


(ஜாதி, மத பேதமின்றி   இணைந்த உறவுகளின் இல்லம்)


தொடக்கமாக, உறவுகளுக்கு ஏங்கும் அந்த நெஞ்சங்களுக்காக தான் எழுதி கொண்டு வந்திருந்த கவிதையை பாடி வரவேற்றார்  திருப்பத்தூர் ரேணுகா 

................
முதிர்ந்த இந்த மங்கையரின் கதையே கேளீர்
இந்த மங்கைகள்  போல் பாரினில் வாழ்ந்தவர் யாரோ..
இவர் உழைப்பு காத்த அந்த குடும்பமல்லவா
இப்போது தனியாக தவிக்கவிட்ட மக்களல்லவா
அன்பு, பாசம் செலுத்தி நம்மை வளர்த்தவள் அல்லவா
அவரை அரவணைத்து காப்பது நம் கடமையல்லவா...
அன்புக்காக ஏங்கும் அவரை விரட்டிடலாமா
அவர் நினைவுகளின் நிழல்களை நாம் அழித்திடலாமா?
ஜாதிமதம் ஏதுமின்றி சேர்ந்து அனைவரும்
இங்கு உறவினர் போல் ஒரே தட்டில் உணவு அல்லவா..!
ஏற்றம் தாழ்வு ஏதுமின்றி இணைந்த கைகளால்
ஒருங்கிணைந்த உறவுகளின் இல்லமல்லவா..!

அவர் பாடி முடித்த போது அத்தனை பேரும் சில நிமிடங்கள் நெகிழ்ந்து கலங்கி நின்றனர்.

நெகிழ்ந்தது போதும், அவர்களை இன்முகமாக்குவோம் என்று களமிறங்கினர் தோழிகள். தளர்ந்திருந்த அந்த நெஞ்சங்களுக்கு களிப்பூட்ட தொடங்கியது போட்டிகள்.

(பாட்டி  நீங்க ஒர் பாட்டு பாட முடியுமா...?)

முதலில் பாட்டு போட்டி சுசிலாவும் ஜானகியுமாய் மாறி குரல் மாற்றம் கொண்டு அசத்தினார்கள் ராஜாத்தியும், சேதுலட்சுமி பாட்டியும். கடவுள் பாடல்களும், மெலடிகளுமாய் அங்கே தவழ்ந்து கொண்டிருந்த இசை, சட்டென்று குதிரை ஏறி நாலுகால் பாய்ச்சல் காட்டியது. " நெஞ்சமுண்டு  நேர்மையுண்டு ஓடு ராஜா" என்று இசைக்குதிரையை தட்டிவிட்டார் ஒருவர் . உற்சாகம் வேகமெடுத்தது.

(நெஞ்சமுண்டு நேர்மையுண்டு... ஓடு ராஜா..ஹேய்...)


பாட்டு முடிந்தது. அடுத்து என்ன..  காமெடிதானே, சேலையுடுத்திய வடிவேலுவாக மாறி அங்கிருந்தவர்கள் ரகளையில் இறங்க, சிரிப்பலைகளால் சிதறிப்போனது அத்தனை காலமும் அவர்களை போர்த்தியிருந்த தனிமை. அதுவும் குழாயடி சண்டையை நடத்திக் காட்ட வேண்டும் என்று சொன்னதுதான் தாமதம்,    நிஜ குடங்களை தூக்கி கொண்டு வந்து, அக்மார்க் குழாயடி சண்டையை அரங்கேற்றினர்.

அடுத்து சூழ் நிலையைச் சொல்லி அதற்கேற்ப நடப்பது எப்படி என்ற போட்டி. மொழி தெரியாத ஊரில் மாட்டிக் கொண்டீர்கள். வெற்றிலை பாக்கு வேண்டும் எப்படி கேட்பீர்கள் என்றதும், சுண்ணாம்பு தடவுவது போல் செய்து வாயில் போட்டு காட்டினார் ஒருவர் . " என்ன ஜாம் தடவி பிரட் வேணுமா என அவரை கலாய்க்கவும், இன்னொருவர் எழுந்தார். அதே போல் செய்து உதடுகள் சிவக்கும் என்பதை உதட்டை பூசிக்காட்டினார்.. "லிப்ஸ்டிக் வேணும் போல என்று கலாட்ட செய்ய அமர்ந்து கொண்டார் அவர். கடைசியாக வந்தவர் பாக்கை நன்றாக இடித்து வாயிலிட்டு குதப்புவது போல் செய்து காட்ட, அவருக்கே கிடைத்தது வெற்றிலை பாக்கு. திருடன் வந்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்டு முடிக்கும் முன்னரே இறுக கட்டிப்பிடித்து கொண்டுவிட்டார்கள்.. இப்படி புடிச்சி கட்டி போட்டுருவோம்ல என்று  கெத்தாக சொன்னார்கள் உஷார் பாட்டிகள்.
ஆட்டம் இல்லாமல் கொண்டாட்டம் முழுமையடையுமா.. கும்மியடிப்பதில் தொடங்கி குத்து பாட்டுக்கு குத்தியெடுப்பது  வரை ரகளையான ஆட்டம் போட்டு அசத்தினார்கள் பாட்டிகள்.அதிலும் " வரதப்பா வரதப்பா கஞ்சி வரதப்பா " என்ற பாட்டுக்கு டம்ளர்களை தலையில் வைத்தபடி இரண்டு பாட்டிகள் ஆட, கைதட்டல்களால் அதிர்ந்தது அந்த இல்லம். தோழிகளும் அபிநயம் பிடித்து ஆட கும்மாளமும், குஷியும் கைக்கோர்த்து கொண்டது.

( வரதப்பா வரதப்பா கஞ்சி வரதப்பா.. )( கை தட்டும் போது கூட பையை கீழே வைக்காத .. உஷார் பாட்டி...!)


கொண்டாட்டத்தின் நினைவாக அங்கிருந்தவர்களுக்கு போர்வை தந்து உதவினார் திருப்பத்தூர் ரேணுகா. செண்பகம் என்ற தோழி அனைவர்க்கும் துண்டுகள் வழங்கினார். மற்ற தோழிகள் தங்களால் இயன்ற இனிப்பு , பிஸ்கட், பழங்கள் என வழங்கினார்.மனம் நிரம்பி வழிவதுபோலவே வயிறும் நிறைய வேண்டுமே. அவர்களுக்கு அன்புடன் பொங்கலை பரிமாறினர் தோழிகள், பாசத்தை கலந்து , நிறைவுடன் சாப்பிட்டு முடித்த அந்த மூத்தோர் மனமார வாழ்த்தினர்.

" வாழ்வதற்கு பொருள் வேண்டும்... வாழ்வதிலும் பொருள் வேண்டும்.. இதை உணர்த்திவரும் பெண்கள் மலருக்கு எங்கள் நன்றி என்று விடை பெற்றனர் தோழிகள்.

நன்றி: தினமலர்- பெண்கள் மலர்.
( ஜனவரி 19,2013 தினமலர் நாளிதழ் இணைப்பு பெண்கள் மலரில் வந்துள்ளது)

இன்றைய பொழுதின் ஒரு  நாலு மணி நேர சந்தோஷத்தை காப்பாற்றிக்கொள்ளும் போது அடுத்த இருபது மணி நேரத்தை அந்த சந்தோஷமே பார்த்துக் கொள்ளும்.அப்படி ஒரு சந்தோஷத்தை மற்றவர்களுக்கு தரும்போது நம் மனம்  இரட்டிப்பாக மகிழ்ச்சி பெறுமல்லவா?