Thursday 10 January 2013

வளர்ந்து விட்ட பிள்ளைகள்- வளராத உறவுகள்..!


ஒட்டடை தட்டி
வெள்ளை அடித்து
மாவிலை தோரணம்
கட்டி
வாசலில் கோலமிட்டு
கரும்பு, மஞ்சளை
சார்த்தி வைத்து
நல்ல நேரம் பார்த்து
பொங்க பானை
வைப்பதற்குள்
முதுகு நிமிரும்
கிழக்கு பார்த்து
பொங்கியதும்..
பொங்கலோ பொங்கல்
ஒன்று கூடி உரத்து
சொன்னதில்
படுத்தி எடுத்த வேலைகள்தான்
பஞ்சாய் பறக்கும்..
நெஞ்சமெல்லாம் தித்திப்பாய்..
வரிசையாய் வாழையிலை
உறவுகளோடு உண்டு மகிழ்ந்த
காலம் நினைத்து…
கண்ணோரம் நீர் கசிய
கிழவனும், கிழவியுமாய்
தட்டு மாறி
ஒற்றை இலையில்
பொங்கல் படையல்
 ஆறிப்போய்..!

******************


( பண்டிகைகள் என்றாலே உறவுகள் கூடி கொண்டாடி மகிழ்வதுதான்...  ஆனால்....
பெற்ற பிள்ளைகள் கூட அவரவர் குடும்பம் என்று பண்டிகை நாட்களிலும் சுருங்கி போய் விட வயதான அம்மா, அப்பாவின் உணர்வற்ற பொங்கல் இது.)