Friday 1 February 2013

காற்று வாங்க போய் கவிதை வாங்கி வரலாம்.. ஆனால்..?





காற்று வாங்க போனேன் ஒரு கவிதை வாங்கி வந்தேன். இது இன்பம்தான். ஆனால் தலைவலின்னு போய் வயிறு வலியை வாங்கிட்டு வந்தா...?!


என் தோழி ஒருவர் வெளியூரிலிருந்து வந்திருந்தார்.. அவர் குழந்தைக்கு சளி, இருமல் என்று உள்ளூரில் உள்ள குழந்தைகள் மருத்துவரிடம் சென்று மருந்துகள் வாங்கி வந்து உபயோகித்திருக்கிறார்.   ஊர் திரும்பியதும் அவர் அந்த மாத்திரைகள் பற்றி இணையத்தில் தேடியுள்ளார். அவை தடை செய்யப்பட்ட மாத்திரை என்று தெரிந்தது. அதனால் உண்டாகும் பக்க விளைவுகளை பற்றியும் அறிந்திருக்கிறார். அவர் வேதியியல் படித்தவர் என்பதால் மருந்து பற்றி தெரிந்து கொண்டு பயன்படுத்துவதில் எச்சரிக்கை ஆகிவிட்டார்.  
ஆனால் எத்தனை பேர் மருந்து கம்பெனிகள் அதனால் ஏற்படும் பின் விளைவுகள் பற்றி தெரிந்து கொள்ள முடியும்? ஒரு வாஷிங் மெஷின் வாங்கவோ.. ஏ.ஸி வாங்கவோ அதன் தரத்தை, விலையை கடை கடையாய் ஏறி விசாரிக்கிறோம். எந்த கம்பெனி தயாரிப்புகள் சிறந்தது என்று பல பேரை விசாரித்து நம்மால் வாங்க முடிகிறது. ஆனால் மருந்து பொருட்களின் தரம் பற்றி நம்மால் தீர்மானிக்க முடிகிறதா? மருத்துவர் தீர்மானிப்பதைதான் நான் ஏற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறதாயிருக்கிறது.
ஒவ்வொரு மருந்து கம்பெனியிலிருந்தும் தன் விற்பனை பிரதிநிதி மூலம் மாதாத்தில் இரு முறை மருத்துவரை சந்தித்து மருந்துகளை அறிமுகப்படுத்தி, இலவசமாக சில மருந்து பொருட்களையும், பரிசுகளையும் தந்து விட்டு செல்கின்றனர். விற்பனை யுத்தியிலும் லாப நோக்கத்துடனும் மருந்து கம்பெனிகள் மருத்துவரை கவர்ந்து அதன் தயாரிப்புகளை பயன் படுத்த வைத்து விடுகிறது. இலாப நோக்கில்  தடை செய்யப்பட்ட மருந்துகளும், பக்க விளைவுகள் ஏற்படுத்தும் வீரியமிக்க மாத்திரைகளும் மருந்து சந்தையில் நுழைந்து விடுகிறது.
மருத்துவ மனைகள் அதிகமாக பெருகிவிட்டதால் கடும் போட்டி வேறு. இந்த மருத்துவமனைக்கு சென்றால் நிவாரணம் கிடைத்து விடும் என்று நம்பிக்கையை மக்களிடம் விதைக்க வேண்டும். உடனடி நிவாரணம் கிடைக்கவில்லை என்றால் அடுத்த மருத்துவமனைக்கு சென்று விடுவார்கள் என்று வீரியமிக்க மருந்து, ஊசிகளை பயன்படுத்துகின்றனர். இப்போதெல்லாம் தலைவலிக்கு மாத்திரை வாங்கினால் கூடவே வயிற்று வலிக்கும் மாத்திரை எழுதி கொடுப்பதை அறிந்திருப்பீர்கள். எந்த உபாதைக்காக சென்றாலும் கூடவே ‘ ரானிட்டின் ‘ என்ற வயிறு எரிச்சலை தணிக்கும் மாத்திரையை மருத்துவர்கள் கட்டாயம் தருகின்றனர்.
உடல் பிரச்சினைகளுக்கு இந்த இந்த மருந்துகளை
உபயோகிக்கலாமா, அதனால் எதேனும் பக்கவிளைவுகள்
உண்டா  என்பதை மருந்து கம்பெனிகள் வெளியிடும்
விளம்பரத்தைதான் நாம் நம்ப முடிகிறது.  அதில் வியாபார
நோக்கம் இல்லாமல் உண்மை தன்மை இருக்கிறதா என்ற
விழிப்புணர்வு நம் மருத்துவர்கள் அறிய முடிவதில்லை.
உணவு பொருட்களில் சாம்பார் பொடி என்று எடுத்து கொண்டால் பல கம்பெனி தயாரிப்புகள் இருக்கும் . ஆனால் மூலப்பொருட்கள் எல்லாம் ஒன்றுதான். ஒரே வேதிப் பொருட்களை கொண்டு ஒவ்வொரு மருந்து கம்பெனியும் தன் பொருட்களுக்கு வெவ்வேறு வர்த்தக பெயரை சூட்டி கொள்கிறது. அதில்  மூலப்பொருட்கள் கண்ணுக்கே தெரியாத வகையில் பொடி எழுத்துகளில்தான் குறிப்பிட்டிருப்பார்கள் என்பதால் நமக்கு என்ன மருந்து என்பதை விட மருந்தின் வர்த்தக பெயர்தான் தெரியும்.
நம் நாட்டை பொறுத்த வரை மருந்து கம்பெனிகள் பற்றி
தேசிய விழிப்புணர்வு வரவேண்டும். இதற்கு அரசாங்கமே
மருந்து கம்பெனிகள் பயன் படுத்தும் முறைகள்,
பக்கவிளைவுகள் ஏற்படுத்துமா என்ற விவரத்தையும் புதிதாக
சந்தைக்கு வரும் மருந்து தன்மைகள் பற்றியும் ஆராய்ந்து 
 மருத்துவ மனைகளுக்கு தகவல் புத்தகம் மாதாமாதம் அனுப்ப
வேண்டும். இதில் எந்த மருந்து கம்பெனிகளின் விளம்பரமும்
அனுமதிக்க கூடாது.

தடை செய்யப்பட்ட மருந்துகளை ஏன் அரசாங்கம்
அனுமதிக்கிறது? மருந்தின் பின் விளைவுகளில் இருந்து
பாதுகாக்க அரசு என்ன நடவடிக்கை எடுக்கிறது என்பது பற்றி
உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்கள்….