Friday 23 August 2013

சொன்னது என்னாச்சு?

பிரவீணா வருவதை எதிர்பார்த்து கொண்டிருந்த மல்லிகா, “  உன்னை இன்னிக்கு ஒரு மணி நேரம் பர்மிஷன் போட்டுட்டுதான வரச்சொன்னேன்... அவங்க வர்ற நேரமாச்சு...  நேத்தெல்லாம் படிச்சி படிச்சி சொல்லியும் இன்னிக்கு வேணும்னு உன் இஷ்டப்படிதான் வர்றே...?” 

“ அம்மா நீயா நினைச்சிகிட்டா எப்படி? உனக்காக நான் சீக்கிரமாத்தான் கிளம்பினேன்.. நடுவுல எதோ கட்சி ஊர்வலம்... ட்ராபிக் ஜாம் அப்படி இப்படின்னு பஸ் நகர்ந்து வர்றதுக்குள்ள வழக்கமான டைமாயிடுச்சி...”

“ நேரமாச்சின்னா ஆபிசில சொல்ற காரணத்தையே எங்கிட்டயும் சொல்றியா? போய் முகம் அலம்பி சீக்கிரமா ரெடியாகு... அப்படியே இந்த பூவையும் வச்சிக்க..” அம்மா ரெண்டு முழம் பூவை வைத்து விட்டு போனாள்.

எவ்வளவுதான் பெண்கள் படித்து உத்தியோகம் என்று போனாலும் இந்த பெண் பார்க்கும் சம்பிரதாயம் மட்டும் மாறவில்லை. அலங்காரமாய் நின்று வருபவர்களுக்கு காபி, பலகாரம் தரவேண்டும். இன்னைக்கு மட்டும் நான் அழகா தெரியனுமா? என் இயல்பான முகத்தை பார்த்துட்டு போகட்டுமே.. ப்ரவீணாவிற்கு கோபமாய் வந்தது. அம்மா எடுத்து வைத்திருந்த சேலை , நகைகளை அணியாவிட்டால் அம்மா வழக்கம் போல் புலம்ப ஆரம்பித்துவிடுவாள். சலித்து கொண்டே அலங்கரித்து கொண்டாள்.

அப்பா  இவள் என்ன சொல்ல போகிறாளோ என்று தவித்து கொண்டிருந்தார். தன் வாழ்க்கையை பற்றி நினைத்த கனவுகளை அப்பாவிடம் சொல்லிய போது, “  நீ எனக்கு ஒரே பொண்ணு  நீ சந்தோஷமா வாழனும்னு எங்களுக்கும் கனவு இருக்கும். உன் இஷ்டப்படிதான் நடப்பேன்னா... எங்களுக்கு விஷத்தை வாங்கி குடுத்துட்டு நடந்துக்கோ..
                
    பாசத்திற்காக கட்டுபடுவதை தவிர அவளுக்கு வேறு வழி தெரியவில்லை.  இன்றைக்கு பெண் பார்க்க வருவதெல்லாம் சம்பிரதாயத்திற்காகத்தான்... மாப்பிள்ளை வீட்டார் கேட்ட 50 பவுன் நகையும் வண்டியும் வாங்கி தருவதாக ஒப்பு கொண்டுள்ளார்.

ஹாலில் பேச்சு சத்தம் கேட்டு கொண்டிருந்தது. ஜன்னல் வழியாக மாப்பிள்ளையை பார்த்தவளுக்கு ஆச்சரியும், அதிர்ச்சியுமாய் இருந்தது...

ப்ரவீணாவிடம் காபியை வாங்கியவன் ஆச்சரியப்பட்டாள் இவளா பெண்?

அவர்கள் திருமண தேதி பற்றி பேசிக்கொண்டிருக்க ப்ரவீணாவிடம் தனியாக பேச வந்தான்.

“ ஏய் என்ன ஆச்சரியமா இருக்கு இல்ல..  எங்க வீட்ல உன்னைத்தான் பார்த்திருக்காங்கன்னதும் ஷாக் ஆயிடுச்சி..”

“ ம்.. எனக்கும்தான் ஷாக் ஆயிடுச்சி தினேஷ்... காலேஜ் பேச்சு போட்டியில் எல்லாம் வரதட்சணைக்கு எதிரா பேசி பரிசு வாங்கினதும், வரதட்சிணை வாங்காமத்தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு இலட்சியம் வச்சிருக்கறதாவும் பில்-டப் பண்ணிட்டிருந்த நீங்க, உங்க வீட்ல ஐம்பது பவுன் போட்டுகிட்டு பெண் வரனும்னு சொல்றதை கேட்டுக்கிட்டு அமைதியா உட்கார்ந்திருக்கிறதை பார்த்து ஷாக் ஆகாம என்ன செய்யும்?”

“ ஹா.. ஹா... சிரித்தவன்,  காலேஜ்ல ஒண்ணா படிச்சப்ப நான் சொன்னதை ஞாபகம் வச்சிகிட்டு சொல்றியா? அதெல்லாம் பிராக்டிகல் லைப்புக்கு ஒத்து வருமா ப்ரவீண்..? இன்னிக்கு நான் ஒரு கௌரவமான பிஸினஸ் மேனா இருக்கேன். இதுவே என் தகுதிக்கு கம்மி.. என்னை மாதிரியே தோஷம் இருக்கிற பெண்ணு வேணும்னுதான் தரகர் மூலமா உன் ஜாதகம் வந்ததும் அம்மா சம்மதிச்சாங்க.. நீ மட்டும் என்னவாம்? ஊனமுற்ற ஒருவருக்குத்தான் வாழ்க்கை குடுப்பேன்னு மேடையில பேசிக்கிட்டிருந்தே...?

“ தினேஷ் நான் அதுல உறுதியாத்தான் இருந்தேன்.... பெத்தவங்க உயிரை வச்சி ப்ளாக்மெயில் பண்ணிடறாங்க... எனிவே... என் அப்பா அவருக்கே தெரியாம என் குறிக்கோள் படித்தான் மாப்பிள்ளை பார்த்திருக்கிறார்.

“ என்ன சொல்ற?”

“ கொள்கை படி  நடக்காத நீங்க உள்ளத்தால ஊனமானவர்தான்... !”

ப்ரவீணாவின் பதில் அவன் மனதை நொறுக்கி கொண்டிருந்தது.