Friday 16 August 2013

யார் மனதை யார் அறிவார்..?





வேலூர் கோட்டை மைதானத்தில் தினமலர் வீட்டு உபயோக பொருட்கள் கண்காட்சி நடந்து வருகிறது. 14 –ம் தேதி மாலை யார் மனதை யார் அறிவார் என்ற தலைப்பில் டீன்-ஏஜ் பெண்கள் ஒரு பக்கமும், பாசமிகு பெற்றோர்கள் ஒரு பக்கமும் நீயா- நானா போல் விவாதம் நடந்தது. எங்களோடு எழுத்தாளர் இந்துமதி அவர்கள் கலந்துரையாடினார்.

டீன் ஏஜ் பெண்கள் பேசுகையில் பிள்ளைகளுக்கு சுதந்திரம் தருவதில்லை, வெளி உலக அனுபவத்தை கற்று கொள்ள அனுமதிப்பதில்லை.. பிள்ளைகளின் திறமைகளை வெளிக்கொணர வாய்ப்பளிப்பது இல்லை என்றும் பெற்றோர் எண்ணங்களை பிள்ளைகளின் மீது திணிக்கின்றனர் என்று பல கருத்துக்களை தெரிவித்தனர்.

பெற்றோர் தரப்பில் பேசியவர்கள் பிள்ளைகள் மீது பெற்றோருக்கு அதிக அக்கறை இருக்கிறது வாழ்வில் உயர்ந்த இடத்தை அடைய அவர்களுக்கு நான்கள் வழிகாட்டியாக இருக்கிறோம். செல்போனில் பேசவும், பேஸ்புக்கில் நேரத்தை கழிக்கவும் ஆசைப்படுகிறார்கள். வீட்டு வேலைகளில் தாய்க்கு உதவி செய்யாமல்  நண்பர்களுடன் பேசுவதிலேயே அதிக நேரத்தை கழிக்கின்றனர் என்றும் கருத்துக்களை பரிமாறினார்கள்.

கல்லூரி மாணவியான ஒரு பெண் தனக்கு ப்ளஸ்-டூ முடித்தவுடனேயே திருமணம் செய்து விட்டார்கள். என்னை என் கணவர்தான் கல்லூரி அனுப்பி கொண்டிருக்கிறார். வகுப்பில் தான் மட்டும்தான் தாலியுடன் நுழைவதாகவும், தன் மன நிலையையும் சொல்லி எனக்கு இந்த வயதில் திருமணம் தேவையா? வெகுண்டு கேட்டார்.

அதற்கு இந்துமதி அவர்கள் அந்த பெண்ணை உன் அப்பாவிற்கு என்ன வயது? எத்தனை பிள்ளைகள் என்று கேட்டார். அந்த பெண் ‘அப்பாவிற்கு  ஐம்பது வயதுக்கு மேல் என்றும் அவருக்கு ஒரு அக்கா, இரண்டு தங்கைகள்’... என்றும் சொன்னது. அதற்கு இந்துமதி அவர்கள்,

“ திருமண வயது இல்லாமல் உனக்கு திருமணம் செய்வது சட்டபடி தவறுதான் இருந்தாலும் உன் அப்பா தன் காலத்திற்குள் நான்கு பெண்களையும் நல்ல இடத்தில் கொடுத்து விட வேண்டும் என்று நினைத்திருக்கிறார். உன்னை மேற்கொண்டு படிக்க வைக்கும் நல்ல கணவராகத்தானே தேர்ந்தெடுத்து கொடுத்திருக்கிறார். எதற்கு நீ திருமணத்தை ஒரு தண்டனையாக   நினைக்கிறாய்..? திருமணத்தை  நீ தடையாக நினைக்காதே..” என்றார்.

பெற்றோர் தரப்பில் திருமணத்திற்கு பிறகுதான் தான் நிறைய படித்து, அரசு வேலை, பணி உயர்வு என்று உயர்வை அடைந்ததாகவும், திருமணம் ஒரு தடையல்ல என்பது போல் நிறைய விஷயங்களை ஒரு பெண்மணி சொன்னார்.

டீன்-ஏஜ் பெண்கள் எங்களை ஆண்- நண்பர்களுடன் பழக விட வேண்டும் அப்போதுதான் எனக்கு தைரியம், தன்னம்பிக்கை வரும் என்றார்கள். பெற்றோர் தரப்பில் ஏன் உங்கள் வீட்டில் இருக்கும் அப்பா, சகோதரர்கள் ஆண்கள்தானே என்று கேட்டார்கள்.

இந்த சமயத்தில் எழுத்தாளர் இந்துமதி இருபக்கத்திற்கும் சேர்த்து அழகாய் பதில் சொன்னார். ஆண், பெண் களங்கமில்லாமல் நட்பு ஏன் இருக்க முடியாது? வீட்டில் உள்ள சகோதரர்களுடன் அவர்கள் ஸேப்பாகத்தான் இருக்கிறார்கள். அதை தவிர்த்து நட்பு என்பது ஆரோக்கியமான விஷயம்தானே.. பெற்றோர்கள் தேவையில்லாமல் சந்தேக படக்கூடாது. பிள்ளைகளும் தங்கள் பெற்றோரை தவிர வேறு யாராலும் தங்களை அதிகமாக பாதுகாக்க முடியாது என்பதை உணர வேண்டும் என்றார்.

 பாலகுமாரன், சுப்பிரமண்ய ராஜூ இன்னும் சிலரை சொல்லி  நான் அவர்களுடன் நட்பாய் இருந்திருக்கிறேன். என் தந்தை முறைத்து கொள்வார். நான் என்ன பாலகுமாரனையா திருமணம் செய்து கொண்டேன்? இல்ல சுப்பிரமணிய ராஜூவையா திருமணம் செய்து கொண்டேன்? ஆண், பெண் இயல்பான நட்பில் இருக்க முடியும். எங்களை வைத்துதான் புது வசந்தம் படம் கூட எடுக்கப் பட்டது என்று இந்துமதி அவர்களின் நட்பை பெருமை பொங்க சொன்னார்.

மேலும் இந்துமதி அவர்கள் வீட்டில் குமுதம், விகடன் எந்த பத்திரிக்கையும் நுழையாதாம். அப்பா ரொம்ப கண்டிப்பானவராம். பள்ளி படிக்கும் போதுதான் எழுத ஆரம்பித்தாராம். பாத்ரூமில் வைத்துதான் எழுதி அனுப்புவாராம். அவர் முதல் கதையில் தலைப்பு எழுதாமல் எழுதிய அவர் பெயரையும் எழுதாமல் விகடன் அலுவலகத்தில் ஆசிரியர் மணியனிடம் கொடுத்து விட்டு வந்து விட்டாராம். பிறகு அவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு டோஸ் விட்டாராம், தலைப்பு இல்ல.. பேர் இல்ல என்று. அவர் எழுதிய 4-5 கதை வெளியில் வந்த பிறகுதான் பெற்றோர்களுக்கு தெரிந்ததாம். 

இப்போது பெண் எழுத்தாளர்கள் அதிகமில்லாத நிலை ஏற்பட்டுள்ளது என்றார்.

  எந்த விஷயத்திலும் 2 கெட்டது இருக்கும் 4 நல்லது இருக்கும் பகுத்தறிவால் ஆராய வேண்டும். உலகில் முதல் பெண் தோன்றியது முதல் உலகின் கடைசி பெண் இருக்கும் வரை பிரச்சினைகள் இருந்து கொண்டே இருக்கும். எல்லாவற்றையும் நமது பகுத்தறிவால் தெளிவு படுத்தி கொள்ள வேண்டும்.  நிறைவாக பெற்றோர்கள், பிள்ளைகள் பக்கம் நல்ல சிந்தனைகளை கூறி கலந்துரையாடலை முடித்தார்.

( இந்த டாக்-ஷோவில் நானும் கலந்துகிட்டு ஏதோ பேசினேன்...  ஹி..ஹி...!)
பி.கு- பதிவில் உள்ள படம் அங்கு நடந்த நிகழ்ச்சி இல்லை. கூகுள் இமேஜ்தான்..!
   
 நன்றி- தினமலர்