Wednesday, 13 November 2013

கடவுள் நேரில் வந்தால்....கடவுள் நேரில் வந்து எந்த வயதிற்குள் வேண்டுமானாலும் நீங்கள் போகலாம் என்றால் எந்த வயதிற்கு செல்வீர்கள்...? என்று  சிலரிடம் கேட்டதற்கு...


யசோதாபழனிச்சாமி, ஈரோடு :
அப்படி நிஜமாவே கேட்டா நல்லாயிருக்கோமுங்க... எனக்கு 12 வயசு வேணும்பேனுங்க... ரொம்ப சின்ன குழந்தையா இருந்தா ஒண்ணும் தெரியாது.. ! என்னோட 12 வயசுல எப்படி வெளையாடிருக்கேன் தெரியுங்களா? எங்க அம்மா கூட சும்மா கழுதைங்களாட்டாம் எதுக்குடி எல்லாம் குதிக்கிறீங்கன்னு எல்லாரையும் விரட்டுவாங்கங்கோ..!  அந்த வயசுல எந்த கவலையும் கெடையாது. வேளா வேளைக்கு சாப்பாடு கிடைக்கும்.. ஸ்கூல் விட்டா விளையாட்டு... விளையாட்டு...தானுங்கஎன் பசங்களுக்கு நான் விளையாடின வெளையாட்டெல்லாம் தெரியாதுங்க... அதுங்க நீங்க என் வயசில கம்ப்யூட்டர்பார்த்தீங்களா...ன்னு  கேட்டு அவங்க விளையாடற கம்ப்யூட்டர் கேம்ஸை பத்திதான் உசத்தியா சொல்லுதுங்க...! என் வாழ்க்கையில் எந்த சமயத்திலும் நான் விளையாடின விளையாட்டுக்கள்தான் மறக்க முடியாத சந்தோஷமா தெரியும்ங்க...இப்ப கூப்பிட்டா கூட நான் வெளையாட ரெடி...! என்றவர்,  சமீபத்தில் டூர் சென்ற இடத்தில்  தங்கள் பிள்ளைகள், குடும்பத்தோடுகொல.. கொல.. யாமுந்திரிக்கா ... விளையாட்டு விளையாடிட்டிருந்தப்ப மொத்த சனமும் அவங்களை வேடிக்கை பார்த்துச்சாம்ல...!


லலிதா சண்முகம், திருச்சி: என் குடும்பத்தில நான் மூத்த பெண்ணா பிறந்ததால குழந்தைகளுக்கான உணர்வுகள் எல்லாம் எனக்கு மறுக்கப்பட்டுச்சி.... என் தம்பி, தங்கைகளை பார்த்துகிட்டதால என்னால சின்ன வயசில் விளையாட முடியலை... படிப்பையும் விட்டு நிறுத்திட்டாங்க... அதனால நான் மறுபடியும் குழந்தையா மாறி ஸ்கூல் படிக்கனும், நிறைய விளையாடனும்...!


தாரகை, கும்பகோணம்: நிச்சயமா குழந்தை பருவத்துக்குத்தாங்க... குழந்தை பருவத்திலதான் கெடுதல், நம்பிக்கை துரோகம் இதெல்லாம் தெரியாது. அதனால் எந்த கவலையும் இருக்காது.  


இப்படியே நான் கேட்ட பொது ஜனங்க  20  பேரும் குழந்தை பருவத்துக்கு போக ஆசைப்படறதாவே சொன்னாங்க....

அப்படியே இவங்க கிட்டயும் கேட்டப்ப...

திண்டுக்கல் தனபாலன் அவர்கள்:  
வணக்கம்.... நல்ல கேள்வி...

பதில் பாட்டில் :

படித்ததினால் அறிவு பெற்றோர் ஆயிரம் உண்டு... பாடம் படிக்காத மேதைகளும் பாரினில் உண்டு... கொடுப்பதற்கும் சிரிப்பதற்கும் படிப்பு வேண்டுமா...? என்றும் குழந்தையைப் போல் வாழ்ந்து விட்டால் துன்பம் தோன்றுமா...?


பாலகணேஷ் அவர்கள்: 
கடவுள் மட்டும் நேர்ல என் எதிர்ல வந்தா... முதல்ல வரம்லாம் கேக்க மாட்டேங்க... ‘ஏன்யா... இப்படில்லாம் கஷ்டப்படுத்தி பரிசோதனை பண்ணிப் பாக்க நான்தான் கெடைச்சேனா’ன்னு அவரை ஓடஓட விரட்டி செம மாத்துதான்...! இதே வரத்தை என் ஃப்ரண்ட் உஷா அன்பரசு தர்றதா இருந்தா... நான் என்னோட ஆறாவது வயசுக்குத் திரும்பச் செல்ல விரும்புகிறேன் என்பேன். காரணம்... ரொம்ப ஸிம்பிள்! வாழ்வியலின் கவலைகள், நட்பு, துரோகம், இன்னபிற விஷயங்கள் எதுவும் மனதுக்குள் நுழையாமல் பள்ளி, அதன்பின் விளையாட்டு என்று கழிந்த மனோகரமான பொழுதுகள்!


 என்ன.. எல்லாரும் சொல்லி வச்சா மாதிரி ஒரே மாதிரி வரம் கேட்கிறாங்களேன்னு நினைச்சேன்.. இவங்க கொஞ்சம் மாத்தி சொன்னாங்க...

வை.கோபால கிருஷ்ணன் அவர்கள் :

16 வயதுக்கு மட்டுமே ! 

ஸ்வீட் சிக்ஸ்டீன் ஆக எப்போதுமே இருக்கவே விரும்புவேன். 


 அன்பின் சீனா.ஐயா அவர்கள் :
இப்பொழுதிருக்கும் வயதிற்குக் கீழே போக விருப்பமில்லை - மேலேயும் அதிக பட்சமாகச் செல்ல விருப்ப மில்லை.  கேட்கும் கடவுளை குறைத்து ம்திப்பிட்டு ஒரிரு வயது அதிகமாகக் கேட்கவும் மனதில்லை. எனவே அதிக பட்சமாக ஒரு 5 வயதிலிருந்து 10 வயதுக்குள் ஏதேனும் ஒரு வயது அதிகமாகச் செல்லுகிறேன் எனக் கூறுவேன். 
  
மதுரை தமிழன் அவர்கள்: 

 எனது --. காரணம் அந்த வயதில்தான் என் மனைவி குழந்தை உண்டாகி இருந்தாள். நான் தந்தையாகிவிட்டேன் என்ற சந்தோஷத்தைவிட நான் என் மனைவிக்கு ஒரு தாயாய் ஆகி நான் தாயுமானவனாக ஆன வயது அது. தாய் அருகில் இல்லாத குறை அவள் மனதில் எழாதவாது பார்த்து கொண்ட தருணம் அது. குழந்தை பிறந்த பின் அவள் தாய் வந்த பின்னும் அவளின் தாயைவிட ஒருபடி மேலேதான் நான் பார்த்து கொண்டேன். அதன் பின் எனது
 குழந்தையை என் மனைவியைவிட (தாயைவிட ) மேலாக பார்த்து கொண்ட தருணங்கள் .

( மதுரை தமிழன் கோடிட்ட இடத்தை நிரப்பி இருந்தார்... பொதுவில் பகிரும் போது சொல்லலாமா என்று அவரிடம் அனுமதி கேட்கவில்லை...) (ஆஹா மதுரை தமிழன் எப்ப அப்பா ஆனார்னு தெரிஞ்சிக்கனும்னா ஒரு அமௌண்ட்டை என் அக்கவுண்டில போடுங்க பொது ஜனங்களே...)


 

 -----------------

 நிறைய பேரின் மன நிலையை அறியவே இந்த கருத்துகேட்பு....!  எந்த கவலையும் இல்லாம சுதந்திரமா சிறகடிக்கிற குழந்தை பருவத்துக்கு போகத்தான் நிறைய பேரு ஆசைப்படறாங்க...!


நாளை குழந்தைகள் தினம்... இன்னிக்கு காலையிலர்ந்தே என் பொண்ணு ரொம்ப ஹேப்பியா இருந்தா.. நாளைக்கு ஸ்கூல்ல ஸ்பெஷல் புரோக்ராம்ஸ்.. டான்ஸ் ஆடப்போறாளாம்... ஆப் டே க்ளாஸ் கிடையாதாம்... ஜாலியா விளையாடுவாங்களாம்கல்வி முறையும், போட்டிகள் நிறைந்த சமூகமும் இவர்களை மதிப்பெண் எடுக்கும் இயந்திரமாக மாற்றி விட்டதில் இவர்களுக்கு படிப்பை தவிர்த்து ஒரு அரை நாள் கிடைக்கும் போது எவ்வளவு மன அழுத்தத்திலிருந்து விடுபடுகிறார்கள் என்றே தோன்றியது...

  
குழந்தைகள் உலகம் மகத்தானது....! அந்த உலகத்துக்கு மீண்டும் போக முடியாது என்றாலும் அந்த உலகோடு இணைந்து கொண்டாடுவோம்...!

 குழந்தைகள் தினத்திற்காக இன்னும் சில செய்திகளை சொல்ல  நினைத்திருந்தேன்... இந்த பதிவே நீளமா இருக்கு ..  


கடவுள் நேரில் வந்து எந்த வயதிற்குள் வேண்டுமானாலும் நீங்கள் போகலாம் என்றால் எந்த வயதிற்கு செல்வீர்கள்...?  நீங்களும் சொல்லிட்டு போங்க....  நானும் அடுத்த பதிவுல சொ(கொ)ல்றேன்....!