Tuesday, 11 June 2013

மெகா சீரியலுக்கு மகா நன்றிகள்...

 சிறுகதை:                               "அடைக்கலம்"

“ அலமு.. ஒரு டம்ளர்  காபி கொண்டு வா.. “  கதிரேசன் குரல் கொடுத்த அடுத்த  நிமிடத்தில் வேலைக்காரி  சுடச் சுட காபியை வைத்து விட்டு போனாள்.
காபியை குடித்து கொண்டே தினசரிகளில் ஒரு மணி நேரத்தை ஓட்டினார். ஜானகி ஹாலில் டி.வி பார்த்து கொண்டிருந்தாள். 
“ ஒரு பெண்ணா இருந்துகிட்டு இப்படி இன்னொரு பெண்ணுக்கு துரோகம் செய்ய எப்படி மனசு வருது திவ்யா…?” சீரியலில் ஒரு பெண் அழுது கொண்டே பேசிக்கொண்டிருந்தாள் . ஜானகி கண்ணாடியை கழற்றி கண்களை துடைத்து கொண்டு மீண்டும் அணிந்து கொண்டாள். சீரியல் நாயகி அழுகை முடிந்த பாடில்லை.. ஜானகியும் புடவை தலைப்பில் துடைத்து கொண்டேயிருந்ததை பார்த்ததும் கதிரேசனுக்கு சிரிப்பாய் வந்தது.
 “ ஜானு அவ காசு வாங்கிட்டு அழுதிட்டிருக்கா.. உனக்கெதுக்கு இப்படி காவிரியாட்டம் கண்ல கொட்டிட்டிருக்கு…?”
“ நீங்க பேப்பர் படிச்சிட்டிருக்கறதை நான் எதனாச்சும் சொன்னேனா? நான் டி.வி பார்த்தா உங்களுக்கு  பொறுக்காதே…!”
  ஆமாம் நீ டி.வி பார்க்கறதில எனக்கென்ன பொறாமை.. ?எவ்வளவு நேரம்தான் அழுதிட்டிருப்ப.. வந்து இப்படி உட்கார்ந்தா எதாவது சந்தோஷமா பேசிட்டிருக்கலாமில்ல…”
  வேற வேலை இல்ல..  என்னமோ நேத்திக்குதான் கல்யாண மாதிரி தனியா என்னத்தை பேசிக்க போறோம்.. சும்மா டிஸ்டர்ப் பண்ணிட்டே இருக்காதீங்க.. ஒரு மணிக்கு நியூஸ் வரும் அப்ப சாப்பிட கூப்பிடறேன் போய் அந்த கம்ப்யூட்டரை  நோண்டிட்டிருங்க…”
கதிரேசன் ஜானகியையே பார்த்துக் கொண்டிருந்தார்…  அவளை திருமணம் செய்து கொண்ட போது கூட்டு குடும்பம், இரண்டு தங்கைகள்..  தம்பி அவன் அப்பா, அம்மா என்று வீட்டு வேலை மாளாது… அவருடன் தனியாக பேச கூட சந்தர்ப்பம் கிடைக்காமல் தவிப்பாள்..  என்றாவது அவர்கள் இருவர் மட்டும் வெளியில் போகும் சந்தர்ப்பம் கிடைத்தால் பிலு பிலுவென்று பிடித்து கொள்வாள்,
“ எப்ப பார்த்தாலும் வேலை.. பிஸினஸ்.. ன்னு வாரத்தில ஒரு நாளாச்சும் என்னை வெளிய தனியா கூட்டிட்டு போகனும்னு தோணுதா?  எனக்கும் ஆசைகள் இருக்கும்னு நினைச்சி பார்க்க மாட்டிங்களா.. உங்க வீட்டுக்கு வேலைக்காரியாதான் கூட்டிட்டு வந்தீங்க  போலிருக்கு…”
  ஜானு.. ப்ளீஸ் புரிஞ்சிக்க..  எனக்கு மட்டுமில்லையா?  தங்கச்சிங்க கல்யாணம் முடியனும்.. தம்பியை படிக்க வச்சி செட்டில் பண்ணனும்.. நாளைக்கு நமக்கு பிறக்க போற குழந்தையின் எதிர்காலத்துக்குமில்ல நான் பார்க்கனும்.. கொஞ்ச நாள் பொறுத்துக்க.. அப்புறம்  ப்ரீயா இருக்கலாம்…”
ஓடி ஓடி சம்பாதித்தாயிற்று.. எல்லா கடமையும் முடிந்து மகனுக்கும் கல்யாணம் முடித்தாகிவிட்டது.  இருவரும்  நிறைய சம்பாத்தியத்தில் இருக்கிறார்கள்.  அழகான பேரக் குழந்தை.  குரல் கொடுத்தால் ஏனென்று கேட்க வேலைக்காரி..  என்ன குறை?   இருந்தாலும் எதோ கதிரேசனுக்கு மனம் வெறுமையாய்த்தான் இருந்தது.
“ ஏன் ஜானு இத்தன வருஷமாதான் எங்கயும் கூட்டிட்டு போகலைன்னு புலம்பிட்டிருந்த.. இனிமே என்ன இருக்கு… அவங்க பாட்டுக்கு வேலைக்கு போய்ட்டு வர போறாங்க.. நாம ஊட்டி ப்ளவர் ஷோக்கு போகலாமா…?
“ அட ஆசைய பாரு… சுத்தனும்னு நினைச்சப்ப எல்லாம் முடக்கி வச்சிங்க.. இப்ப பத்தடி நடந்தாவே மூட்டு வலி  இந்த லட்சணத்தில் ஊட்டி மலை ஏறி இறங்கறதாம்.. அதெல்லாம் வயசில அனுபவிச்சிருக்கனும்..  சும்மா நொய்.. நொய்னு பேசிட்டிருக்காம சீரியலை பார்க்க விடறீங்களா..?”
ஒரு காலத்தில் தனியாக பேச துடித்தவள்.. இப்போது  அவர் வாயை திறந்தாலே காதை மூடிக்கொள்கிறாள்.  இந்த பெண்கள் மட்டும் எதோ ஒரு சூழ் நிலையோடு  ஒத்துக்கொண்டு போய்விடுகிறார்கள். கதிரேசனால் இந்த வெறுமையை தாங்க முடியவில்லை.
எவ்வளவு நேரம் பேப்பர் படிப்பது, இண்டர்னெட் பார்ப்பது.. மகனும், மருமகளும் வந்தால் மட்டுமென்ன.. ஆளுக்கொரு  லேப்-டாப்பை தூக்கிகொண்டு  உட்கார்ந்து விடுவார்கள். குழந்தை கண்ணை செருகி விழும் வரை ஹோம்-ஓர்க்கை எழுதி கொண்டே இருக்கும்.  யாரிடம் பேசுவது..  பெத்த மகனிடமும் அவருக்கான நேரத்தை கேட்க முடியாது.. அவர் அவனிடம் செலவிட்டிருந்தால் தானே அவனும் அதை உணர்ந்திருப்பான். எல்லாருக்கும் தேவை.. பணம்.. பணம்.. அதற்காக ஓடிக்கொண்டிருக்கிறார்கள்.
“ என்ன  அலமு உம் புருஷன்  குடிக்காம சம்பாதிக்கிறதை ஒழுங்கா குடுக்கிறானா..?” வேலைக்காரியிடம் பேச்சை ஆரம்பித்தால் கூட,
“ அந்தாளு  ஒயுங்கா இருந்தா நான் ஏன் இப்படி  வூடு வூடா அல்லாடறேன்..  நீ கொடுத்து வச்சவரு சாரு.. ஜாலியா காலாட்டிக்கினு உட்கார்ந்துக்கினு துன்னுனு கீற… செரி செரி… உங்கூட பேசிட்டிருந்தா எனக்கு பொழப்பு போயிடும்.. இன்னும் இரண்டு வூடு போவனும்..”  உனக்குத்தான் வேற வேல இல்ல என்பதை சொல்லாம சொல்வது போல் விடு விடு என்று போவாள்.
எதோ ஒரு பாடாவதி தொடர்…  கதிரேசனும் ஜானுவின் பக்கத்தில் போய் உட்கார்ந்தார்.” ஜானு… இவன் கவிதாவை காதலிக்கிற  பையன் தானே மெக்கானிக் ஷாப்பில் ஏன் வேலை செஞ்சிட்டிருக்கான்…?”
“ அதையேன் கேட்கிறிங்க… பாவம் அந்த பொண்ணு.. இவன் ஓ.சி. காரை எடுத்துகிட்டு போய் பணக்காரன் மாதிரி நடிச்சி அவ பின்னாடி சுத்திட்டிருக்கான்… இவ மாட்டிக்க போறா… ப்ச்..” உச்சு கொட்டினாள்.
“ நீ வேணா  பாரேன்.. அதெல்லாம் மாட்டிக்க மாட்டா.. அதுக்குள்ள பக்கத்து வீட்டு ஆண்ட்டி பார்த்து காப்பாத்திடுவாங்க…”
“ என்னமோ கதைய உங்ககிட்ட சொல்லிட்டு எடுத்த மாதிரி ஓட்டறிங்க…?”
“ நான் என்ன ஓட்டறது பக்கத்து வீட்டு ஆண்ட்டிக்கும் ஒரு  ஸீனை வச்சாத்தானே … இன்னும் ஒரு வாரம் ஓட்ட முடியும்…?
முறைத்தவள்,  “ இண்ட்ரஸ்ட்டா பார்க்கிறதுன்னா பாருங்க.. இல்லன்னா எழுந்து போங்க… “
“ இது யாரு.. புதுசா இந்த லேடி…?”
“ அது கவிதா இருக்காளே அவளுக்கு………    நான்கு தலைமுறைகளை இழுத்து வைத்து உறவு சொல்லிக்கொண்டிருந்தாள்.
வேறு வழி தோன்றாமல் கதிரேசன் ஆர்வமாக கேட்டுக் கொண்டிருந்தார்.
தொலைக்காட்சி தொடரும் போட்டு விட்டு  “ உறவுகள்” – கோ  ஸ்பான்ஸர் பை.. என்று அலறிகொண்டிருந்தது.  
 ******************************************

 இந்த டி.வி சீரியலை பத்தி நாமெல்லாம்  கிண்டலும், கேலியுமா பேசிட்டிருக்கோம்… சீரியல் பார்க்கிறவங்களையும் வேலை வெட்டி இல்லாதவங்கன்னு ஏளனமா சொல்லிட்டிருக்கோம். ஆனா ஒரு விதத்தில் டி.வி சீரியல்தான் இன்னிக்கு உறவிருந்தும் அனாதையாய் தனிமையை உணரும் முதியவர்களிடம் உறவுகளா பேசிட்டிருக்கு என்பதை ஒத்து கொள்ள வேண்டியதாயிருக்கு.  கண் கூடா இதை நிறைய வீடுகள்ல பார்த்திருக்கேன்.
ஒரு வீட்ல வயதான தம்பதி. கணவர் ரிடையரானவர் , மகன், மருமகள் எல்லாம் வெளியூரில். அந்தம்மா  சமையலை முடிச்சிட்டு பத்து மணிக்கு சீரியல்ல உட்கார்ந்தா..  ஒரு மணிக்குத்தான் சாப்பாடு. மறுபடியும் இரண்டு தொடர்.. கொஞ்சம் தூக்கம். பிறகு மாலை ஆறுமணிக்கு தொடங்கினா இரவு பத்து மணி வரை.  அவங்க கணவருக்கோ கொஞ்சம் காது மந்தமாகிவிட்டது.  இவங்க ஒன்றிரண்டு வார்த்தை கூட பேச அலுத்துக்குவாங்க..” ஆமா உங்க கூட கத்தறதுக்குள் போதும் போதும்னு ஆயிடுது.. கம் முனு உட்காருங்க..”  அந்தம்மா கத்தினா அவரு வாயை மூடிகிட்டு பேசாம ஜன்னல் பக்கம்  உட்காருவாரு. கொஞ்ச நேரம் கழிச்சி தூங்குவாரு.. மறுபடியும் என்ன பண்றதுன்னு தெரியாம மனைவி கூடவே உட்கார்ந்துகிட்டு  ஊமை படம் மாதிரி சீரியலை பார்த்து கொண்டிருப்பார்.
( எனக்கு ஒரு டவுட்டு… வயசு ஆக ஆக ஆண்களுக்கு மட்டும்தான் பெரும்பாலும் காது கேட்’காது’ போகிறது. ஒருவேளை..  இத்தனை வருஷம்தான் மனைவியை ஆட்டி படைச்சாய்… இனி அவ எது திட்டினாலும் கேட்’காது’ அடங்கி போங்கள்… என்று கடவுள் ஆண்கள்  ஸ்பீக்கர் வால்யூமை  மியூட் ஆக்கி விடுகிறாரோ? ஹா..ஹா.. ஆஹ் ஹா..ஹா! )

இன்னொரு வீட்டில் ஒரு வயதான பெண்மணி மட்டும். அவங்க மகன், மருமகள் இரண்டு பேரும் வேலைக்கு போயிடறாங்க. மருமகள் அலுவலகம் போவதற்குள் மாமியாருக்கு தேவையான காலை , மதிய உணவுகளை டேபிளில் வைத்து விட்டு போய்விடுவாங்க. அவங்க குழந்தையும் ஸ்கூல் போய் விடும். நாள் முழுக்க  அவங்களுக்கு  எந்த வேலையும் கிடையாது. அவ்வளவாக வெளி உலகம் தெரியாது. அக்கம் பக்கம் கொஞ்ச நேரம் யாராவது பேசினால் உண்டு.. மத்த நேரங்களில் என்ன செய்வது ஒரு சீரியல் விடாமல் டி.வி முன் தான்.  இரவு உணவை மட்டும் குடும்பத்தோடு சேர்ந்து சாப்பிட்டு கொஞ்ச நேரம் பேசுவது மட்டும்தான் அவர்களுக்கு  மாறுதலா இருக்கும். மத்த நேரங்கள்ல…. ஒரு வேளை இந்த டி.வி சீரியலே இல்லைன்னா..? வீட்டுக்குள்ளேயே அடைஞ்சி கிடந்து அவங்களுக்கு அதுவே ஒரு மன நோயா ஆயிடுமில்லையா..?
வயதானவர்களுக்கு  மெகா சீரியல் எதோ ஒரு விதத்தில அடைக்கலமா இருக்கறதை மறுக்க முடியலை.
************

Saturday, 8 June 2013

இனி எல்லாம் சுகமே..!








ஜெய்எனக்குதலை வலிக்கிற மாதிரி இருந்தது.. பர்மிஷன்ல வீட்டுக்கு வந்துட்டேன்.நீங்க பிக்-அப் பண்ண வர வேண்டாம்…”  

சுஜிபோனில்சொல்லவும் , “ சரி நான் நேரா வீட்டுக்கே வந்துடறேன்…”  போனை வைத்தான்.

அவனுக்கு தெரியும் தலைவலி எல்லாம் இருக்காது   

அவன் தம்பி மனைவிக்கு வளைகாப்பு வைத்திருப்பதாக அம்மா அழைத்திருந்தாள். நெருங்கிய சொந்தங்களுக்கு போகாமல் இருக்கவும் முடியவில்லை..போனாலும் அவள் மனம் சங்கடம்படும்படி எதாவது நடந்துவிடும்.

போனமுறை அப்படிதான் வீட்டிற்கு போயிருந்தபோது அவன் தங்கை குழந்தையை ஆசையாய் வாங்கி சாப்பாடு ஊட்டி கொண்டிருந்தாள் 

.அம்மாதங்கையைபின்பக்கம்அழைத்து, “    விமலா உனக்கு கொஞ்சமாச்சும் அறிவிருக்கா…? அவகிட்ட போய் குழந்தைக்கு ஊட்ட தந்திருக்கியே..கண் திருஷ்டி பொல்லாதது தெரியுமா…”

மா.. நம்ம அண்ணிதானே..!”

ஆமா என்ன இருந்தாலும் வாயும் வயிறும் வேற வேறடி.. நாலு வருஷம் ஆகியும் அவளுக்கு இன்னும் ஒண்ணும் இல்லை.   உனக்கு ஒரு வருஷத்திலயே பொம்மையாட்டம் அழகா குழந்தை பிறந்திடுச்சேன்னு பொறாமையா இருக்கும்….”

குழந்தைக்கு வாய்துடைக்க பின்பக்கம் வந்த சுஜிக்கு மாமியார் சொன்னது கேட்டதும் கண் கலங்கியது. கேட்காதது போல், “ விமலா இந்தாம்மா தூக்கம் போல..தொட்டில்ல போட்டுடு…”  

குழந்தையை கொடுத்துவிட்டு அறைக்குள் போய் மௌனமாய் கலங்கி கொண்டிருந்தாள்.

என்ன யாராவது எதாவது சொன்னாங்களா..?”

அதுக்குத்தான் நான்எங்கயும் வரலைன்னேன்.. இப்படி எல்லார் வாயிலயும் நிற்கறதைவிட நான் தனியா போயிடறேன்.. நீங்க வேற கல்யாணம் பண்ணிக்கங்க…”

கோபத்தில்அவள்கன்னத்தில்பளீரென்றுவைத்தவன்…” இதையே  திருப்பி திருப்பி சொல்லாதன்னு எத்தனை வாட்டி சொல்லியிருக்கேன்.

முகத்தைகைகளால்மூடிவிசும்பிகொண்டிருந்தாள்.

ஏய்..  சுஜி ஸாரிடா.. நான் மனுஷனா இருக்கனும்னு நினைக்கிறேன்..நீ திரும்ப திரும்ப கோபபடுத்தினா.. அம்மா படிக்காதவ எப்படியாவது சொல்லிட்டு போறா.. டாக்டரே சொல்லி ஆச்சிரெண்டு பேருக்கும் எந்த குறையுமில்லைன்னு எப்ப வேணா பொறந்துட்டு போகட்டுமேன்னு நம்பிக்கையாஇரும்மா..  அப்படியே இல்லைன்னாலும் எனக்கு கவலை இல்லை..போய் வேலையை பாரு..”

ஒவ்வொரு  முறையும் சமாதானம் படுத்துவதற்குள் போதும் போதும் என்றுஆகிவிடும்.

"என்னங்க வீட்ல நம்ம ஒருத்தர் முகத்தை ஒருத்தர் பார்த்துகிட்டு எத்தனை நாளைக்கு இப்படியேஒரு குழந்தைய தத்து எடுத்துக்கலாமா…?”

சமயம் வரும் போது யோசிக்கலாம்.. இப்ப இந்த பேச்சை விட்டுடேன்…”

வீட்டில் சின்ன பல்பு மட்டும் எரிந்து கொண்டிருந்தது. பக்கத்தில் மாமி வீட்டுக்கு போயிருப்பாள்.அந்த வீட்டிற்கு ஐந்து மாதம் முன்தான் புதிதாய் வந்திருந்தார்கள் வயதானதம்பதிகளான அவர்கள். அவர் பாக்கியம் ராமசாமி கதையில் வரும் அப்புசாமி தாத்தா போலிருப்பார்.. இருந்தாலும்பேண்ட்சட்டை போட்டுக் கொண்டு மாமியுடன்தான் எங்குபோனாலும் வலம் வருவார்.அவர்கள் அன்னின்யோனத்தை சிலர் பரிகாசமாகவும், சிலர் இருந்தால் இப்படி ஒற்றுமையா இருக்கனும் என்றும் சொல்வார்கள்.

விடுமுறைநாட்களில் அரைப்பொழுது இவர்களுக்கு அவர்கள் வீட்டில் கழியும்.மாமி சுறு சுறுப்பாய் மணக்க மணக்க வத்தகுழம்பு வைத்து சாப்பிடசொல்வாள்.

காலிங்பெல்அடித்ததும், “ அச்சச்சோ நேரம் போனதே தெரியலை அவர் வந்துட்டார் நான் வர்றேன் மாமி…” வந்தாள்.

என்னங்க  இன்னிக்கு மாமாவுக்கு அறுபத்தி ஐந்தாவது பிறந்த நாளாம்அவங்க பிள்ளைங்க மூணு பேரும் மாத்தி மாத்தி போன் பண்ணி விஷ் பண்ணாங்களாம்.. “ மாமா முகத்தில எவ்வளவு சந்தோஷம் தெரியுமா?”
மாமாவிற்கு பிள்ளைகள் மீது ரொம்பப்ரியம். அவர்கள் செய்த சின்ன வயசு சேட்டைகளை சொல்லி சொல்லி சிரிப்பார்.

  தயா இருக்கனே அவன் ரொம்ப குறும்புக்காரன்.. ஒருமுறை என்சட்டை பாக்கெட்ல ரப்பர்பல்லியை வச்சுட்டான்.. நானும் பார்க்காம ஆபிஸ் போய்..டைப்பிஸ்ட் பேனா கேட்டாள்னு பாக்கெட்லருந்து எடுக்க பேனாவோட பல்லியும் அவ மேல விழ அலறி அடிச்சிட்டு டேபிளை சுத்தி   ஓடினா..
  விச்சு இருக்கானே எது திங்க கொடுத்தாலும் அவனுக்கு மட்டும் அதிகமா கொடுக்கனும்னு நினைப்பான்.. வாழைப்பழம் கொடுத்தா கூட ஸ்கேல் வச்சுஅளந்து பார்ப்பான்னா பாரேன்…”

 பொழுதுபோவதேதெரியாது.

அன்று ஞாயிற்றுக் கிழமை காலை டிபனை முடித்து விட்டு பக்கத்து வீட்டிற்கு கிளம்பி விட்டார்கள்.
  
இப்பத்தான் நினைச்சுட்டே இருந்தேன்சுடசுட காபியை தந்தாள் மாமி.

ஏனோ நேத்திலர்ந்து மாமாவிற்கு ஜூரமாயிருக்குமாத்திரை கொடுத்தேன்.. கொஞ்சங்கூட குறையல.. கொஞ்சம் ஆட்டோக்காரருக்கு போன் பண்ணிடறியாப்பா.. ஆஸ்பிட்டலுக்கு போய் வந்துடறோம்..”

என்ன  மாமி இந்த ஒத்தாசைகூட நான் செய்யமாட்டேனா? காலையிலயே என்னை கூப்பிட்டிருக்கலாமில்ல… “ மெல்ல அனத்தி கொண்டிருந்த மாமாவிடம் சென்றான்.. தொட்டு பார்த்ததில் ஜுரம் அதிகமாகவே தெரிந்தது.

சுஜி  நீ மாமிக்கு துணையா இங்கயே பேசிட்டிரு.. நான் மாமாவை
ஆட்டோவில் கூட்டிட்டு போய் வந்துடறேன்..”

மருத்துவமனையில் டிரிப்ஸ் ஏத்த சொல்லிவிட்டார்கள்.ஹாஸ்பிட்டல் விட்டு திரும்ப வர இரவு எட்டாகிவிட்டது.

வீட்டிற்கு வந்ததும் சுஜி சுக்குகஷாயம் கொடுத்து மாத்திரைகளை தந்தாள்.மாமி எதுவும்சாப்பிட தோன்றாமல் சோகமாய் உட்கார்ந்திருந்தாள். இந்தஐந்து மாதத்தில் அவர்களை சோர்வாய் பார்ப்பது இதுதான் முதல் முறை.

மாமி சொல்றேன்னு  தப்பா நினைச்சுக்காதீங்க.. இன்னிக்கு லீவு நாளாயிருக்கவே இவர் இருந்தார்..இந்த வயசானகாலத்துல நீங்க தனியா இருக்கறதைவிட உங்க பிள்ளைங்க யார் கிட்டயாவது இருக்கலாமில்லையா..”
சில வினாடி அமைதியாக இருந்த மாமி, சுஜியின் கைகளை பிடித்து கொண்டு,” குழந்தே..இத்தன பாசமா இருக்கிற உங்ககிட்ட இனிமேயும் விளையாட்டா கூட பொய் சொல்ல தோணலை..எங்களுக்கு பிள்ளைங்கன்னு யாருமில்ல…”

திடுக்கிட்டஜெய்யும், சுஜியும் மாமாவை பார்த்தார்கள் நிஜமா என்று கேட்பது போல

ஆமாப்பா..மாமி சொல்றது நிஜம்தான்தயா..விச்சு எல்லாம் என் கற்பனை குழந்தைகள்இதோ இருக்காளே இவளை நான் காதலிச்சிதான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன். எனக்கு அவளும் அவளுக்கு நானும் குழந்தையா இருக்கனும்னு ஆண்டவன் நினைச்சானோ என்னவோ எங்களுக்கு அந்த பாக்கியம் அமையலை .ஆனா அது குறையா நினைக்காம நாங்க சந்தோஷமாத்தான் வாழ்ந்தோம். இவளை அப்பவே மேற்கொண்டு படிக்க வச்சேன். டீச்சரா வேலை செஞ்சி அம்பது குழந்தைகளுக்கு தாயா..குருவா..முப்பது வருஷம் சர்வீஸ் பண்ணினா. இத்தனை நாளா எங்களை ஒதுக்கியே வச்சிருந்த சொந்தம்லாம்.. பணம் சேர்ந்ததும் எங்க கூட ஒட்ட பார்த்தாங்கஇப்ப வயசாயிட்டது இல்ல..போயிட்டா சொத்தெல்லாம் அனுபவிக்கலாம்னு எல்லாரும் அவங்க கிட்டவந்து இருக்க சொல்லி கூப்பிட்டாங்க.. நாந்தான் அவங்க முகத்தில விழிக்ககூடாதுன்னு வீடு நிலம்னு எல்லாத்தையும் வித்துட்டு ஒரு எழுபது லட்சம்வரைபேங்கில் போட்டுட்டு.. இப்படி புதுசா ஒரு இடத்துக்குவந்துட்டோம்..

இன்னிக்கு  கொஞ்சம் படுத்த பிறகுதான் லேசா மனசில கலக்கமா இருக்கு..எங்களால் முடியாதப்ப..எங்களை ஒருஹோம்ல சேர்த்து விட்டுட்டா போதும்..என் பணமெல்லாம் எங்களுக்கு பிறகு அனாதை ஆசிரமத்திற்கு கொடுக்கிறதா ஏற்கனவே ஏற்பாடு பண்ணிட்டிருக்கேன்…”   தழு தழுத்து சொல்லிகொண்டிருந்தார்மாமா.

என்ன சொல்வது இந்த ஆதர்ச தம்பதிகளை?“ மாமா.. மனசை போட்டு வருத்திக்காம..இத்தனா நாளா இருந்த மாதிரியே இருங்க. நாங்க இருக்கோம்ல..நல்லா ரெஸ்ட் எடுங்க..மாமி மாமாவுக்கு நல்லாகறவரை நீங்க கிட்டருந்துகவனிச்சுக்கங்கரெண்டு நாளைக்கு சுஜியேசாப்பாடு தந்துடுவா…”கிளம்பினார்கள். 

இரவு வெகு நேரம் இருவருக்கும் தூக்கம் வரவில்லை.“ என்னங்க.. நாளைக்கு நமக்கும் வயசாயிட்டா யாருமில்லாம தவிப்போமா..”?

அசடு சும்மாகற்பனை பண்ணிக்காத.. ரொம்ப நாளா நீ கேட்டிட்டிருந்த இல்லதத்து எடுக்கலாம்னு.. இப்ப நான் முடிவு பண்ணிட்டேன்.. ஆனா உனக்கு சம்மதமான்னு சொல்லுஎன்று விஷயத்தை சொன்னான்.

மறுநாள் அலுவலகம் முடிந்ததும் மாமி வீட்டிற்கு சென்றவர்கள்.. “ மாமா நாங்க தத்து எடுக்கலாம்னு முடிவு பண்ணிட்டோம்.. ஆனா குழந்தையை இல்லகுழந்த மனசா இருக்கிற உங்க ரெண்டு பேரையும்..உங்க சொத்தெல்லாம் உங்க விருப்படியே ஆசிரமத்துக்கு தந்துட்டு எங்க வீட்டுக்கு வந்துடுங்க..நாங்க வர்றவரைக்கும் இருண்டு கிடக்கிற வீட்டை விளக்கேத்திவச்சி எங்களுக்காக காத்திருந்தா போதும்.

மற்றவர்களுக்கு பாரமாக இருக்க விருப்பமில்லை என்று மறுத்தவர்களை அன்பால் கட்டிப் போட்டுஅழைத்து வந்துவிட்டார்கள்.

மாமா காலையில் செய்தி தாளை படித்து விட்டு காரசாரமாய் விவாதம் செய்வதும், மாமி சுஜிக்கு சமையலில் ஒத்தாசை செய்வதும்..அந்த வீட்டில்இன்னும் இருவரின் பேச்சு சத்தம் கூடியதில் கல கலப்பாக இருந்தது.
           
 ஒரு மாதம் கழித்து ஒரு நாள் மாலை சுஜி போன் செய்தாள், “ என்னங்க நான் பர்மிஷன்ல வீட்டுக்கு வந்துட்டேன்..  எனக்காக வரவேண்டாம்..”என்றாள்.

மறுபடியும் இவளுக்கு மனவருத்தம் வந்து விட்டிருக்கிறது.. அதுதான் வீட்டுக்கு போய்விட்டிருப்பாள் என்று மாலை அலுவலகம்  முடிந்து வீட்டிற்கு வந்ததும்,

சுஜி எங்க.. எதுக்கு முன்னாடியே வந்துட்டா..?

நாங்க ஆஸ்பிட்டலுக்கு போயிருந்தோம் அதனாலதான்…” என்றாள் மாமி.

காலையில நல்லாத்தானே இருந்தா.. பதட்ட பட்டவனை
இரு.. முதல்ல இதை சாப்பிட்டு அப்புறம் பேசுநாங்க தாத்தா, பாட்டியாகிற பாக்கியம் கிடைச்சிருக்கு…”  மாமி கேசரியைநீட்டினாள்.

உங்களுக்கு ஸர்ப்பரைசா இருக்கட்டுமேன்னுதான் முன்னாடியே கூப்பிடலை…” சுஜி முகம் சிவந்தாள்.

***********************