Thursday 11 April 2013

வெற்றின்னு நினைக்கிறது சில சமயம்....



  விஜய் டி.வி  யில்  நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி பார்த்து கொண்டிருந்தேன். அதில்  பிரகாஷ் ராஜ்  வெற்றி, தோல்வி பற்றி  சொல்லிட்டிருக்கும்  போது அவர் சொன்ன ஒரு நிகழ்வை ஏற்கனவே  அவர் எழுதிய  தொடரில் படித்திருந்தேன்………. அதில்  பிரகாஷ் ராஜ் சொல்லியிருந்தது…

காலேஜ் டைமில் நான் தியேட்டர் ஆர்ட்டிஸ்ட் நான் இல்லாமல் நாடகங்கள் நடக்க கூடாதுன்னு நினைப்பேன். அது ஹீரோவோ, வில்லனோ   நாடகத்தில் நான் முக்கிய ரோல் பண்ணியாகனும். என்னை  டைரக்ட் பண்ற புரபஸருக்கு என்னை ரொம்ப பிடிக்கும்.  அவர் என்ன எதிர்பார்க்கிறாரோ அதை இன்னும் அழகா, அழுத்தமா அர்த்த பூர்வமா செய்து தர்ற பையன் நான். அப்படி காலேஜ் கல்ச்சுலர்ஸுக்காக   ஒரு நாடகம் அதிலும் நாந்தான்  ஹீரோ.அதுக்கான ரிகர்சல்கள் தினம் நடக்கும்.ப்ளேக்கு ஒரு வாரம் இருக்கும் போது ஒரு   ஞாயிற்றுகிழமை. எனக்கு ரிகர்சல் போக விருப்பமில்லை. திமிர்தான். ஒரு நாள் ரிகர்சல் போகலைன்னா என்னை நாடகத்திலர்ந்து தூக்கிடுவாங்களா என்ன? நான் இல்லாம எப்படி இந்த நாடகம் நடக்கும்? னு மனசுல  ஒரு அரக்கன்  வந்து  சில நிமிஷம் உட்கார்ந்தான்.

என் புரபஸருக்கு  ரொம்ப வருத்தம்.என்னை மறுபடி அவர் ரிகர்சலுக்கு கூப்பிடவேயில்லை. ஒரு வாரம் பேசவுமில்லை. அப்புறம் என் கேரக்டருக்கு வேற ஒருத்தன் நடிக்கிறான்னு சொன்னாங்க. என்னை நாடகத்தில் இருந்து மொத்தமா தூக்கிட்டாங்க. உள்ளே இருந்த திமிர் இன்னும் உக்கிரமா தாண்டவம் ஆடுச்சி. எனக்கு பதிலா நடிக்கிற  பையன் நிச்சயமா என் அளவுக்கு நடிக்கமாட்டான். நாடகம் ப்ளாப் ஆயிடும்னு எனக்கு நல்லா தெரியும்.நிஜமாகவே நாடகம் ப்ளாப்.

ப்ரகாஷ் அந்த கேரக்டரை பண்ணியிருந்தா பின்னியிருப்பாம்பா என்று ஒட்டு மொத்த காலேஜும் எனக்கு ப்போர்ட். ப்ளே சரியில்லைன்னதும்  பசங்க ஸ்டேஜுக்கு முன்னாடி  கத்தி கலாட்டா பண்ண ஆரம்பிச்சிட்டாங்க . அதுல முத ஆள் நாந்தான்.புரபஸரை வெறுப்பேத்த விசிலடிச்சேன்.  நாடகம் தோத்ததுல நான் ஜெயிச்சுட்டேன்னு திமிர்.

மறு நாள் புரபஸர் என்னை கூப்பிட்டனுப்பினார் . கம்பீரமா உள்ளே போனேன்.” பிரகாஷ் உன் அளவுக்கு அந்த பையன் நல்லா பண்ணமாட்டான்னு எனக்கு தெரியும் நாடகம் ப்ளாப் ஆகுமுன்னு எனக்கு நிச்சயம் தெரியும் ஆனா ஏன் அதை நான் நடத்தினேன் தெரியுமா? உனக்கு உள்ளே இருக்கிற திமிருக்கு பதில் சொல்லனும்னுதான்.ஒரு நடிகனா  நிச்சயமா நீ ஜெயிப்பே. நாளைக்கே நீ சினிமாவில் கூட பெரிய நடிகனா கூட வரலாம் எனக்கு நம்பிக்கை இருக்கு. ஆனா நீ இல்லாம  எதுவுமே நடக்காதுன்னு  நினைக்கிற உன்னோட இந்த நிமிஷ திமிருக்கு பதில் சொல்லனும்னுதான்  நான் தோல்வியை ஏத்துகிட்டேன். நான் ஜெயிச்சா மட்டும் போதாது நாடகமும் ஜெயிக்கனும்னு நீ நினைச்சிருக்க வேண்டாமா?
பிரகாஷ் இது சிம்பிளான விஷயம்.. நீ இருந்தா வாழ்க்கை ஒரு வேளை ரொம்ப நல்லாயிருக்கும்தான்.. ஆனா நீ இல்லேன்னாலும் வாழ்க்கை நிச்சயமா நடக்கும். யுகம் யுகமா இதுதான் இயற்கைன்னு சொல்லிட்டு எழுந்திட்டு 
போயிட்டே யிருந்தாரு என் புரபஸர்.

கழுமரத்தில ஏத்தினது மாதிரி  என் திமிரு அங்கே  அப்போ என் கண்ணுக்கு முன்னாலேயே செத்து போச்சி.  ஜென்மத்துக்கும் அந்த குரு நாதரை மறக்க மாட்டேன்.
****

இப்ப சொல்லுங்க நாம் வெற்றின்னு இறுமாப்பு கொள்ளும் விஷயம் சில சமயம் வெற்றியா இருக்காது. சில வருடங்களுக்கு பின்னால் பிரகாஷ் ராஜ் அதே காலேஜுக்கு நடிகரா, சீப்-கெஸ்ட்டா போயிருக்கார். அப்பவும்  அவர் இல்லாமத்தான் ஷேக்ஸ்பியர்  நாடகம் நடக்குது. பக்கத்தில் ஸ்கிர்ப்ட்டோட ரிடையர்டு ஆகற கட்டத்துல அதே புரபஸர். எப்பவோ கேட்காத மன்னிப்பையும் எப்பவோ சொல்ல வேண்டிய நன்றியையும் பிரகாஷ் ராஜ்  அந்த மேடையிலேயே அந்த புரபஸர் கிட்டே சொன்னாராம்.


*********

பிரகாஷ்ராஜ் நடிப்பில் தந்தை, மகளின் அற்புதமான நட்பை சொன்ன அபியும், நானும் படத்தை பலமுறை ரசித்து பார்த்திருக்கிறேன்.