Sunday 15 April 2012

"அப்ப போல அப்பா .."





அம்மா பேசினாள் ..
' அப்பாவுக்கு காய்ச்சல் ..
பத்து நாளா சரியா சாப்பிடல..'
நாளைக்கு லீவுதானே ..
முடிஞ்சா வா..'
காத்திருந்த வீட்டு வேலைகளை ..
போட்டு விட்டு  ஓடினேன் ..
என் அப்பாவா இது ..?
வெள்ளை உடையில்
வாட்ட சாட்டமாய் ..
கைபிடித்து  பள்ளிக்கும்..
கம்பீரமாய் கல்லூரிக்கும்
அழைத்து போன அப்பாவா இப்படி..?
கண்கள் கருவளையத்துக்குள்
பின் வாங்கிஇருக்க ...
பல் இழந்த சொல்
முதுமையை மட்டுமே புரிய வைக்க ..
கட்டிலில் சார்த்தியிருந்த கைத்தடியை
புதிதாய் பார்த்தேன் ..
கற்பனையில் இருந்த
அப்பாவின் கம்பீரம்
நிசத்தின் முன்னால் நிலைகுலைய ..
முதுமை மீதே கோபம் வந்தது..
' கடவுளே..
அப்பா..
அப்ப போல இப்பவும்
தெம்பா.. கம்பீரமா ..
வேணும்..
கதறுகிறேன் மனசுக்குள்..
கண்ணாடியில்
என்னை    பார்க்காமலே ..!

(இது தேவதை டிசம்பர் 16 -31 இதழில் வெளிவந்த  கவிதை )