Tuesday 17 April 2012

சொல்லாம போச்சு


ஒளித்து  வைத்திருக்கும்
பழைய டைரி
யாருக்கும் தெரியாமல்
கைகளில் படபடக்கும்
அந்த முதல் காதலை வாசித்து.. !
பேருந்து இருக்கை ஓரம்
விழிகளை விரித்து
என்னுடனான உன் கனவையும்
போர்வை விலக்கி
பட்டு கன்னத்தில் முத்தமிட்ட
உன்னுடனான என் கனவையும்
பக்கங்களாய் நிரம்பி..!
காதலில் தானே கற்றுகொண்டோம்
கண்கள் பேசும் வித்தையை...!
பார்வை பரிமாற்றங்களில்
தொண்டையிலிருந்து
விழும்-மௌன பாஷைகளுக்கு
உனக்கும் எனக்கும் மட்டுமே
தனி அகராதி!
கற்பனைகளில் பயணித்து
கவிதையாய் வாழ்ந்து பார்த்த
நம் காதலுக்கு
ஏதோ ஓர் நாளில் முற்று புள்ளி ..!
சூழ்நிலை கைதிகளாய்
சுய விலங்கிட்டு , விசாரிக்கபடாமலே ..
விதித்தோம் மரண தண்டனை ..!
ஆனாலும்..
எங்கோ ஓர் மூலையில்
என் போல் நீயும் ..
மறக்க நினைத்து தோற்று போயிருப்பாய் ..
கனத்த மனது.. கண்ணீராகி
சொல்லாமல் சொல்லும்
காதல் வயப்பட்டதையும் அது
கழுவில் ஏற்றபட்டதையும் ...!
உயிரின் முடிவு வரை
சாகாமல் நினைவுகளை
இழுத்து பிடிக்கும் .. அந்த முதல் காதல் ...!
(இந்த கவிதை 18 - 3 - 12 கல்கியில் வெளி வந்தது )