Thursday, 16 August 2012

“ அப்ப… அப்புறம்…!”



 அடிச்சி பிடிச்சி  பஸ்ல ஏறி மேல கம்பியை புடிச்சிகிட்டதும்  அப்பதான்   ஞாபகம் வரும் நம்ம கையில் இருக்கிற வாட்ச்  மூணு நாளா ஓடாம நின்னுட்டிருக்கிறது… ‘ அடடா வாட்ச்சுக்கு செல் தீர்ந்து போயிருச்சு   நேத்தே போட்டுடனும்னு நினைச்சோமே மறந்துட்டோம் போல …  யாரும் பார்க்கிறதுக்கு முன்னாடி நாம குத்து மதிப்பா ஒரு டைமை திருப்பி வச்சிகிட்டு அப்படியே ஜன்னல் வழியே ஒரு லுக்கு விடும் போது பஸ்ல ஏறின ஒரு காய்காரம்மா கூடைய பக்கத்துல மூச்சு வாங்க வச்சிட்டு இருக்கிறவங்களை எல்லாம் விட்டுட்டு  நம்மை பார்த்து கேட்கும்.. டைம் என்னங்க? நாம ஒரு அஞ்சு நிமிஷம் கூட்டி சொல்லிட்டு திரும்பிகிட்டதோடு பிரச்சினை விடலை. ரெண்டு ஸ்டாப் முடிஞ்சதும் மறுபடியும் நம்மகிட்டயே கேட்கும் மணி என்னங்க…? ( ஏம்மா பஸ்ல எத்தன பேரு வாட்ச் கட்டியிருக்கான்… என்னையே துரத்தி துரத்தி கேட்கிற…)  வாட்ச்சை பார்த்துட்டு புருவத்தை சுருக்கி ரியாக் ஷன் தந்து ‘வாட்ச் நின்னுட்டு இருக்குங்க ..’ என்னமோ அப்பதான்   நின்ன மாதிரி பில்- டப் கொடுத்து சொல்லும்போது  அப்ப   நமக்கு வெறுப்பா இருக்கும் அப்புறம் நினைச்சி பார்த்தா காமெடியா இருக்கும்.
அப்பதான்  200 ரூபாய்க்கு ரீசார்ஜ் பண்ணிட்டு  வந்தா, நண்பன் வந்து கேட்பான் மச்சான் செல்லை வீட்டில வச்சிட்டேன் அவசரமா தங்கச்சிக்கு போன் பண்ணனும் உன் செல்லை கொடேன்னு வாங்கி, காலையில பல்ல  விளக்கினதிலர்ந்து  பாட்டியோட பாட்டி பாத்ரூம்ல வழுக்கி விழுந்தது வரை பேசிட்டே இருக்கான்.    நாம மனசுக்குள்ள அடேய்.. பர்சில் இருக்கிறதை பிளேடு போட்டாக்கூட போயிட்டு போவுதுன்னு விட்டுடலாம் (அதுலதான் ஒண்ணுமில்லையேன்னு) ஏண்டா என் செல்லை வச்சிகிட்டு ராவிகிட்டிருக்கன்னு திட்டிகிட்டிருப்போம். ஒருவழியா  தேங்க்ஸ் டா மச்சான்னு போனை தரும்போது பரவாயில்லைப்பா என்று சொல்லிவிட்டு ஆமா வீட்டிலர்ந்துதான புறப்பட்ட எதுக்கு தங்கச்சிகிட்டே இவ்வளவு நேரம் பேசின? என்று கேட்டதும், மச்சான் எனக்கு காதலின்னா உனக்கு தங்கச்சிதானேன்னு கேட்டுட்டு போயிடுவான். அப்ப   நமக்கு காமெடியா  இருக்கும். அப்புறம் நினைச்சி பார்த்தா வெறுப்பா இருக்கும்.(ஏன்னா நமக்குதான் மிஸ்டு மெசேஜ் க்கு கூட  ஆளில்லையே …! )
( இந்த மாதிரி தினசரி   நம்ம லைப்ல நடக்கிறதெல்லாம் அப்ப ஒரு மாதிரி இருக்கும்.. அப்புறம் வேற மாதிரி இருக்கும். இத படிச்சிட்டு முதல்ல சிரிச்சிட்டு அப்புறம் இதெல்லாம் படிச்சி தொலைக்க வேண்டியதாயிருக்குன்னு நீங்க அழுதீங்கன்னா அதுக்கு நான் பொறுப்பில்லைங்க…!)
கவிதை


 " ஏனோ தெரியலை ...!"
பார்க்காத போது
பகிர துடிக்கும் ஆயிரமாயிரம்
வார்த்தைகள்..
நேரிடை சந்திப்புகளில்
மவுனம் அப்பிக்கொள்ளும்
சீன சுவராய் நீளும்பேசாமல் போன சங்கதிகள்...!


( பாக்யாவில் வெளிவந்தது)
கவிதை: ( குளக்கரையில் அம்மானை ஆடும் குழந்தைகள்)




குளத்து நீரின் மேற்புறம்
சற்றே சலனப் பட்டதும்-
‘சரக் ‘ கென ஆழம்
செல்லும் மீன் குஞ்சுகளாய்..

குழுமி கிடக்கும்
குட்டிக் கைகளில்
பிடி பட்டும்..
விடு பட்டும்
தாளம் போடும்
கூழாங்கற்கள்….

அரும்பு கரங்களில்
அகப்படும் போது..
அங்கே-
மலராய் மலர்ந்தன
தாமரை சிரிப்பூ!
கவிதை :

சொன்னது என்னாச்சு..?


மாற்றல் வந்தது
மாறாத அவள் நினைவுகளோடு
இடம் பெயர்ந்தேன்
தொலைவில் இருந்தாலும்
தொலைபேசி சேர்த்தது.
காலம் வரும் வரை
காத்திருக்க கேட்டேன்..
காலம் கனிந்தது
இனிப்பான  செய்தி
சொல்ல
சொல்லாமல்  தேடிப்போனேன்..
மன்னித்து விடு
காலம் தாழ்த்தியதுன் தவறென்றாள்..
ஒரு  நாள் வாழ்ந்தாலும் உன்னோடுதான்
வாழ்வேன் என்றுரைத்த அவள் -
 இன்னொருவன் மனைவியாய்..!
“ஆதலினால்  ஊடல்  கொள்வீர்….! “

“ எனக்கும் என் மனைவிக்கும் சின்ன சண்டை கூட வந்ததில்லைங்க..” 
“என் காதலி எந்த சமயத்திலுமே கோவப் படமாட்டா…”
இப்படி யாராவது சொன்னா உடனே நாம பெருமையா அவங்களை கொடுத்து வச்சவங்க, இருந்தா அந்த மாதிரி வாழ்க்கை இருக்கனும்னு புலம்புவோம். பெற்றோர் பார்த்து வைத்த வாழ்க்கையிலோ அல்லது காதல் வாழ்க்கையிலோ  சரி … சின்ன சின்ன ஊடல் இருந்தால்தாங்க சந்தோஷமே..! ஊடல்தாங்க நம்ம வாழ்க்கையில் ஒருவருக்கொருவரிடத்திலுள்ள உரிமையை காண்பிக்கும் வாய்ப்பாக அமையும்.  ஊடலே இல்லாத வாழ்க்கையில் என்ன சுவாரஸ்யம் இருக்க முடியும். நிலத்தில் நீர் இணைந்து கலப்பது போல அன்பு காட்டுபவர்களிடம் ஊடல் கொள்வதை விட வேறு என்ன இன்பம் இருக்க முடியும்? ‘ காமத்தால் கூடி மகிழ்வதை விட ஊடுதல் இனியது’ ‘ ஊடலுக்கு இன்பம் ஊடுதல் தணிந்த கூடுதல்  ‘என்று திருவள்ளுவரே சொல்லியிருக்காரு. ஊடலின் சிறப்பை உணர்ந்தே இலக்கியங்களில் கூட அதற்கு தனி இடம் கொடுத்திருக்காங்க. சின்ன சின்ன தவறுகள் செய்யும் போதும் தவறே இல்லாத போதும் மெல்லிய ஊடல் கொள்வது வாழ்க்கையில் உரிமையை    நிலை நிறுத்தும்.  காதலியின் தோழியிடம் சின்ன ஸ்மைல் பண்ணிட்டா போதுமே … அப்ப உங்க காதலி முகம் ‘ உர்..ருனு’  போகும் பாருங்க அது உங்க மேல வச்சிருக்கிற   அன்போட  உரிமைதான்.  “ ஏய் ப்ளீஸ் இங்க பாரேன் எதுக்கு    நீ சும்மாவே தப்பா எடுத்துக்கிறே.. என் மனசுல  உன்ன தவிர யாருமில்ல.. இப்படி கோவப்படறதை விட ரெண்டு அடி  அடிச்சுடேன்..” - இப்படி நீங்க சமாதனப் படுத்தும் போது உங்க காதலி ஒரவிழி பார்வையை வீசி சின்னதா சிணுங்கும் போது அங்கே காதலின் உரிமை வெளிப்படும்.
“இன்னிக்கு ஈவ்னிங் ரெடியா இரு… நான் ஆபிஸ்லர்ந்து சீக்கிரமே வந்துடறேன் நாம சினிமா போலாம் ன்னு  மனைவி கிட்ட சொல்லிட்டு, வேலை பளுவில மறந்தே போயிடறீங்க.. வழக்கம்போல கிளம்பும் போதுதான் உங்களுக்கு ஞாபகமே வருது.  மொபைல்ல பார்த்தா ரெண்டு மிஸ் கால் இருக்கும்.. வீட்டுக்கு போனா  DTH  எபக்ட் இருக்கும்னு,போகும் போதே மனைவிக்கு பிடிச்சதா எதாவது வாங்கிட்டு போயிடறீங்க. வீட்டில் மனைவி பேசாம முகத்தை

திருப்பி வச்சிருக்கா “ அட நிம்மதியா இருக்கு.. இப்பவாவது வாயை மூடி இருக்காளேன்னு நீங்க மனசுக்குள்ள   நினைச்சாலும், மனைவி கன்னத்தை கிள்ளி, “ ஸாரிடா .. இன்னிக்கு ரொம்ப வேலை.. உங்களுக்காகதானே இவ்வளவு கஷ்டப் படறேன்..   நாளைக்கு நிச்சயமா போலாம்.. இது பாரு உனக்கு பிடிச்ச ஸ்வீட் என்று ஊட்டி விட போகும் போது. போங்க நான் எவ்வளவு ஆசை ஆசையா ரெடியா இருந்தேன் தெரியுமா என்று மனைவி சொல்லும் போது ஒரு சின்ன கோபம் வெளிப்படுமே அங்கேயும் ஒரு உரிமை வெளிப்படும். ஊடலில் பெண்கள் சின்னதா ஒரு முத்தத்தை தந்தே போர்க் கொடியை கீழே போட்டுட  வைக்கிறாங்க.
முதல்ல சொன்னவங்களை விட தினம் சின்ன சின்ன சண்டை  போட்டுக்கறவங்கதான் ரொம்ப கொடுத்து வச்சவங்க. அவங்க கிட்டதான் உரிமையும், அன்னியோன்யமும் இருக்கும். என்ன இனி ஒரு கை பார்த்துடலாம்னு.. ரொம்ப ஓவராவும் ஊடலை பில்டப் பண்ணிக்காதீங்க. ஊடல் உணவில் இருக்கும் உப்பு மாதிரி சரியான அளவுல இருந்தா சுவையா இருக்கும்.
( எப்படியோ பத்த வச்சிட்டோம்… நாங்க சண்டையே போட்டுக்கறதில்லைன்னு சொன்னவங்க எல்லாம்.. உப்பு சப்பு இல்லாத விஷயத்துக்கெல்லாம் இனி டிஷ்யூம்.. டிஷ்யூம்தான்..   நம்ம வேலை வேடிக்கை பார்க்கறதுதானே..?)

' சொல்வதெல்லாம் உண்மை..! '

கவிதை:


' சொல்வதெல்லாம் உண்மை..!  '
 எனக்கு பிடித்ததை
கேட்டாள்….
ஒன்று மட்டும்தான் உலகில்-
உயிராய் கலந்த நீ
சொல்ல வந்ததை
மெல்ல முழுங்கி..
முதலில் நீ சொல் என்றேன்
வரிசையாக சொன்னாள்..
சல சலக்கும் நீரோடை ..
பச்சை பசேல் வயல்…
மெல்ல தீண்டும் தென்றல்…
கண்ணுக்கு விருந்தாய்
காட்சிகளை சொல்லிக் கொண்டே
போனவள்-
கடைசி வரை
செவிக்கு மட்டும் படைக்கவில்லை…
‘ என்னை பிடிக்கும் ‘ என்று சொல்லி…!

Friday, 3 August 2012

ரசித்த சில சிலேடைகள்




திருமுருக கிருபானந்த வாரியாரின் உபன்யாசங்களில் அவ்வப்போது அழகான சிலேடைகள் வெளிப்படும். அவர் ஒரு சொற்பொழிவில் அந்த நாளைய சில பெரியவர்களுக்கும் இந்தக்காலத்து பெரியவர்களுக்கும் உள்ள வித்தியாசத்தைக் குறிப்பிட்டார்.
“அந்தக் காலத்தில் பழங்கள் என்றால் விரும்பி உண்பார்கள். இப்போதெல்லாம் பழங் “கள்" என்றால் விரும்பிச் சாப்பிடுகிறார்கள்."
அவரது கந்தபுராணச் சொற்பொழிவில் காம தகனப் படலத்தில் காமனை(மன்மதன்)ப் பற்றிக் கூறுகையில் (இந்துக்களுக்கு ஒரு காமன், கிறித்துவர்கள், இஸ்லாமியர் ஆகிய மற்ற மதத்தினர் என்று பல காமன்கள் கிடையாது. அனைவருக்கும் ஒரே காமன் தான். அவன் அனைவருக்கும் common(காமன்)" என்றார்.
விமர்சகர் சுப்புடுவின் விமர்சனங்களில் நயமான சிலேடைகள் காணப்படும். ஒரு முறை ஒரு பெரிய வித்வானுடைய சங்கீதத்தை விமரிசனம் செய்யும் போது அவர் குறிப்பிட்டது ;
“அன்று கச்சேரியில் அவருடைய காதிலும் கம்மல் சாரீரத்திலும் கம்மல்"

மிழறிஞர் கி. ஆ.பெ. விசுவநாதன் அவர்கள் தன் நண்பர் ஒருவரை அறிமுகம் செய்து வைத்த போது “இவர் பல்துறை வித்தகர்" என்று குறிப்பிட்டார். ஆனால் அவருடன் உரையாடிய நண்பர்களுக்கு அவர் அவ்வளவு பெரிய ஞானம் படைத்தவராகத் தெரியவில்லை. பிறகு கி.ஆ.பெ. அவர்கள் விளக்கினார்: ‘இவர் பல் மருத்துவத்தில் சிறப்புப் பட்டம் பெற்றவர். அதனால்தான் அவ்வாறு கூறினேன்'


மிழறிஞர் கி.வா.ஜவின் சிலேடைகள் பிரபலமானவை.
கி.வா.ஜகன்னாதன் ஒரு விருந்தில் கலந்துகொண்டபோது “உங்களுக்குப் பூரி பிடிக்குமா?" என்று கேட்டார்கள். “ஜகன்னாதனுக்குப் பூரி பிடிக்காமல் இருக்குமா?" என்று உடன் பதிலளித்தார்.
கி. வா. ஜ அவர்கள் ஒரு கூட்டத்தில் இம்மை - மறுமை என்ற தலைப்பில் பேச அழைக்கப்பட்டிருந்தார். அவர் உரையாற்ற ஆரம்பித்ததும் மைக் கோளாறாகி விட்டது. அதை அகற்றி விட்டு வேறு மைக் வைத்தார்கள். அதுவும் கொஞ்ச நேரத்தில் சரியாகச் செயல்படவில்லை. கி.வா.ஜ உடனே “இம்மைக்கும் சரியில்லை, அம்மைக்கும் சரியில்லை" என பேசவிருந்த தலைப்பிற்கு ஏற்றவாறு சிலேடையில் சொல்ல அனைவரும் ரசித்தனர்.

ரு இலக்கியப் பத்திரிக்கையில் ரசிகமணி டி.கே.சி அவர்களை மாதம் ஒரு கட்டுரை எழுதித் தரும்படிக் கேட்டுக் கொண்டார்கள். அதற்கு அன்பளிப்பாக மாதம் பத்து ரூபாய் தருவதாகவும் அதை அன்புடன் ஏற்றுக் கொள்ளும்படியும் வேண்டிக் கொண்டனர் அந்தப் பத்திரிகை நிறுவனத்தினர். “உங்களுக்கு மாதம் பத்து ரூபாய் என்பதில் சம்மதம்தானே" என்று அவர்கள் கேட்டதற்கு, டி.கே.சி. அவர்கள், “உங்கள் பத்திரிக்கையின் தரம் மிகவும் உயர்ந்தது. நீங்கள் கொடுக்கும் மாசம் பத்து எனக்கு மா சம்பத்து" என்றார்.