சிறுகதை
"பிள்ளையாரப்பா.. இந்த வெயில்ல..ஜனங்க எல்லாம் என் கடையில
வந்து தாகம் தீர்த்துக்கணும்.. கடை கல்லாவும் நிறையணும்.."
சொல்லிக்கொண்டே பூவை சாமிக்கு போட்டார் குமாரசாமி.
"ஏம்ப்பா செந்திலு.. மணி ஒன்பது ஆச்சு.. வியாபாரம் நடக்கிற நேரம்..
இந்த சேகரை எங்க காணோம்...?"
" அரை மணி நேரத்துல வந்துடறேன்னு சொன்னார் அண்ணாச்சி..."
" சரி... சரி.. வர்ற ஆளுங்களை சுறு.. சுறுப்பா கவனி.. அண்ணாச்சி
கடை உபசரிப்புலதான் இந்த பழமுதிச்சோலை இருபது வருஷமா
நல்லா ஓடிட்டிருக்கு... "
ஆமா ஓடி.. ஓடி.. வேலை செஞ்சாலும் பேட்டாவை ஏத்திப்புட
போறியாக்கும்.. எவனாவது டிப்ஸ் வச்சானாக்கவே கண்ணு
வைப்ப..:" என மனதிற்குள் முனகிய செந்தில் பழங்களை அடுக்கினான்.
நைந்த வேட்டியும் , ஒட்டு சட்டையும்,, போட்ட கிராமத்து ஆசாமி
கடைக்குள் நுழைந்து நாற்காலி நுனியில் அமர்ந்தவாறு செந்திலை
பார்த்தான்." ம்.. காலையில வந்துடுச்சி பாரு.. சப்ப.. கிராக்கி.. என்று நினைத்த
செந்தில் அவன் டேபிள் அருகே வர, அதற்குள் திபு திபுவென்று காரை
விட்டு இறங்கிய டிப்-டாப் ஆசாமிகள் கூட்டம் மூன்று டேபிளை
அடைத்தார்கள்.
" ஆஹா இன்னிக்கு டிப்பு டாப்புதான் என குஷியான செந்தில்
கிராமத்தானை விட்டு அவர்களிடம் சென்று " சார் என்ன வேணும்..?"
செயற்கை புன்னகைத்தான்.
"எல்லாம் அவங்க அவங்க மெனுவை சொல்லுங்க.. ஸபாரி சொல்ல ...
கஸாட்டா , ப்ரூட் ஸாலட்.. பைனாப்பிள் என ஐஸ்கீரிம்களும் ..
ஜூசுமாய் பறந்தன.
" செந்திலு அங்க பார் அவரு ரொம்ப நேரமாய் உட்கார்ந்து இருக்கார்..
என்ன வேணும்னு விசாரி.."
" ம் ... என்ன வேணும் ...? " கிராமத்தானிடம் சலித்துக்கொண்டான்.
" அந்த ஐஸ்கீரிம் எவ்வளவு..?"
" இருபது ரூபா.."
கிராமத்தான் பாக்கெடை துழாவி சில்லறையை கொட்டி எண்ணி
பார்த்தான்.. சரியாக இருபது ரூபா இருந்தது. " அதுவே சின்ன கப்
எவ்வளவுப்பா...?"
கடுப்பான செந்திலு... " பதினாறு ரூபா.." என்றான்.
" அதையே கொடுப்பா என்றவன் .." பொறுமையாக சுவைத்தான்.
டிப்..டாப் கும்பல் சாப்பிட்டு முடித்திருக்க பில் முன்னூத்தி அறுபதை
நீட்டினான்.
" ஜானு .. வெயிட்டருக்கு இரண்டு ரூபா சில்லறை இருக்கா..?
எங்கிட்ட நோட்டாதான் இருக்கு ..." ஸபாரி கிசு கிசுக்க.. கழுத்து
நிறைய நகைகளுடன் இருந்த அவள் பதிலுக்கு, " சில்லறை இல்லாட்டி
விடுங்க.. அதுக்காக பத்து ரூபாயை தூக்கி வைச்சிடாதீங்க.. கிசு
கிசுத்தாள்.
கும்பல் காலியானதும் ஏமாற்றத்துடன் பிளேட்டுகளை எடுத்த
செந்தில்... கிராமத்தான் டேபிளுக்கு திரும்பியதும்... அறைந்தார்
சில்லறைகளை விட்டு சென்றிருந்தான். இருப்பதை கொடுத்து
மற்றவர்களை சந்தோஷப்படுத்த நினைத்த அவன் இப்போது
நாகரீகமானவனாய் தெரிந்தான்.
( இச் சிறுகதை 18-07-2010 தினத்தந்தி - ஞாயிறு மலரில் வெளிவந்தது