கட்டுரை
உதை வாங்கி படிப்பதா கல்வி?
நிறைய பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை ரோபோக்களை உருவாக்குவது போல எல்லாவித கலைகளையும் அவர்கள் விருப்பமின்றியே திணித்து விடுகின்றனர்.எப்படியாவது முதல் மதிப்பெண் வாங்க வேண்டும்.... நிறைய படித்து நிறைய சம்பாதிக்க வேண்டும்.. என்று சொல்லி சொல்லி வளர்க்கிறார்கள் பிள்ளைகளை அறிவுடையவர்களாகவும், ஒழுக்கம்உடையவர்களாகவும் வளர்க்க வேண்டியது நம் கடமைதான். ஆனால்பொருளாதார ரீதியாகவே வளர்க்கப்படுவதால் முன்பிருந்த கூட்டுகுடும்ப பாசம் குறைந்து வருகிறது. என் அண்ணன் அவரது மகனை +2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற வேண்டும் என்பதற்காக லட்சகணக்கில் செலவழித்து சேலத்தில் ஹாஸ்டலில் சேர்த்து உள்ளார். அந்த பள்ளியில் படிப்பவர்கள் எல்லாரும் ஆயிரம் மதிப்பெண்ணிற்கு மேல்தான் எடுப்பார்கள். அந்த மதிப்பெண் பெறவைக்க பிள்ளைகளை படுத்தும் பாடு .. மிகவும்கொடுமையானதாக உள்ளது.தேர்வு சமயங்களில் இரவு 12 மணி வரை படிக்க வேண்டுமாம்.தூக்கம் வந்தால் என்ன செய்வாய்..?என்றேன். 'தூங்கமுடியாது . அரை மணி நேரத்திற்கு ஒரு முறை ரவுண்ட்ஸ்வந்துகொண்டேயிருப்பார்கள்.. தூங்கினால் முதுகில் பளீர் என்றுஅடி விழும் என்று புலம்பினான். மறுபடியும் நாலரை மணிக்குஎழுப்பிவிட்டுவிடுவார்களாம். இது தினமும் நடக்குமாம்.விடுமுறையிலும் ஸ்பெஷல் கோச்சிங். மாதம் ஒரு முறை பெற்றோர் வந்து பார்த்து விட்டு போகலாம். வாரம் ஒரு முறை பெற்றோருடன்போனில் பேசலாம்.அதற்கும் கெடுபிடி அதிகம்.பெற்றோர் அரவணைப்பு இல்லாமல், ஹாஸ்டல் சாப்பாடு .. தூக்கம் ,உடல் நிலை கெட்டு..இப்படித்தான் அறிவை வளர்க்க வேண்டுமா என்ன..?இப்படியெல்லாம நிறைய மதிப்பெண் பெறுகிற பிள்ளைகள். பொருளாதார ஆசையில் ..தாயையும்..தாய் மண்ணையும் விட்டுவிட்டு நிறைய சம்பாதிக்க வெளி நாடு ஓடிவிடுகிறார்கள். அப்துல் கலாம் போன்ற மேதைகள், சாதனையாளர்கள் எல்லாம் பெரிய பள்ளியில் இப்படி அவஸ்தைப்பட்டு முன்னேறியவர்களா என்ன..? பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் வழிகாட்டுதல், சொந்த ஆர்வம், அறிவு, ஒழுக்கம் ஆகியவைதானே அவர்களை இந்த அளவுக்கு உயர்த்தியுள்ளது. பெரிய பள்ளி என்ற மோகத்தை விடுங்கள். படிப்பால் சாதித்து முன்னேறும் போது சமுதாயத்திற்கு செய்ய வேண்டிய கடமைகளை புரிய வையுங்கள். பெரிய பள்ளியில் தள்ளி விட்டு நம் கடமை முடிந்துவிட்டதாக தயவு செய்து நினைக்காதீர்கள். அந்த தவறில் ஈடுபட்டால், குழந்தைகள் படித்து முடித்து நல்ல வேலையில் சேர்ந்ததும், குடும்பத்திற்குசிறிது காலம் பணத்தை கொடுத்தபின் பெற்றோரின் கடனை தீர்த்துவிட்டதாக நினைத்து உங்களை ஒதுக்கி விடுவார்கள். பெற்றோர்கள்தான் பிள்ளைகளுக்கு வழி காட்டிகள். அன்பும்,அறிவும் தந்து காப்போம். நல்ல சந்ததியினரை உருவாக்குவோம்.
( 29-1-2011 தின மலர்- பெண்கள் மலரில் வந்தது)