Wednesday, 9 May 2012

சிறுகதை

மறந்துவிடு கண்மணி


" நிவேதா நீ ஒண்ணும் சின்ன பெண்ணில்லை.. உனக்கு சொல்லி
புரிய வைக்க,, இத்தனை நாளா வர்ற ஒவ்வொரு வரனுக்கும்
எதையாவது காரண்ம் சொல்லிட்டிருந்தே.. போன வாரம் திருப்பூர்ல
இருந்து வந்த வரன் உனக்கு எல்லாவிதத்திலயும் பொருத்தமா
இருக்கு. இனியும் தள்ளி போட்டா சொந்த பந்தங்களுக்கு என்னால்
பதில் சொல்ல முடியாது... உன் முடிவை இரண்டு நாளைக்குள்ளே
சொல்லு...." அப்பா கொஞ்சம் கடுப்பாகவே சொல்லிவிட்டு
வெளியே கிளம்பினார்.
நிவேதாவிற்கு எங்காவது கண் காணாத இடத்தில் போய் சாகலாமா
என்று கூட தோன்றியது. டிரான்ஸ்பரில் சென்ற முகேஷ்
நாலு மாதமாக தினமும் அக்கறையாகத்தான் போன் பண்ணி
பேசிக்கொண்டிருன்ந்தான். திடீரென்று பதினைந்து நாட்களாக
செல்லை ஆப் செய்து வைத்திருந்த அவன் .. நேத்து சொன்ன
வார்த்தைகளில் நிவதாவிற்கு மயக்கமே வந்தது.
" நிவேதா நான் சொல்றதை கேட்டுட்டு என்னை என்ன வேணா
திட்டிக்கோ.. மறுத்து பேச எனக்கு அருகதை இல்ல.. பத்து நாளக்கு
முன்னாடி எனக்கு கல்யாணமாயிடுச்சி.. அதற்கான விளக்கத்தை
உங்கிட்ட சொல்ல முடியாது.. தயவு செய்து நாம பழகின நாட்களை
கெட்ட கனவா மறந்துட்டு .. உனக்குன்னு நல்ல வாழ்க்கை
அமைச்சிக்கோ.. இனி என் கூட பேச டிரை பண்ணாதே.. " போனை
ஆப் செய்தான்.. அப்படியே காதலையும்.
ஒரே அலுவலகத்தில் நட்பாய் பழகிய அவர்களின் எண்ணங்கள்
ஒரே அலைவரிசையாய் இருக்க .. காதலானது. பார்வைகளையும்,
கனவுகளையும் பரிமாறிக்கொண்டார்கள்.
" நிவே.. எனக்குன்னு நிறைய பொறுப்புகள் இருக்கு.. நம்ம
கல்யாணத்திற்கு இரண்டு வருஷமாவது நீ காத்திருக்கணும்..."
" ம் .. என்னோட முகேஷுக்காக காலம் முழுக்க கூட
காத்திருப்பேன்...."
" பார்த்து.. பார்த்து.. இன்னும் அஞ்சு வருஷம் போனா நீ
கிழவியாயிடுவே.. என்னால உன்னை பார்க்கவே முடியாது.
" அப்ப அழகா இருக்கிறவரைதான் என் கூட பேசுவியா..?
கோபத்துடன் முகத்தை திருப்பி கொண்டாள்."
" ஏய்.. நிவே.. சும்மா விளையாட்டுக்கு சொன்னேன்.. கோவத்துல
நீ எப்படி இருக்கேன்னு பார்க்கதான்.. உன்னை மறக்கறதுன்றது
என்னால முடியாது. குடும்ப பாரம் மொத்தத்தையும் முதலா
பொறந்து தாங்கிக்கிட்டிருக்கேன்... நிறைய பிரச்சினைகள் இருக்கு..
இதுல என்னோட காதல் உன்னை பாதிச்சிடக்கூடாதேன்னு ரொம்ப
நாளா யோசிச்சிதான் உங்கிட்ட சொன்னேன்.. நல்ல காலம் வர்ற வரை
மனசுக்குள்ளேயே.. வாழலாம்டா...செல்லம்..."
"... ரொம்பத்தான் கொஞ்சறாப்பல இருக்கு...
" ஆமா அதுல என்ன தப்பு ? நீ பேசறதை கேட்டுகிட்டே இருக்கலாம்
போலிருக்குதுடி... குழந்தை மாதிரி உன்னோட பேச்சு.. துறு..
துறுன்னு.. உன் பார்வை.. உன்னை அப்படியே.. ம்.. கஷ்டபட்டு
என்னை கட்டுபடுத்திக்கிறேண்டி..
முகேஷ் அவளை காதலுடன் அவளை.. "டீ" போட்டு பேசும்போது
நிவேதா ரொம்பவே சந்தோஷபடுவாள். இப்படி எல்லாம்
பேசியவனா ... நேற்று அப்படி ஒரு இடியை தூக்கிப்போட்டான்..?
எப்படி அவனால் மறக்க முடிந்தது.. காதல் என்ற வார்த்தையை
நிவேதாவின் வாயிலிருந்து வந்தால் மானம் போய்விட்டதாக
நினைக்கும் அப்பா.. அம்மாவிற்கு தான் ஏமாந்ததை எப்படி சொல்ல
முடியும்..?
ரஞ்சனியிடம் மனம் விட்டு அழுதாள். ரெயில் நகர்ந்து கொண்டிருக்க..
பக்கத்தில் இருப்பவர்கள் யாராவது பார்த்து விட போகிறார்கள் என்று
கண்ணீரை அடக்கி சோகமாய் உட்கார்ந்திருந்தாள்.
" நிவேதா .. மனசுக்கு ஆறுதலா இருக்கட்டும்னுதான் நாம இப்ப
வெளிய போறோம்.. முகேஷ் இப்படி பண்ணுவான்னு நானும்தான்
எதிர்பார்க்கலை.. என்ன பண்றது .. எல்லோரோட இன்னொரு
முகமும்.. ஏதாவது ஒரு சந்தர்ப்பத்திலதானே வெளிப்படுது..?
உங்கம்மா... உனக்கு அட்வைஸ் பண்ண சொல்லி என் கிட்ட போன்ல
சொல்லி வருத்தப்பட்டாங்க.. திருப்பூர் மாப்பிள்ளை விஷயமா
உங்கிட்ட நல்ல பதிலா வரணும்னு..."
" உலகமே முகேஷ்னு நினைச்சேண்டி.. எப்படி என் மனசை மாத்திக்க
முடியும்..."
" மாத்திதான் ஆகனும்.. காதலோட வாழ்க்கை முடிஞ்சிடறதில்லை..
நிவேதா.. அவன் தான் நல்லவன் இல்லைன்னு தெரிஞ்சி போயிடுச்சே..
அந்த அயோக்கியனை.. நம்ப வைச்சி ஏமாத்தினவனை மனசுல
இருந்து தூக்கி போடு..."
"............................"

".. ஏய் ... அங்க பாரு.. அந்த குருட்டு பிச்சைக்காரனை! அவன்
நீட்டற தட்டில காசு விழுதோ இல்லையோ.. அவன் பாடற பாட்டை
பாரு.. " ஒளி மயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறதுன்னு...' .
எவ்வளவு நம்பிக்கையா பாடறான்..? உலகத்தில எவ்வளவோ
கஷ்டமிருக்கு.. அதுக்காக் யாரும் தற்கொலை பண்ணிக்கறதில்லை..
ரெண்டு ரூபா.. மூணு ரூபாய்க்காக வெயில்ல உட்கார்ந்து
செருப்பு தைச்சிட்டுருக்கிற அந்த பெரியவரை பாருடி.. வாழ்க்கையை
போராடி வாழ்ந்து பார்க்கணும்.. நீ நல்லா சம்பாதிக்கற.. பண்பான
அப்பா.. அம்மா.. உனக்கு காலாகாலத்துல் நல்ல வாழ்க்கை
அமைச்சு தரணும்னு அவங்க நினைக்கிறது தப்பா..? மனசிலிருக்கற
பொய்யானவனை தூர தூக்கி போட்டுட்டு.. உன் வீட்டில நல்ல
பதிலை சொல்லு.."
உடலும் .. மனசும் சோர்ந்து போன நிவேதாவிற்கு முகேஷ்
மேல் கோபமாய் வந்தது. தன்னை அழ வைத்தவனை ஏன் நினைக்க
வேண்டும்.. என்று கண்ணீரை துடைத்தவள், வீட்டில் திருமணத்திற்கு
சம்மதம் சொல்லிவிட்டாள்.
"நிவே .. நீ வேற ஒரு வாழ்க்கைக்கு சம்மதிச்சிருப்பே.. நீ நல்லா
இருக்கணும்னுதான் ஒரு பொய்யை சொல்லிட்டேன்..நம்ம
காதல் நிஜம்.. நீ என் மனசுக்குள்ள் இருக்கறதும் நிஜம்..
என்னோட மனசுக்குள்ள உன்னுடன் ஒரு வாழ்க்கையை நிழலா
வாழ்ந்திட்டிருப்பேன்..." கண்ணீரை துடைத்த முகேஷ் எழ முயற்சிக்க..
அவன் தங்கை.. உமா ' மெல்ல அண்ணா...' தாங்கி பிடித்தாள்.
பத்து நாட்களுக்கு முன் ஒரு கார் விபத்தில் முகேஷ் ஒரு காலை
இழந்திருந்தான்.
(20-2-2010 தினத்தந்தி- குடும்ப மலரில் வெளியானது)