Thursday 17 May 2012

சிறு கதை

திலகாவும்.....மாலாவும்...!



 
" மாலா வேலை எல்லாம் முடிச்சிட்டியா..?திலகா பக்கத்து வீட்டு காம்பவுண்டிற்குள் எட்டி கேட்க ,
" இதோ வந்துட்டேங்கா.. 12 மணி சீரியலுக்குள்ள சாதம் வச்சுடாலாம்னு உலை வச்சேன்.. அதுக்குள்ள நீங்க கூப்பிடவே சிம்ல வைச்சிட்டு வந்துட்டேன்..."
" உனக்கு ஒரு விஷயம் தெரியுமா..? நேத்து நான் மார்க்கெட் பக்கம்
போயிட்டிருந்தப்ப எதிர்த்த வீட்டு கமலாவோட பொண்ணு எவனோ ஒருத்தன் கூட பைக்ல போயிட்டுருந்தா...என்னை பார்த்ததும் பார்க்காத மாதிரி திரும்பிகிட்டா..காலேஜ் போறன்னு இப்படிதான் சுத்தறா போலிருக்கு...."
" அப்படியாக்கா.. என்னவோ எப்பவும் நாம வம்பு பேசிகிட்டிருக்கறதா அந்த கமலா சிலுத்துக்கறாளே.. அவ பொண்ணு இப்படி லவ்வு
கிவ்வு ன்னு ஓடி போனா தான் திமிர் அடங்கும்."
" போனவாரம் வாத்தியார் வீட்டு பொண்ணு எவனோடயோ ஓடிபோச்சே.. வாத்தியார் சம்சாரம் எங்க அடங்கினா..? மினுக்கி கிட்டுதானே திரியறா...?"
" நம்ம அலமு மாமி எங்க ரெண்டு நாளா பேசவே வரலை...?"
" அதையேன் கேட்குற.. நல்ல பொண்ணுன்னு விசாரிச்சிதான் அவங்க பிள்ளைக்கு கட்டி வைச்சாங்க.. அந்த சுதா பண்ற அட்டகாசம் இருக்குதே.. மாமியாரை மதிக்கறதே இல்லையாம். அதான் மாமி பொண்ணு வீட்டிலயாவது இரண்டு நாள் இருந்துட்டு வரலாம்னு போயிருக்காங்க.. "
திலகாவின் கணவன் வரதனை பார்த்ததும், " நான் வர்றேங்கா.. என் வீட்டுக்காரரும் வந்துடுவார்.. நான் போய் சமைக்கனும்..." என்று கழன்று கொண்டாள் மாலா.
" ஏய்.. திலகா எத்தனை வாட்டி சொல்றது வீண்கதை எல்லாம் பேசி நேரத்தை வீணாக்காதேன்னு.. நமக்கும் வயசு பொண்ணு இருக்கு ... கொஞ்சம் வாயை அடக்கு..."
வரதன் சாப்பிட்டு கிளம்பியதும் டிவி சீரியல்களில் மூழ்கினாள் திலகா.
மாலை ஏழு மணிக்கு திலகா பதட்டமாய் பேசினாள்,
" என்ங்க நாம மோசம் போயிட்டோங்க.. நம்ம கீதா ஆறு மணியாகியும்
வரலையேன்னு அவ பிரெண்டுக்கு போன் போட்டா , கீதா இன்னிக்கு காலேஜுக்கே வரலையாம். அவ ரூம்ல போய் பார்த்தா..பக்கத்து தெருவில இருக்கிற பாலுவை காதலிக்கறதா லெட்டர் எழுதி வச்சிட்டு போயிருக்காங்க.. அந்த கழுதை எங்க இருந்தாலும் உதைச்சி வெளியில தெரியறதுக்குள்ளே கூட்டிட்டு வாங்க..." என்று அழுதாள்.'
மறு நாள் வாசலில் கோலம் போட  திலகா கதவை திறக்க , எதிர்த்த வீட்டு
கமலாவிடம், " ம்.. ஊர்ல இருக்கறவங்களை பத்தி எல்லாம் கதை பேசிகிட்டுருக்கா.. அவ பொண்ணு என்ன பண்றான்னு பார்த்து கண்டிக்கலை...அந்த திலகாவிற்கு இப்பவாவது புத்தி வரட்டும்கா..." மாலா சொல்லி கொண்டிருந்தது தெளிவாக கேட்டது.
( 8-10-2011 தின மலர் - பெண்கள் மலரில் வந்தது)