" என்ன ரம்யா சைலண்ட்டா உட்கார்ந்திருக்கே..? நமக்கு புதுசா
கல்யாணமாயிருக்கு, பேசறதுக்கு நிறைய விஷயமிருக்கு..பீச்சுக்கு
வந்து பத்து நிமிஷமா அந்த அலையையே பார்த்துக்கிட்டிருக்க.. ஏன்
என்னை பிடிக்கலையா...?"
"... அய்யய்யோ... அப்படி எல்லாம் தப்பா எடுத்துக்காதீங்க, உங்களை
கல்யாணம் பண்ணிக்கிட்டதுக்கு நான் கொடுத்து வச்சிருக்கணும்.,,,"
" ஏய்... நீ நிறைய பொய் பேசுவியா..? சிரித்த மகேஷ்..."ரம்யா
நானும்தான் கொடுத்து வச்சிருக்கேன்...அழகான
அமைதியான மனைவி அமைஞ்சதுக்கு... உன்னை விட நான் அழகு
கம்மிதான்.அதனால பிடிச்சிதான் சம்மதிச்சியா... இல்லை, உங்க வீட்ல
சொன்னங்கன்னு ஒத்துகிட்டியான்னு குழப்பம் வந்திடுச்சி..நீ இப்படி
அமைதியா இருக்கிறதை பார்த்து...! "
"அதெல்லாம் ஒண்ணுமில்லைங்க..என்ன பேசறதுனு தெரியலை...என்ற
ரம்யாவின் கைகளை மென்மையாக பிடித்து தன் கை விரல்களோடு கோர்த்து
கொண்டவன்.., ரம்யா அங்கே பாரேன்..அந்தl அலைகளெல்லாம் எவ்வளவு
சந்தோஷமா குதிக்குது என் மனசை போல... இதுவரை ஆபிஸ்... வீடுன்னு
இருந்துட்டேன். அம்மா ரொம்ப கண்டிப்பு. அப்பா இல்லாம வளர்க்க ரொம்ப
சிரம பட்டாங்க . அப்பாவோட கண்டிப்பு இல்லாம நான் எங்கே
கெட்டு போயிடுவேனோன்னு..பயந்து ரொம்ப கட்டுக்கோப்பா
வளர்த்தாங்க.. நல்லா படிச்சேன். நல்ல வேலைன்னு செட்டிலான
பிறகுதான் அம்மா ரிலாக்ஸானங்க.. அவங்க ஆசைப் பட்டபடி என்
கல்யாணத்தையும் நல்லபடியா முடிச்சிட்டாங்க.. !
மகேஷ் பேசிக்கொண்டேயிருந்தலும்.. ரம்யாவின் மனசு மட்டும்
கவலையில் உறுத்தி கொண்டிருந்தது.. இதே கடற்கரைக்கு எத்தனை
முறை ரிஷியோடு வந்திருப்பாள்.. வீட்டிற்கு தெரியாமல்.. ஓரே
அலுவலகம்.. ராஸ்கல் பேசி பேசியே.. அவள் மனதிற்குள் நுழைந்தான்.
பார்க்.. பீச்.. என்று ஒரு வருடம் சுற்றி விட்டு இவளை விட வசதியான
பெண் வீட்டில் பார்த்ததும் கழன்று கொண்டு விட்டான். நல்ல
வேளை, அவனுடன் எல்லை மீறிப்போகவில்லை என்பது மனதிற்கு
ஆறுதலை தந்தது. " ரம்யா.. மல்லிகைன்னா எனக்கு ரொம்ப பிடிக்கும், வாங்கட்டுமா..? என்றவன் கூடையில் பூ எடுத்துக்கொண்டு போனவளை
கூப்பிட்டான். அந்த பூக்காரியை பார்த்ததும்
ரம்யாவிற்கு முகம் வெளிறியது. இவளிடம் நிறைய முறை ரிஷி பூ வாங்கி
தந்திருக்கிறான்.இவள் எதையாவது என்னை தெரிந்த மாதிரி காட்டி
உளறி.. என்ன நடக்குமோ என்று.. மனசுக்குள் பயம் கவ்வியது.
அருகில் வந்து உற்றுப்பார்த்தவள் , கழுத்தில் புது தாலி பள
பளத்ததை பார்த்து புன்னகைத்து, " சாரே முழம் பத்து ரூபா.. மூணு
முழம் வாங்கிக்கோ.. என்றாள். மகேஷ் பாக்கெட்டில் இருந்து நூறு
ரூபாய் நோட்டை நீட்டினான்.
" சார்.. சில்லறை இல்லையே.. அதோ அங்க ஸ்டால் போட்டு சுண்டல்
வச்சிருக்காரே, அவரு என் வீட்டுக்காரர்தான்.. அங்க குடுத்து
சில்லறை வாங்கியா...."
அவனை அனுப்பி விட்டு ரம்யாவின் அருகில் வந்தவள். " இந்தா
பொண்ணு பயப்படாதே. உன் புருஷன் கிட்ட எதுவும் தப்பா
சொல்ல மாட்டேன்.என்னதான் ஒதுங்கி ஜாக்கிரதையா போனாலும்
சில சமயம் கார்காரன் மழை தண்ணியில ' சர்' னு போய் நம்ம மேல
சேறை அப்பிட்டு போயிடுவான்.. பார்த்தா நீ நல்ல பொண்ணா
இருக்கே, பழசெல்லாம் மறந்துடு. மேல விழுந்த சேற்றை கழுவிட்டு
போயிட்டே இருக்கணும். இனி இந்த வாழ்க்கைதான் உனக்கு நிஜம்
தாயீ. புருஷன் மனசு கோணாம நல்லபடியா வாழு..."
மள.. மளவென்று சொல்லி முடித்தவள் , மகேஷ் வருவதற்குள் தள்ளி
நின்றுகொண்டாள். சில்லறை வாங்கிக் கொண்டு புறப்பட்டவளிடம்
ரம்யா கண்களால் நன்றியை சொல்ல .. சிரித்து விட்டு போனாள்..
பூக்காரி." ரம்யா , வேறேன்ன புடிக்கும் உனக்கு சொல்லு...?" என்றவனின்
நெஞ்சில் சாய்ந்து , " காலம் பூரா உங்க அன்பு மட்டுமே
போதுங்க... " சொன்னபோது ரம்யாவின் கண்களில் நீர் கசிந்தது.
( இச் சிறுகதை 27-11-2011 தினத்தந்தி- குடும்ப மலரில் வெளியானது)