Thursday 17 May 2012

துணையாய் வருவாயா...?

சிறுகதை

துணையாய் வருவாயா...?


செல்வி அப்படி செய்வாள் என்று அவள் அப்பாவும் , அம்மாவும்
எதிர்பார்க்கவில்லை.. ஆஸ்பத்திரியில் ட்ரிப்ஸ் ஏறிகொண்டிருக்க... அவர்களோடு கதிரும் கவலையோடு உட்கார்ந்திருந்ததை பார்த்து செல்வியின் அம்மா ருக்மணிக்கு கோபம் வந்தது,
" கதிரு.. இப்ப திருப்தியா...?
கதிர் எங்கோ வெறித்தான்.
செல்வியின் அப்பா சங்கரலிங்கம் மனைவியை அதட்டினார். " ருக்கு அவனை நொந்துக்காதே.. நம்ம நேரத்துக்கு யாரையும் குறை சொல்ல கூடாது..."

ருக்மணியின் கைகளை பிடித்து கொண்டு அவள் தங்கை மகள் கவிதா பேசினாள், "பெரியம்மா நேத்து ஸ்கூல் விட்டு வரும்போதே செல்வி கஷ்டமாத்தான் பேசினா.. "இனிமே அலங்காரம் பண்ணிகிட்டு எவன் முன்னாடியும் நிற்க முடியாதுடி...அம்மா , அப்பா படற வேதனையை தாங்க முடியலை.. கல்யாணம்னு ஒண்னு நடந்தாகனும்.. என் மாமா கதிரு கால்ல விழுந்தாவது என்னைய கட்டிக்க சொல்றேன்னு சொன்னா.. அந்த சென்னை மாப்பிள்ளை சம்பந்தம் நின்னு போனதிலஅவ ரொம்ப வெறுத்து போயிட்டா..."
' கவிதா இந்த இருபது நாளா எனக்காக கூட வேண்டலைடி...அவர் நல்லாருக்கனும் என்னை நல்லா பார்த்துக்கனும்னு மாஞ்சி மாஞ்சி சொல்லிட்டிருந்தா..."
பதிலுக்கு நான் அவகிட்ட ' அவன் நல்லவனா இருந்தா அவன் அம்மா போடற கண்டிஷனுக்கு வாயை மூடிட்டு இருப்பானா..? பேராசை பிடிச்சவங்க கிட்ட போய் மாட்டிகிட்டு காலமெல்லாம் கஷ்டபடறதை விட , கவலை படாம இரு நல்லதை நடக்கும்னு.. எவ்வளவோ சொல்லி அனுப்பினேன்..."
செல்விக்கு என்னவோ கதிர் மேல்தான் விருப்பம். சங்கரலிங்கமும் பெண்
ஆசைபடுகிறாளே என்று கதிரிடம் சென்று பேசினார்.
அவனோ, " மாமா .. எனக்கு எந்த யோசனையும் இல்ல.. செல்வியை வெளியில கட்டி கொடுத்திடுங்க..." என்றான்.
ஜாதக தோஷம் ... அது... இதுவென்று ... தள்ளிக்கொண்டு போனதில் செல்விக்கு இருபத்தியெட்டு வயதாகி விட்டது. ருக்மணி போகாத கோயில் இல்லை...
போனமாதம் வந்த அந்த சென்னை வரன் ஜாதகம் பொருந்தியிருந்ததோடு ,மாப்பிள்ளையும் நன்றாக இருந்தான்.பரஸ்பரம் பேசி முடித்துவிட்டு... 'ஆடி போகட்டும்.. நல்ல நாளாய் பார்த்து வருகிறோம் என்று போனார்கள். ஆடி முடிந்து பதினைந்து நாளாகியும் எந்த தகவலும் வரவில்லை...சங்கரலிங்கமே போன் செய்தார். " ஏதோ ஜாதகம் பொருந்தி இருக்குதேன்னு பார்த்தோம்.. பொண்ணுக்கு படிப்பும் கம்மி.. நர்சரி ஸ்கூல்ல வேலை பார்க்கிறது இதெல்லாம் எங்க சொந்தக்காரங்க குறைச்சலா நினைப்பாங்க... அதனால எழுபது பவுன் போட்டு, கார் வாங்கி தருவதாக இருந்தால் மேற்கொண்டு யோசிக்கலாம்..."
மாப்பிள்ளையின் அம்மா கறாராய் சொன்னாள்.
பைக் தந்து கல்யாணம் பண்ணவே கடன்பட்டு செய்ய இருக்கும் சங்கரலிங்கத்திற்கு அந்த அம்மாவின் பேச்சு தட்டி கழிப்பதாகவே பட்டது.
" அப்பா இந்த இடமே தேவையில்லை .. அக்கா போற இடத்துல சந்தோஷமா இருக்கணும்.. விலைவாசி ஏர்ற மாதிரி .. திடீர்னு நகையை ஏத்தறவங்களாசெல்வியை நல்லா வைச்சிப்பாங்க...?" மகேஷ் கோபமாய் கத்தினான்.
ருக்மணிக்கு அழுகையாய் வந்தது,..." கடவுளே என் பொண்ணுக்கு நல்ல வழி காமிக்க மாட்டியா...? என்னங்க.. நீங்களும்தான் உங்க பிடிவாதத்தை விட்டுட்டு கதிரு கிட்ட பேசி பார்க்க வேண்டியதுதானே...?"
" என்னால முடியாது.. ஒரு முறை கேட்டதுக்கே யோசனையில்லைன்னு
சொல்லிட்டான். செல்வியை கட்டி குடுக்க கதியில்லாமதான் மாமா நம்ம தலையில கட்ட பார்க்கறாருன்னு அவன் நினைக்கனுமா...? தலையெழுத்து பிரகாரம் நடக்கட்டும்.
செல்விக்கு இரவெல்லாம் தூக்கமே வரவில்லை.. ஸ்கூலில் சிலர் ' ஏ செல்வி நீயே எவனையாவது பார்த்து கட்டிகிடு... இப்படியே ஒண்ணு ஒண்ணா பார்த்திட்டிருந்தா நீ அவ்வையாராகி விட வேண்டியதுதான். கிண்டல் வார்த்தைகள் நெருஞ்சிமுள்ளாய் குத்த தூக்க மாத்திரைகளை விழுங்கி விட்டாள். செல்வியின் மொபைல் ரொம்ப நேரம் அடித்து கொண்டிருக்கவேதான் ருக்மணி எட்டி பார்த்து கூச்சல்போட்டு ஆஸ்பிட்டலில் சேர்த்தார்கள்.
துவண்டு போன கொடியாய் இருந்த செல்வி கண் விழித்ததும், கதிர் கலங்கின குரலில் பேசினான்," செல்வி ஏன் இப்படி செஞ்சே..? உன்னை பிடிக்கலைன்னாசொன்னேன்..? உன் அத்தை என் தலையில் குடும்ப சுமையை தூக்கி வச்சிட்டுபோனபிறகு என்னை பத்தி யோசிக்கவே இல்லை. ஜானகி, மலர் இரண்டுபேருக்கும் கல்யாணம் பண்ணனும். முரளியையாவது படிக்க வைக்கனும்.இதெல்லாம் முடியறதுக்குள்ள எனக்கு வயசாயிடும்.. நீயாவது நல்லா இருக்கணும்னுதான் மனசை தள்ளி வச்சிட்டு , வெளியில பார்க்க சொல்லி மாமா கிட்ட சொன்னேன். இவ்வளவு தூரம் ஆகிட்ட பிறகு வெளிப்படையாவே கேட்கிறேன், " செல்வி நீயும் என் கஷ்டத்தில பங்கெடுத்துக்குவியா...?"
செல்வி மெல்ல தனது கைகளை நீட்டி கதிரின் கைகளை பற்றிக்கொண்டாள்.கண்ணீரையே மாலையாக்கி கோர்த்துக்கொண்டு அன்பை பரிமாறிக்கொண்டார்கள்.
கதிர் இப்போது புன்னகை மாறாமல்.. " அப்புறம் என்ன மாமா.. அடுத்த முகூர்த்ததேதி எப்பன்னு பார்க்க வேண்டியதுதானே..? என்றான்.

(30-1-2011 தினதந்தி- குடும்ப மலரில் வந்தது)