Saturday 18 August 2012

சிறுகதை:                   
“காலம் மாறும்…! “


“ பாஸ்கர் நான் ஊர் பக்கம் போயிருந்தேன்  உங்க அம்மாவால முன்ன மாதிரி வேலை செய்ய முடியல நீதான் இங்க வசதியா இருக்கியே அழைச்சிட்டு வந்திடாலாமில்ல?
சரவணன் கேட்டதும் சுருக்கென்று வந்தது, “ நானென்ன அம்மாவை பார்த்துக்க மாட்டேன்னா சொன்னேன்.. அவங்க வீம்பா கிராமத்த விட்டு வரமாட்டேன்னு சொன்னாங்கன்னா நான் என்ன பண்ண முடியும்..? “
“என்னவோ போப்பா உன்னை கஷ்ட பட்டு படிக்க வச்சிட்டு இப்பவும் அங்க திண்ணை பள்ளிக்கூடம் நடத்திகிட்டு யாராச்சும் குடுக்கிற சாப்பாட்டை சாப்பிட்டுட்டு இருக்கா உசிரோட இருக்கிறப்ப கவனிக்காம அப்புறம் வருத்தப்பட்டு என்ன பிரயோஜனம்..? “
அம்மா மேல் கோபமாக வந்தது எவனாவது ஊர்க் காரன் கண்ணில் பட்டால் போதும் இதே கேள்வி  நானென்ன அத்தனை கல் நெஞ்சக்காரனா? என்னை படிக்க வைப்பதற்காக அவள் பட்ட சிரமம் கொஞ்ச நஞ்சமில்லை.. மருத்துவ படிப்பு முடித்து இங்கு பிராக்டிஸ் ஆரம்பித்த போதே அம்மாவை  இங்கேயே வந்துவிடும்படி அழைத்தால் பிடிவாதம் பிடித்து என்னையும்  கிராமத்திலேயே ஆஸ்பத்திரி வைக்க சொன்னாள். இத்தனை கஷ்டப் பட்டு படித்து விட்டு அந்த ஊரில் வைத்தால் என் பிழைப்பு என்னாவது? இங்கே  கிளினிக்கில்  நல்ல வருமானம். உடன் படித்த   அர்ச்சனாவுடன் காதல் கல்யாணம்.. வாழ்க்கை சொகுசுக்கு குறைவில்லை . அம்மாவை  நினைத்தால்தான் மனம் சஞ்சலமாகிவிடும், மாதம் பணம் அனுப்புவதை கூட ஏற்க மறுத்துவிட்டாள்.
இந்த முறை அவனே நேரில் சென்று அம்மாவை வலுக்கட்டாயமாய் அழைத்து வந்து விட வேண்டும் என்று கிளம்பினான். புழுதி படர்ந்த அந்த மண் சாலையை கிழித்துக் கொண்டு கார் அந்த ஊருக்குள்   நுழைய.. ஏதோ உலகை அதிசயத்தை பார்த்த மாதிரி “ காரு வருதுடா டோய்..” கிழிந்த ட்ரவுஸர்களுடன்  ஏழெட்டு பிள்ளைகள் ஓடி வந்தனர். பிசாசுகள் குளித்து எத்தனை நாளாயிற்றோ இந்த கிராமம் நூறு வருஷம் ஆனாலும் மாறப் போறதில்லை.  அவன் வளர்ந்த தெரு அப்படியேதான் இருந்தது கை பம்பு பக்கத்தில் சாக்கடை ஓடிக்கொண்டு, ஓலை குடிசைகளும் அவரை பந்தல் போன்ற ஓட்டு வீடுகளும். அவன் வீட்டு முன் காரை    நிறுத்தினான்.
நைந்த உடையில் சின்ன சின்ன பிள்ளைகள் அம்மாவை சுற்றிலும் உட்கார்ந்து படித்து கொண்டிருந்தன. “ ஊக்கமது கைவிடேல்” எங்கே சொல்லுங்க என்றதும் கோரஸாக கத்தின.அம்மாவின்  அப்பா அந்த காலத்தில்  ட்ரெயின்ங்   எடுக்காமல் பள்ளிக்கூட வாத்தியாராக இருந்தவர். அம்மாவை நாலெழுத்து படிக்க வைத்து மிலிட்டிரிக்கார  மாப்பிள்ளைக்கு கட்டி தந்தாராம்.  பாஸ்கர்  இரண்டு வயதாக இருந்த போது எல்லை பாதுகாப்பில் இருந்த அப்பா அங்கு  நடந்த கலவரத்தில் கொல்லப்பட்டார் என்று அம்மா சொல்லித்தான் அவனுக்கு தெரிந்தது. எப்படியாவது இவனை நன்றாக படிக்க வைத்து இந்த ஊருக்கு நல்லது செய்ய வேண்டும்  என்று பாடுபட்டாள்.
“ அம்மா “ என்றதும், தலை நிமிர்ந்தவள்  “அடடே  பாஸ்கர் என்னப்பா திடீர்னு வா உட்காரு” துரு பிடித்த அந்த இரும்பு சேரை இழுத்து போட்டாள். பாஸ்கருக்கு எங்கே தன் உடைகள் அழுக்காகி விடுமோ என்று யோசித்து கர்ச்சீப்பால் துடைத்து விட்டு உட்கார்ந்தான். அதற்குள் அக்கம் பக்கத்திலிருந்து சூழ்ந்து கொண்டனர், “ தம்பி எப்படிப்பா இருக்கே? பொண்டாட்டி பிள்ளைகள் எல்லாம் சௌக்யமா? ஏ செல்வி டாக்டரு தம்பிக்கு போய் காபி போட்டு கொண்டா கருப்பட்டி கலக்காத சர்க்கரை போட்டு திக்கா எடுத்துனு வா. அம்மா பானையிலிருந்த தண்ணியை மொண்டு கொடுத்தாள். “ இருக்கட்டும்மா  நீ உட்காரு என்று கையில் வைத்திருந்த மினரல் வாட்டரை இரண்டு மடக்கு குடித்தான்.
“லச்சுமி உன் மகன் பட்டணதுக்கு போய் இன்னும் சிவந்து இல்ல போயிருக்கான்..” ஆளாளுக்கு அவன் தோற்றத்தை வியப்பாக பார்த்து கொண்டிருந்தார்கள். அவர்களின் வியர்வை அவனுக்கு அருவெறுப்பாக இருந்தது.
“ அம்மா உனக்கென்ன தலையெழுத்தா ? நான் இவ்வளவு தூரம் வளர்ந்தும் இங்க இருந்து ஏன் கஷ்டப்பட்டுட்டு இருக்கே..? அங்க வந்திடு ராணி மாதிரி இருக்கலாம். வசதி இருக்கும் போது அனுபவிக்கனும் . இந்த ஓட்டை ஒடைசல் சாமான்களை  இங்கேயே போட்டுடு.. இப்படியே புறப்பட்டு வா.. போறச்சே நல்லதா துணிங்க வாங்கிக்கலாம். இந்த மூணு மணி நேரத்தில நான் அங்க இருந்திருந்தா  எவ்வளவு சம்பாதிச்சிருப்பேன் தெரியுமா? டைம் வேஸ்ட் பண்ணாம புறப்படு..”
“ என்னப்பா சொன்ன   இங்கேயே பொறந்து இந்த ஊரே பிடிக்காம போன மாதிரி  இந்த அம்மாவும் ஒரு நாள் உனக்கு பிடிக்காம போகும். இந்த பட்டிக்காட்டு பொம்பளைய ஏந்தான் அழைச்சிட்டு வந்தாய்னு உன் பொண்டாட்டி முகம் சுளிப்பா.  மறுபடியும்  என்னை  எங்க  அனுப்புறதுன்னு தவிப்பே.. அந்த சிரமத்தை உனக்கு நான்  தர விரும்பலை.. இதோ இந்த குட்டி பசங்கள்ல    எதாவது ஒண்ணு படிச்சி வரும்.  அது உன்ன மாதிரி நிழல்ல இளைப்பாறிட்டு மரத்தை வெட்ற புள்ளையா இருக்காது.. நிழலை தந்து கிளைகளை பரப்பும்..  நீ போய் வசதியா இரு.. இந்த அரை மணி நேரத்துல அஞ்சு குறள் சொல்லி தந்திருப்பேன்..  “
அம்மாவின்  வார்த்தைகளிலிருந்த உறுதி அவனை வெட்க பட செய்தது. மௌனமாய் கிளம்பினான்.  “ நன்றி மறப்பது நன்றன்று…”  என்ற குறளுக்கு விளக்கம் சொல்லி கொண்டிருந்தாள் அம்மா.
                                                            *******