Friday 31 August 2012

சிறுகதை:
                         “ ஐய்.. என் பொண்டாட்டி ஊருக்கு போய்ட்டா….! “
    
மதனுக்கு நாளைய பொழுதை நினைக்கும் போதே சிலிர்த்தது. மனசுக்குள் குதூகலம் எட்டிபார்த்தது, ‘ம்..எத்தனை நாள் இதற்காக காத்திருந்தேன்? இப்படி ஒரு சந்தர்ப்பம் வரும்போது மிஸ் பண்ணாம அனுபவிக்கனும்’  இதோடு விட்டுட்டா எப்ப கிடைக்குமோ?
திருமணத்திற்கு முன் எவ்வளவு ஜாலியாக இருந்தேன், இந்த கல்யாணத்துக்கப்புறம் எல்லாம் போச்சி. எமகாதகி விட மாட்டா. காட்டு கத்தலா கத்தி என் மானத்தை வாங்கிடுவா. பிள்ளைங்க ரெண்டு பெத்தாச்சு அதுங்க உங்களை பார்த்து கெட்டழியனுமான்னு.. ரகளை பண்ணிடுவா.
            பாரதியாம்.. பாரதி மீசை வைக்காத பாரதின்னு நினைப்பு. என்னா ரூல்ஸ் பேசுவா. அவ அம்மாவுக்கு உடம்பு சரியில்லையாம். நான் மட்டும் பசங்களோடு போய் பார்த்துட்டு வந்துடறேன்னு ஒரு வழியா கிளம்பினா. நல்ல வேளை என்னை கம்பெல் பண்ணி கூப்பிடலை ஒருவேளை அழகான ஷாலு கூட காரணமாயிருக்கலாம். அதான் என் மச்சினி .   நிம்மதியா போச்சு.. நான் எதிர் பார்த்த சந்தர்ப்பத்தை அவளே ஏற்படுத்தி கொடுத்துட்டா.
யாரும் வந்து காரியத்தை கெடுத்து விடக் கூடாதுன்னு மனசுக்குள்ள பிளான் போட்டேன்.    பேப்பர்காரனுக்கு, பால்காரனுக்கு போன் பண்ணி நாளை வர வேண்டாம் என்றேன்.  நாளை விடியும் போது நான் மட்டும் இருப்பது தெரிந்து பக்கத்து வீட்டு ரிடையர்டு கேஸ்.. ராகவன் ஸார் வந்து தொலைத்தால்.. லொட லொடன்னு பேசிகிட்டு   நான் ஏங்கிகிட்டிருக்க விஷயம் அதோ கதிதான். வெளி பக்கமாக யாருமில்லாதது மாதிரி பூட்டு போட்டேன்.  கேட் வழியே பார்த்தால் என் செருப்பு காட்டி கொடுத்து விடுமோ என்று சாமர்த்தியமாக  ஒரு ஓரமாய் பதுக்கினேன். எல்லா ஜன்னலையும் சாத்திவிட்டு ஸ்கீரின் போட்டேன். வெளிச்சம் வேண்டாம்னுதான். போர்வையை இழுத்து போர்த்திக் கொண்டேன் ‘அப்பாடா இப்பதான் நிம்மதியா ஆச்சு  நாளை ஒரு ஞாயித்துக்கிழமையாவது காலையில பதினொரு மணி வரைக்கும் தூங்க போகிறேன்’.பாரதி இருந்தா விடமாட்டா.. படிக்கிற பிள்ளைங்க உங்களை பார்த்து கத்துக்காதான்னு  கத்தி அலாரத்தை விட ஆறு மடங்கா அலறுவா.  “ நாளைக்கு எப்ப வேணா எழுந்திருப்பேன் எப்ப வேணா சாப்பிடுவேன்டி பாரதி..” ஆஹ்..ஆஹ்ஹா வென்று ஒரு நாள் பேச்சுலரா மனசுக்குள் கொக்கரித்தேன்.