Saturday 25 August 2012

 

நினைத்ததை பரிமாறிக் கொள்வோம்


எழுத்துப் பிழை வார்த்தையின் அர்த்தத்தையே மாற்றி விடுகிறது.  டைப் பண்ணும் போது. சில சமயம் எதோ ஒரு எழுத்து மிஸ் ஆகிவிடும். மெயில் அனுப்பிவிட்ட பிறகுதான் என் கண்ணில் படும். நான் இதற்கு முன் ஒரு  மெயிலில் விஷயத்தை என்று டைப் பண்ணும்போது ‘ ’ வை மிஸ் பண்ணிட்டிருக்கேன். விஷயம் விஷமாகி விட்டது. எதிர் வீடு என்பதற்கு எதிரி வீடு என்றும் ஒரு சமயம். அப்பப்பா அர்த்தம் ஏனப்பா இப்படி மாறுகிறது.எழுத்தை மிஸ் பண்ணும் போதுதான் வார்த்தை, அர்த்தம் மாறிவிடுவதில்லை. குறில்,   நெடில், புள்ளி ஒவ்வொன்றிலும் கவனமாக இருந்துதான் ஆக வேண்டியிருக்கு.  வருக என்பதில் ‘ வ ‘  விற்கு கால் போட்டுவிட்டால் அது யாரையாவது வார சொல்லி காலை வாரி விட்டிரும்.  ( தப்பு பண்ணிட்டு இதுல துணைப்பாடம் வேறவா..என்று என் மனசு முணு முணுக்கிறது)
பேசுவதை விட எழுத்திற்கு ரொம்ப பவர்புல்ங்க… பேசும் போது ஒரு நல்ல சிந்தனையை சொல்லனும்னா கூட பேச்சாளர் சுவாரஸ்யமா மக்களை தம் பக்கம் இழுத்தால் தான் அது மக்கள் கிட்ட போய் சேரும். இதை  இளைய ராஜா கூட அவருடைய அனுபவங்கள்ல சொல்லியிருக்காரு. ஒரு முறை அவர் அண்ணன் பாவலர் வரதராஜனுக்கு பதில் இளையராஜாவும், அவருடைய மற்றொரு அண்ணன் பாஸ்கர் அவர்களும் ஒரு மேடையில்  தேர்தல் பேச்சுக்காக பாடல் பாடி பேச  போயிருக்கிறார்கள். பாவலர் வணக்கம் என்று சொல்லும் போது கிடைக்கும் கை தட்டல் கூட  நிகழ்ச்சி முடிந்து கடைசி வரை  இவர்களுக்கு கிடைக்கவில்லையாம். ஆனா எழுத்து  நாம எப்படி எழுதுகிறோமோ அப்படி வசியம் பண்ணிடுங்க. கோபம், வீரம், தத்துவம்.. அன்பு.. நம்பிக்கை … நகைச்சுவை  இப்படி பேனாவால எதை வடிச்சாலும் படிக்கறவங்களுக்கு அந்த உணர்வு வருங்க. அதனாலதான் எழுத்துக்கு ரொம்ப பவர்புல் !  நகைச் சுவையை விரும்பாதவங்க யாருமே இருக்கமாட்டாங்க. இந்த சுவை  இல்லாத வாழ்க்கை சப்னு சுவாரஸ்யம் இல்லாம இருக்கும். ஒரு    நாளைக்கு குறைந்த பட்சம் ரெண்டு முறையாவது  சிரிக்கனும். சிரிக்க வைக்கனும். அது கூட இல்லாத சீரியஸ் ஆள் .. ம்ஹும்.. ரொம்ப கஷ்டம் அந்த இடம் சிறை மாதிரிதான் இருக்கும்.
தென் கட்சி கோ.சுவாமி நாதன்  விஷயத்தை சொல்லிட்டு கடைசியில் சிரிக்கிற மாதிரி பண்ணிடுவாரு. அவர் சொன்னதில நான் ரசிச்ச ஓன்று:-
ஒரு எழுத்தாளர் தான்  எழுதி வச்சிட்டிருந்ததை எல்லாம் கொயர் கொயர் பேப்பரா அடுக்கி வச்சிகிட்டு கவலையா இருந்தாராம். அப்ப ஒரு ஆள்  சந்திக்க வந்திருக்கான். இவரை பார்த்து ஏன் இப்படி உம் முனு இருக்கிங்க? ன்னு கேட்டிருக்கான். அதுக்கு எழுத்தாளர் நான் எழுதரதை இந்த ஊடகங்கள் புரிஞ்சுக்கறதேயில்லை. இந்த பதிப்பாளர்களுக்கு   நல்ல எழுத்தை போட தெரியவில்லை.அப்படிதான் ஒரு புகழ்பெற்ற ஆங்கில எழுத்தாளர் வெறுத்து போய் தான் எழுதினதை எல்லாம் பழைய பேப்பர்க்காரனுக்கு போட்டு விட்டாராம். அதுல ஒரு பேப்பர் மளிகை கடையில  பொட்டலம் மடிக்கப்பட்டு  ஒரு ஆள் கையில் கிடைச்சிருக்கு.  அவர் அதுல இருந்த எழுத்தை படிச்சி.. இத்தனை அருமையா எழுதர யார் அவர்…? னு மளிகை கடைக்காரரை விசாரிக்க அவர் பழைய பேப்பர்க் காரரை கை காட்ட மேட்டர் முடிந்தது. மிச்சமிருந்த பேப்பரை எல்லாம் வாங்கி புத்தகம் போட்டாராம். அதற்கப்புறம் அந்த ஆங்கில எழுத்தாளர் ஒஹோன்னு போயிட்டாருங்க என்றார். உடனே சந்திக்க வந்த ஆள் ,  “ கவலைப் படாதீங்க நீங்களும் ஓஹோன்னு ஆயிடுவிங்க அதுக்குதான் நான் இப்ப வந்திருக்கேன் என்றாராம். உடனே எழுத்தாளர் முகம் மலர்த்து , “ அப்படியா நீங்க எந்த பதிப்பகத்துலர்ந்து வந்திருக்கிங்க? “ என்றார். அதற்கு வந்தவர், “  நான் பதிப்பகத்திலர்ந்து வரலை… பழைய பேப்பர் கடையிலிருந்து வந்திருக்கேன்..!”  என்றார்.
அப்படித்தான் ஒரு நாள் கீரை கிள்ளிகிட்டிருந்தேன்,  நேரமாயிச்சுன்னு என் மகளை கூப்பிட்டு கொஞ்சம் கிள்ளிறியாம்மா என்றேன்… அதற்கு அவள் கொஞ்சம் என்ன நிறையவே கிள்றேனே என்று ‘ சுருக் ‘ கென்று  என் கையை கிள்ளிட்டு ஓடிட்டா.   பசங்க விவரமானவங்க   நாமும் முதல்லயே விவரமா சொல்லிட்டாதான் நல்லது.

ஒரு விஷயத்திற்கு வருவோம்  நிறைய பேர் கிட்ட திறமை இருக்கும், ஆனா சில பேர் உயரத்துக்கு போறாங்க… சில பேர் நின்ன இடத்துலயே இருப்பாங்க. இதுல யாரை யார் இடம் மாற வைக்குதுன்னு பார்த்தாக்கா “ உழைப்புதான்..!”  தோல்வியே வந்தாலும், மனசு உடையாத உழைப்பு இருக்க வேண்டும். உலகத்தில சிறந்த நறுமணம் வியர்வையின் வாசம் னு சொல்வாங்க. கஷ்டபட்டு உயரத்துக்கு போனவங்களை பார்த்தா அவங்க அனுபவங்கள்  பிரமிப்பா இருக்கும். ஏன்னா அந்த வலிகள் நமக்கு தெரியாதது. ஒரு வேளை உணவிற்கு கூட தவித்து, வானமே கூரையாக வாழ்ந்து வானத்தை எட்டி பிடிக்கும்    அளவு   உயர்ந்தவர்கள்  இருக்கிறார்கள்.  இப்படி   ஒரு அனுபங்கள் நமக்கு கிடைக்கவில்லையே என்று கூட ஏக்கப்பட்டிருக்கிறேன். கஷ்டபட்டு முன்னுக்கு வந்தவர்கள் என் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கிறார்கள்.  பசி இருந்தால்தான்  தெரியும் ருசி.   நாம் கடவுளிடம் வேண்டுவது,’ உழைக்க தெம்பு’… என்பதாக இருக்கட்டும்.
பேராசைக்கும், வெற்றிக்கும் வித்தியாசம் இருக்கிறது. வெற்றி நாம் ஒன்றின் மேல் ஆசைப் பட்டு அதற்காக உழைத்ததால் கிடைத்த பரிசு! பேராசை குறுகிய காலத்தில் தகுதி இல்லாமலே  தேடிக் கொள்ளும் பொருள். ஸோ.. ஆசைப்படுவோம். ஏணியில் ஏறுவதற்கு முன் நடை வண்டி தள்ளி பழகுவதையும் குறைவாக  நினைக்காமல்.